Sunday, December 16, 2012

பாடப்படாத பாடல்

 
மூலம்: Song Unsung, Gitanjali, Selected Poems, Tagore

நான் பாடவந்த ஒரு பாடல்
பாடப்படாமலேயே இருக்கிறது
இன்று வரையில்....

என்னுடையை
இசைக்கருவியின் தந்திகளை
முடுக்கவுமாய் தளர்த்தவுமாய்
என் நாட்களைக் கழிக்கின்றேன்.

இன்னும் மெய்மையான அந்த நேரம்
வந்து வாய்த்தபாடில்லை;
வார்த்தைகளும் சரிவர
அமைக்கப்படவில்லை.

காற்று மட்டும் பெருமூச்சுடன்
கடந்து போகின்றது;
இன்னும் மொட்டுகள் அவிழ்ந்து திறக்கவில்லை.

நான் அவனுடைய முகத்தைப் பார்க்கவில்லை
இன்னும்..
அவன் குரலையும் கூடக் கேட்கவில்லை.

என் வீட்டின் முன் செல்லும் சாலையில்
மென்மையான அவன் காலடி அசைவுகளின்
ஒலி மட்டுமே கேட்டிருக்கிறேன்.

இந்த நீண்ட நாள் முழுவதும்
அவனுக்கான இருக்கையைத்
தரையில் விரிப்பதிலேயே கழிந்துபோய்விட்டது.

ஆனால் ஒளிவிளக்கு இன்னமும் ஏற்றப்படவில்லை;
என்னால் வீட்டுக்குள் வரும்படி
அவனை வரவேற்கவும் இயலவில்லை.

அவனைச் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்
நான் வாழ்கின்றேன்;
ஆனால் அந்தச் சந்திப்பு இதுவரையில்
நிகழவே இல்லை.
 

அதீதம் 14 செப்டம்பர் 2012 இதழில் வெளிவந்தது.

Monday, December 10, 2012

நான் அறிந்த சிலம்பு - 31

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

நாள் அங்காடி பூதத்தை மறக்குல மகளிர் வழிபடுதல்

சிலம்பின் வரிகள் இங்கே: 60-75

இருபெரு வேந்தர்
போர் செய்யும் முனைப்பில்
வந்து தங்கும் பாசறைகளுக்கு
இடைப்பட்ட நிலத்தில் இருக்கும்
இருவர்க்கும் பொதுவாக அமைந்த
போர்க்களம் அது போல
மருவூர்ப்பாக்கம் பட்டினப்பாக்கம்
இடையேயுள்ள நிலப்பரப்பில்தான் இருந்ததுவே
நாள் அங்காடி எனும் கடைத்தெரு.

நெருக்கமாய் நெருங்கி வளர்ந்திருந்த
சோலையதன் மரங்களின் அடிகளைத்
தூணாகக் கொண்டேதான்
அமைக்கப்பட்டிருந்தன கடைகள்.


அக்கடைகளில்தாம் பொருட்களை
விலை பேசி விற்போர் குரலும்
விலை கொடுத்து வாங்குவோர் குரலும்
ஒலித்துக்கொண்டேயிருந்தது
தொய்வின்றித் தொடர்ச்சியாக.
 
முன்னொரு முறை
முசுகுந்தன் என்ற சோழவேந்தன் தானும்
அசுரவதம் செய்ய உதவினன் இந்திரனுக்கு.
அச்செயல்தனைப் பாராட்டும் முகமாய்
புகார் நகரையும் அரசனையும்
காப்பதற்கென்றே வலிமைமிக்க
பூதமொன்றைப் பரிசளித்தனன்
இந்திரன் முசுகுந்த மன்னனுக்கு.

அப்பூதம் தானும்
காவிரிப்பூம்பட்டினத்தின்
நாளங்காடி மருங்கில்
தங்கியே நின்று தக்க காவல் புரிந்தது.

இந்திர விழாவின் தொடக்கத்தில்
அப்பூததுக்குப் பலிகள் இட்டு
வணங்கி வருவது மரபு.
அம்மரபின் அடியொற்றியே
நிகழ்ந்தன பூசைகள் நாளங்காடிதன்னில்.

சித்திரை மாதத்தில்
சித்திரை நட்சத்திரத்தில்
நிறைந்த முழுமதி நாளன்று
நாளங்காடி மருங்கே
திரண்டு வந்தனர் மறக்குல மகளிர்.

"வெற்றிவேல் ஏந்திய முசுகுந்த மன்னனுக்கு
உற்ற துயர் ஒழித்திடுவாயாக"
என்றேதான் வேண்டி இந்திரன் ஆணைப்படி
புகார் நகரக் காவல்பூதத்தின்
கோயில் வாசல் பலிபீடத்தில்
அவரை துவரை புழுங்கிய பண்டங்கள்
எள்ளுருண்டைய் கறிச்சோறு
இவற்றுடன்
பூக்கள் நறும்புகை பொங்கல்
படைத்தேதான் வழிபட்டனர்.

பின் தெய்வம் ஏறி
துணங்கைக்கூத்தராகி, குரவைக்கூத்தராகி
ஆடி மகிழ்ந்து
"எம்பெருநில மன்னவன் அவன்
காத்தருளும் இருநிலமும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
மழையும் வளமும் சுரந்திடுக"
என வாழ்த்துப் பாடியே
அழகிய கோலம்பூண்ட மறக்குல மகளிர்
வல்லமையுடன் ஆரவார ஓசையுடன்
முழங்கியே விழாவது கொண்டாடினர்.
 

வல்லமை 30.07.12 இதழில் வெளிவந்தது.