Sunday, May 12, 2013

நான் அறிந்த சிலம்பு - 42

புகார்க்காண்டம் - 06. கடல் ஆடு காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 1- 27


காமக் கடவுளுக்கு விஞ்சை வீரன் விழா எடுத்தல்

பெரிய வெள்ளிமலையில் அமைந்திட்ட
அகன்ற பெரிய வித்தியாதரர் நகரினிலே
தேன் ஒழுகும் மலர்கள் செறிந்த
பூம்பொழில் ஒன்று.

ஆங்கே
நீண்ட கரிய கயல்களை ஒத்த
கயல்விழிக் காதலியோடு இணைந்து
விஞ்சை வீரன் ஒருவன்
காம தேவன் அவனுக்கு
விருந்திட்டே விழாக் கொண்டாடினன்.

இந்திர விழா பற்றியும், புகார்க் காட்சிகள் பற்றியும் விஞ்சை வீரன் தன் காதலிக்கு உரைத்தல்

காமவிருந்து முடியும் தருணம்
தன் காதலியிடன்
உரைத்தனன் இங்ஙனம்.

வடபுலத்தில் உறையும் நாம்
காமவேள் விழாவது கொண்டாடி
முடிக்கும் நாள் இன்று.

இதே நாள்
தென்திசையதனில் வளம்கொழிக்கும்
புகார் நகர் தன்னில்
இந்திர விழாவினுக்கென்று
கால் கோள் கொடியேற்றித் தொடங்கும்
முதல் நாள்.

விழாக்கோலம் பூண்டிருக்கும்
புகார் தன்னில்
காணும் காட்சிகள்தான்
என்னென்னே!!.
நாளங்காடிக் காட்சிகள்


மிக்க வேகமுடன்
நெருங்கி வந்து எதிர்த்து நின்ற
அசுரர் பெருங்கூட்டம்
தோற்றோடிப் போனது..
இந்திரன் நகரைக் காவல்புரிந்த
புலியின் வலிமையுடைய
வீரக்கழல் அணிந்த
முசுகுந்தன் அவனிடம்.
.
எனினும்
வஞ்சனை மிகுதியால்
அசுரர் கூட்டம்.
போகிற போக்கில்
ஏவியே சென்றது
முசுகுந்தன் மீது
இருள்கணை ஒன்றினை.

முசுகுந்தன் ஏவலுக்காய்
இந்திரன்விட்டுச்சென்ற
காவல் பூதம்
வஞ்சக இருளை நீக்கியது.

என்றென்றும் முசுகுந்தன்
மெய்க்காவலாகி நிற்கவென்று
இந்திரன் இட்ட கட்டளைப்படி
முசுகுந்தன் அவனுடன்
புகார் நகர் நாளங்காடி தங்கியே
பலிபெற்று வருகிறது.
காவல் பூதமது.
.

இத்தகைய சிறப்புப் பொருந்திய
நாளங்காடிக் காட்சிகளை
நாம் காண்போம்.

ஐவகைமன்றக் காட்சிகள்

முன்பு அசுரரால் வந்த
இடரது போக்கியே
அமராவதி நகரைக் காத்தமையால்
மகிச்சியுற்ற இந்திரனால்
கைம்மாறாய் அளிக்கப்பட்டு
சோழ மரபினரால் கொண்டுவரப்பட்டு


என்றும் பொய்க்காமல் நிலைபெற்ற
தனித்தன்மையுடன் அழகுடன்
புகார்நகரில் இலங்குகின்றது
ஐவகை மன்றம்.
 
 
அம்மன்றத்தின் சிறப்பினைக்கண்டு
நாம் மகிழ்வோம்.

உருப்பசி /ஊர்வசி வழித்தோன்றலாகிய மாதவியின் ஆடல் காட்சிகள்

அன்றொரு நாள்
இந்திரன் அவையில்
அகத்தியரை வரவேற்க
நாரத முனிவன்
இசையின்பம் சிறக்கப்
பாடும் பாடலும்,
தோரிய மடந்தையர் பாடிய
வாரப் பாடலும்
ஆயிரம் கண்ணுடைய இந்திரன்
செவியை நிறைத்து நின்றிருக்க...

சயந்தன் நினைவில் மயங்கியபடி
நடனமாடிய உருப்பசியின்
குறை பொருந்திய நடன நாடகம்
இந்திரன் செவியை நிறைக்கவில்லை...


இதே காரணத்தால்
பிற வாத்திய இசைகளும்
தளர்ந்தேதான் போய் நிற்க..

அகத்தியர் தாமும்
சாபமிட்டார் இங்ஙனம்
வீணை மங்கலமிழப்பதாக.
இவள் மண்ணுலகில் பிறப்பாளாக

சாபமதன்படி உருப்பசி
மாதவியென்று பிறந்தனள்
கணிகையர் குலத்தில்.


உருப்பசி மாதவியாக....
அவ்வழித்தோன்றலில் வந்த
பாம்பு போன்ற அல்குல் உடையவள்
இன்னுமொரு மாதவி.

அவள் தம் சிறப்பு நடனக்காட்சிகளும்
நாம் காண்போம்.

சிவந்த இதழ்களும்
உடுக்கை போன்ற இடையும்
உடையவளே!


புகார்நகரில் பூசைகொள்ளும்
அமரர் தலைவன்
இந்திரனை நாமும் வணங்குவோம்..
என்றனன் தன் காதலியிடம்
அவ்விஞ்சை வீரன்.
 
வல்லமை 15.10.12 இதழில் வெளிவந்தது.

1 comment:

ஜீவி said...

நவீன இலக்கியம் என்று மார்தட்டிக் கொள்கிறோம்.

நவீனத்துவம்,பின்நவீனத்துவம் என்றெல்லாம் மேனாட்டு இலக்கிய சொற்களை வலிந்து தமிழ்படுத்திப் பெருமை கொள்கிறோம்.

விஞ்சை வீரன் தன் காதலியிடம் நடநத கதை சொல்வது இந்த சிலம்பு காப்பியத்தின் இன்னொரு நாயகியான மாதவியின் வரலாற்றை இந்தக் காப்பியத்திலேயே ஒரு பாத்திரமாக வரும் விஞ்சை வீரன் மூலமாக கதையாகச் சொல்கிறார் அடிகளார்.

எவ்வளவோ நூற்றாண்டுகளுக்கு பின்னதாக இலக்கிய உலகில் அறிமுகப்படுத்தப்பட்டதாக நாம் நம்பிக்கொண்டிருக்கும் சில இலக்கிய கோட்ப்பாடுகளை, உத்திகளை எவ்வளவோ நூற்றாண்டுகளுக்கு முன்னதான தமிழ் இலக்கியத்தில் சர்வ சாதாரணமாக எடுத்தாண்டிருக் கும் அசாதரணமான கதை சொல்லும் திறன் எண்ணி எண்ணி வியக்க வைக்கிறது.