Saturday, July 25, 2009

பெண்ணியல் நிர்ணயம்

பூக்கள் ரசித்தவள்
அதன் இதழ்கள்
கிழிக்கிறாள்.

இரவு வானம் ரசித்தவள்
அதன் நொடிகளில்
அஞ்சுகிறாள்.

கவிதைகள் ரசித்தவள்
கவிக் காகிதங்கள்
கசக்கி எறிகிறாள்.

வானவில் ரசித்தவள்
வண்ணங்களையே
வெறுக்கிறாள்.

விதியின் நிர்ணயம்
கடமையின் அளவுகோலில்.

பெண்ணியல் நிர்ணயம்
அவள் துணைவனின்
மனக்கோலத்தில்.

பாரங்கள் சுமந்தாலும்
சுரக்கும் பால்தேடும்
மகவுக்காய்
வாழ்க்கை வலிகள்
வணங்குகிறாள்.

ரசனையின் கருப்பொருள்
அவள் கருவின் பொருளில்
கண்டு மலைக்கிறாள்.

விதியின் நிர்ணயம்
கடமையின் அளவுகோலில்.

பெண்ணியல் நிர்ணயம்
தாய்மையின் வரங்களில்.

16 comments:

RATHNESH said...

ஹி . . .ஹி . . . இதுக்கெல்லாம் சேர்த்துத் தானே "நிலாவே, தேனே, மலரே, பளிங்கே" என்றும், "அம்மாவே தெய்வம்; ஆகாய தீபம்" என்றும் சொல்லி ஆண்கள் பரிகாரம் தேடிக் கொள்கிறோம்!

குற்ற உணர்வின்றி எந்த ஆணாலும் படிக்க இயலாத மாதிரி எழுதுவதில் என்ன சந்தோஷம் கிடைக்கிறது உங்களுக்கு?

இந்தக் கவிதையை எப்படிப் பாராட்ட முடியும்? நிலைக்கண்ணாடியை முகத்துக்கு முன் காட்டுபவர்களைப் பாராட்ட வேண்டுமென்றால் முகம் அழகாக இருப்பவர்களுக்கு மட்டும் தானே சாத்தியமாகும்?

ஜெகநாதன் said...

//விதியின் நிர்ணயம்
கடமையின் அளவுகோலில்//
அப்படியா??? புரியலியே?

கோபிநாத் said...

கவிதை நடை நல்லாயிருக்கு. ;)

ஆனா சொல்லவந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள முடியல.

\\பெண்ணியல் நிர்ணயம்
அவள் துணைவனின்
மனக்கோலத்தில்.\\

\\பெண்ணியல் நிர்ணயம்
தாய்மையின் வரங்களில்.\\

இந்த ரெண்டும் மட்டும் தான் நிர்ணயம் பண்ண முடியுமா!!?

வல்லிசிம்ஹன் said...

ஒத்துக் கொள்கிறேன்.
நிர்ணயக்கப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. சிலசமயங்களில் நிர்ணயங்கள்
மாறும்.

AZHAGU KAVITHAI. PASAMALR.

பாச மலர் said...

ரத்னேஷ்

எந்தப் படைப்பும் எந்தக் காலத்துக்கும் பொருத்தமானது...பொதுவானது என்பதில் எப்போதும் உடன்பாடில்லை...

இதில் வந்திருப்பது..ஒரு பெண்ணின் அனுபவம் குறித்துக் கேள்விப்பட்டபோது..அவளைத் திருமணத்துக்கு முன்னும் அறிந்தவள் என்ற முறையில் எனக்கு அந்த நிமிடத்தில் தோன்றிய விஷயம்..

பெண்ணியல் பற்றிச் சொல்லியிருக்கிறேனே தவிர..நியாயபடுத்தவில்லையே..
நிரந்தரப்படுத்தவில்லையே..

பாச மலர் said...

வாங்க ஜெகநாதன்..

அவரவர் கடமையைப் பொறுத்தே அவரவர் தலையெழுத்து அமையும் என்பது என் எண்ணம்..

பாச மலர் said...

வாங்க கோபி...

ரத்னேஷுக்குச் சொன்னதுதான்...

இது நிரந்தரமான கருத்தல்ல....

அடுத்த வாரமே மாறுபடும்..அனுபவங்கள் மாறுபடும்போது..

பாச மலர் said...

வாங்க வல்லி மேடம்...

நிர்ணயங்கள் மாறும்...தேவைக்கேற்ப..
உண்மைதான்..நன்றி மேடம்

வல்லிசிம்ஹன் said...

மலருக்குக் கூட நான் மேடமா:)
அதை விட்டுடலாமே வல்லிமாவாவே இருக்கேனே.

ஜீவி said...

ஆணோ, பெண்ணோ-- இது ஒன்றும் பெரிய விஷயமில்லை; 'சொந்தக் காலில்' ஊன்றி நிற்கும் பொழுது, தன்னைத் தானே நிர்ணயம் செய்ய முடிகிறது; பொருளாதார ரீதியில் பிறர் தயவு தேவைப்படாத அதே வினாடியில் பிறரையும் நிர்ணயக்க முயலுவதில் இரு சாராரும் சளைத்தவர்கள் இல்லை.
இதில் இது தான் வேடிக்கையான வாடிக்கை.

கவிதையை நான் ரொம்பவே ரசித்தேன், பாசமலர்!

பாச மலர் said...

சரி வல்லிமா.

பாச மலர் said...

வேடிக்கையான வாடிக்கைதான் ஜீவி சார்...யாரிடம் ஆளுமை ஓங்குகிறதோ நிர்ணயம் அங்கே தொடங்குகிறது..

கிருத்திகா said...

"பெண்ணியல் நிர்ணயம்
அவள் துணைவனின்
மனக்கோலத்தில்."
உண்மைதான்... உணர்ந்து எழுதப்பட்ட வரிகள்... சிலருக்கு வரமாயும், சிலருக்கு சாபமாகவும்....

அன்புடன் அருணா said...

நல்லா எழுதிருக்கீங்க!!!

பாச மலர் said...

ஆம் கிருத்திகா..அப்படிச் சாபமாய்ப் போன ஒரு பெண்ணின் வாழ்வு பற்றிக் கேள்விப்பட்ட போதுதான் எழுதினேன்..

நன்றி அருணா..

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை பாசமலர்.

//பெண்ணியல் பற்றிச் சொல்லியிருக்கிறேனே தவிர..நியாயபடுத்தவில்லையே..
நிரந்தரப்படுத்தவில்லையே..//

உண்மைதான், விதிவிலக்காய் நாம் கேள்விப் படுபவற்றை வரிகளாய் வடிக்கையில் அவை நிரந்தரமானவை என்கிற பொருள் கொள்ளப் படுவதில் எப்போதும் எனக்கும் உடன்பாடில்லை.

//பெண்ணியல் நிர்ணயம்
தாய்மையின் வரங்களில்.//

அழகு.