Monday, September 29, 2014

நான் அறிந்த சிலம்பு - 47

புகார்க்காண்டம் - 06. கடல் ஆடு காதை
 
 
கடற்கரைப் பயணம்
 
 
பகைவரை அச்சப்படவைக்கும்
புகார் நகரதனில்
முழுமதி நாள் அன்று
வைகறையில் கடலாடிக் களிக்கவென
இடம்பிடிக்க வேண்டுமென்று
திரள்திரளாகச் சென்றது மக்கள்கூட்டம்.
 
 
அவர்களைப் போலவே,
தாழை புன்னை
மடல் அவிழ்க்கும் சோலைகளில்
தானும் கடல் விளையாட்டைக்
காண வேண்டுமென்று
கோவலனிடம் வேண்டினள் மாதவி.
 
 
தாமரைப் பொய்கைகளில்
துயிலாழ்ந்திருந்த பறவைகள் விழித்து
வாய் விட்டுக் கூவ,
பொழுது புலர்ந்தது என்று
கோழிச்சேவல்கள் கூவி அறிவிக்க,
சங்குகள் முழங்கிட
விழித்தெழுந்த விடிவெள்ளி
பூமி பரவிய இருளை நீக்கியது.
 
 
அவ்வைகறைப் பொழுதினில்
மாலையணிந்த மார்பன் கோவலனோடு
பேரணிகலன்கள் அணிந்தவளாய்ப்
புறப்பட்டனள் மாதவி கடலாடுதற்கென்று.
 
 
மேகம் போன்ற
வன்கையாளன் கோவலன்
அத்திரி வாகனம் அதனிலும்,
மான்விழி மாதவி
மூடுவண்டி அதனிலும்
ஏறிச் சென்றனர்
கடற்கரைப் பயணமாய்.

 
(அத்திரி - கோவேறுக்கழுதை)
 
 
கோடி மதிப்புப்பெறும்
விற்பனைக் குவியல்களாய்ப் பண்டங்கள்
காணப்பெற்ற வணிகர் வீதியையும்,
மாடங்கள் நிறைந்த
பெரிய கடை வீதிகளையும்,
 

மலர்கள் அணிசெய்த
மாணிக்க விளக்குகளை ஏற்றி,
மலர்களையும் அருகம்புல்லையும்
விளக்குகள் மீது தூவி வழிபட்டிருந்து,
வீதிகளின் இரு புறங்களிலும்
தமது அணிகலன்கள் ஒலித்திட,
திரிந்து சென்ற மங்கலத் தாசியர்
கூட்டத்தைக் கடந்தே சென்றனர்
கோவலனும் மாதவியும்.
 
 
திருமகள் குடிகொண்டிருக்கும்
பட்டினப்பாக்கம் கடந்து,
கடல் வளப் பெருமையால்
சிறந்து விளங்கும்
மருவூர்ப்பாக்கம் கடந்து சென்றனர்
தம் பயணத்தடங்களில்.
 
 
பொருள் ஈட்டவென
மரக்கலங்கள் செலுத்திக்
கடல்கடந்து புலம்பெயர்ந்து வந்த
வணிகர் கூட்டம் தங்கியிருக்கும்
கூல வீதிதனில்,
'இது இன்ன பொருள்' என்று
எழுதி அறிவிக்கப்பட்டிருந்த
மாலைச்சேரிப் பகுதிகளையும்
கடந்தே சென்று
நெய்தல் நிலக் கடற்கரைச் சோலையை
அடைந்திட்டனர்.
 
வல்லமை: 19.11.12 அன்று வெளிவந்தது

Friday, September 26, 2014

நான் அறிந்த சிலம்பு - 46

புகார்க்காண்டம் - 06. கடல் ஆடு காதை
 
 
மாதவியின் அணிகலன்கள்
 
 
முன்கை அணிகள்
 
 
முகப்பில் கட்டிய மாணிக்கக்கற்களுடன்
வயிரங்களும் பதித்துவைத்த
சித்திர வேலைப்பாடமைந்த சூடகம்,
செம்பொன்வளை,
நவமணி வளையாம் பரியகம்
சங்கு வளையாம் வால்வளை
பலவகைப் பவழவளை
ஆகிய அணிகலன்களை
மெல்லிய மயிர்கள் காணப்பெறும்
தன் முன்கைகளில்
பொருத்தமுறவே
மாதவி அணிந்திட்டாள்.
 
 
கைவிரல் அணிகள்
 
 
வாளைமீனின் பிளந்த வாயை ஒத்த
வாயகன்ற முடக்கு வணக்குறு மோதிரம்
செந்நிற ஒளிவீசும் மாணிக்கம் பதித்த
கிளர்மணி மோதிரம்,
சுற்றிலும் ஒளி உமிழும்
வயிரம் சூழ்ந்த மரகதத் தாள்செறி மோதிரம்,
இவ்வகை மோதிரங்களைக்
காந்தள் மலர் போன்ற
தன் விரல்கள் முழுதும் மறையும்படி
மாதவி அணிந்திருந்தாள்.
 
 
கழுத்து அணிகள்
 
 
வீரச்சங்கிலி
நுண்ணியத் தொடர் சங்கிலி
பூணப்படும் சரடு பூண்ஞாண்
புனைவேலைகள் அமைந்த
சவடி, சரப்பளி இவற்றினோடு
முத்தாரம் அதுவும்
அழகிய கழுத்தினில் அணிந்திருந்தாள்.
 
 
பிடரி அணி
 
 
முற்கூறிய சங்கிலிகள் முழுவதையும்
ஒன்றாய் இணைத்துப் பூட்டிய
கொக்கி ஒன்றில் இருந்து
பின்புறமாகச் சரிந்து தொங்கிய,
அழகிய தூயமணிகளால் செய்யப்பட்ட
கோவை அவள் பிடரி மறைத்துக் கிடந்தது.
 
 
காது அணிகள்
 
 
இந்திர நீலக்கற்களுடன்
இடையே பெரிய வயிரங்கள் பதித்த
குதம்பை எனும் அணியை அழகுறத்
தன் இரு காதுகளிலும் அணிந்திருந்தாள்.
 
 
கூந்தல் அணிகள்
 
 
சிறந்த வேலைப்பாடு அமைந்த
செழுநீர், வலம்புரிச்சங்கு,
தொய்யகம், புல்லகம் இவற்றைத்
 
தன் கருத்து நீண்ட கூந்தலில்
அழகுற அணிந்திருந்தாள்.
 
 
அணிகள் பலவும் கொண்டு
அழகுக்கு அணிசேர்த்த மாதவி,
கோவலனுடன் ஊடியும் கூடியும்
மகிழ்வதற்கென்றே அமைக்கப்பட்டிருந்த
பள்ளியறையில் இன்புற வீற்றிருந்தாள்.
 
அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 91 -110
 
வல்லமை: 12.11.12 அன்று வெளிவந்தது
 

Thursday, September 25, 2014

நான் அறிந்த சிலம்பு - 45

புகாரக்காண்டம் - 06. கடல் ஆடு காதை
 
 
விழா முடிந்தபின் மாதவி அலங்காரக்கோலம் பூண்டு கோவலனுடன் கூடியும் ஊடியும் இருத்தல்
 
 
விண்ணவரும் வந்திருந்து
கண்டு களித்திருந்த
இந்திரவிழாவும்
மாதவியின் ஆடலும் கோலமும்
இனிதே நிறைவேறின.
 
 
பலரும் கண்டு மகிழ்ந்திருந்த
தன் ஆடல் அழகை, கோலத்தை
தொடர்ந்தே இராமல்
சடுதியில் முடித்தனள் மாதவி.
 

இதன் காரணமாய்
ஊடல் கொண்டவன் போல்
கோவலன் அவளுடன் பேசுவது தவிர்த்தனன்.
 
 
அவனை மகிழ்வித்து
ஊடல் நீங்க வேண்டி
அலங்காரக் கோலங்கள் பலவும்
புனையலானாள் மாதவி.
 
 
மாதவி நீராடிய முறை
 
 
பத்துவகை மருந்து மணப்பொருட்கள்
ஐந்து வகை நறுமணப் பொருட்கள்
முப்பத்தியிரண்டு வகை நீராடு மணப்பொருட்கள்
இவையனைத்தும் ஊறிய
நறுமண நன்னீரிலே
வாசநெய் பூசிய
மணம் கமழும் கரிய கூந்தல்
நலமே பெற்றிட மஞ்சள் நீராடினாள்.
 
 
கூந்தலுக்குக் கத்தூரி
 
நீராடிய பின்
மண அகிற்புகையால் கூந்தல் உலர்த்தி
ஐந்து பகுதியாய் அதைப் பிரித்துக்
கொழுவிய கத்தூரிக் குழம்பது ஊட்டினாள்.
 
 
கால்விரல் அணிகள்
 
 
செம்பஞ்சுக் குழம்பு பூசிய
அழகிய சிவந்த சிறிய அடிகளில்
நன்மை பொருந்திய மென் விரல்களில்
காலாழி, மகரவாய் மோதிரம், பீலி
அணிந்திட்டாள்.
 
 
பாதத்துக்கான அணிகள்
 
 
காலுக்குப் பொருத்தமான
பரியகம், நூபுரம், பாடகம்,
சதங்கை, அரியகம்
முதலான
அணிகலன்களை அணிந்திட்டாள்.
 
 
தொடை அணி
 
திரள்தொடைப் பகுதியில்
குறங்குசெறி எனும்
அணிகலன் அணிந்திட்டாள்.
 
 
இடை அணி
 
 
அளவில் பெரிய
முத்துகள் முப்பத்தியிரண்டால்
கோவையாகத் தொடுக்கப்பட்ட
விரிசிகை எனும் அணியைத்
தன் இடையை அலங்கரித்த
பூவேலைப்பாடு செய்த
நீலப்பட்டாடையின் மீது
மேகலையென அணிந்திட்டாள்.
 
 
தோள் அணி
 
 
கண்டவர் காமமுற வைக்கும்
அழகிய கண்டிகை எனும்
தூய மணிகள் சேர்த்துக் கோர்த்த
முத்துவளையைத்
தம் தோளுக்கு அணியாய்
அணிந்திட்டாள்.
 
 
அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 74 - 90
 
வல்லமை: 05.11.12 அன்று வெளிவந்தது.