Thursday, September 25, 2014

நான் அறிந்த சிலம்பு - 45

புகாரக்காண்டம் - 06. கடல் ஆடு காதை
 
 
விழா முடிந்தபின் மாதவி அலங்காரக்கோலம் பூண்டு கோவலனுடன் கூடியும் ஊடியும் இருத்தல்
 
 
விண்ணவரும் வந்திருந்து
கண்டு களித்திருந்த
இந்திரவிழாவும்
மாதவியின் ஆடலும் கோலமும்
இனிதே நிறைவேறின.
 
 
பலரும் கண்டு மகிழ்ந்திருந்த
தன் ஆடல் அழகை, கோலத்தை
தொடர்ந்தே இராமல்
சடுதியில் முடித்தனள் மாதவி.
 

இதன் காரணமாய்
ஊடல் கொண்டவன் போல்
கோவலன் அவளுடன் பேசுவது தவிர்த்தனன்.
 
 
அவனை மகிழ்வித்து
ஊடல் நீங்க வேண்டி
அலங்காரக் கோலங்கள் பலவும்
புனையலானாள் மாதவி.
 
 
மாதவி நீராடிய முறை
 
 
பத்துவகை மருந்து மணப்பொருட்கள்
ஐந்து வகை நறுமணப் பொருட்கள்
முப்பத்தியிரண்டு வகை நீராடு மணப்பொருட்கள்
இவையனைத்தும் ஊறிய
நறுமண நன்னீரிலே
வாசநெய் பூசிய
மணம் கமழும் கரிய கூந்தல்
நலமே பெற்றிட மஞ்சள் நீராடினாள்.
 
 
கூந்தலுக்குக் கத்தூரி
 
நீராடிய பின்
மண அகிற்புகையால் கூந்தல் உலர்த்தி
ஐந்து பகுதியாய் அதைப் பிரித்துக்
கொழுவிய கத்தூரிக் குழம்பது ஊட்டினாள்.
 
 
கால்விரல் அணிகள்
 
 
செம்பஞ்சுக் குழம்பு பூசிய
அழகிய சிவந்த சிறிய அடிகளில்
நன்மை பொருந்திய மென் விரல்களில்
காலாழி, மகரவாய் மோதிரம், பீலி
அணிந்திட்டாள்.
 
 
பாதத்துக்கான அணிகள்
 
 
காலுக்குப் பொருத்தமான
பரியகம், நூபுரம், பாடகம்,
சதங்கை, அரியகம்
முதலான
அணிகலன்களை அணிந்திட்டாள்.
 
 
தொடை அணி
 
திரள்தொடைப் பகுதியில்
குறங்குசெறி எனும்
அணிகலன் அணிந்திட்டாள்.
 
 
இடை அணி
 
 
அளவில் பெரிய
முத்துகள் முப்பத்தியிரண்டால்
கோவையாகத் தொடுக்கப்பட்ட
விரிசிகை எனும் அணியைத்
தன் இடையை அலங்கரித்த
பூவேலைப்பாடு செய்த
நீலப்பட்டாடையின் மீது
மேகலையென அணிந்திட்டாள்.
 
 
தோள் அணி
 
 
கண்டவர் காமமுற வைக்கும்
அழகிய கண்டிகை எனும்
தூய மணிகள் சேர்த்துக் கோர்த்த
முத்துவளையைத்
தம் தோளுக்கு அணியாய்
அணிந்திட்டாள்.
 
 
அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 74 - 90
 
வல்லமை: 05.11.12 அன்று வெளிவந்தது.

2 comments:

ஜீவி said...

கால இடைவெளி பெரிதாகத் தெரியவில்லை; எடுத்துக் கொண்ட முயற்சியின் துவளாத தொடர்தல் தான் பெரிதாகத் தெரிந்தது.

வழக்கம் போல சிறப்பு. தொடருங்கள்.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ஜீவி....136 வரை வல்லமையில் வந்துவிட்டது..இங்கே எடுத்துப் போடத்தான் சோம்பேறித்தனம்....ஊக்கத்துக்கு மிக்க நன்றி..தினம் ஒரு பகுதியாக இங்கே வெளியிட இருக்கிறேன்...