Wednesday, July 18, 2012

ஞாபகக் குறி ஒன்று எடுத்து வருவாயாக

ஓர் உருதுக்கவிதையின் தமிழாக்கம்

ஞாபகக் குறி ஒன்று எடுத்து வருவாயாக.


உன்னிடம்
இறைஞ்சுகிறேன்.


ஒவ்வொரு பயணத்தின் போதும்
ஞாபகக்குறி ஒன்று
எடுத்து நீ வாருவாயாக.
களைத்துப் போய்விட்ட பாதங்களுடன்
பட்டாம்பூச்சியின் சிறகுகளையும்
எடுத்து நீ வருவாயாக.


உன்னுடனான தோழமை பற்றி
எழுதி வருகின்றேன் ஒரு கதை.
உனக்கு முடியுமானால்
நல்ல வார்த்தை ஒன்றை
எடுத்து நீ வருவாயாக.


நான் நம்புகின்றேன்.
நம் அன்பும் அது தரும் நம்பிக்கையும்
நம்மைக் களைத்து போகவிடாது.
நம்மால் முடியும்.
இந்தக் காதலைப்
புதுப்பித்துக் கொண்டே இருக்க .


தேவதைகளின் மாந்திரீக உலகுக்கு
நீ செல்ல நேரும்போது
நிலவொளிரும் அழகு முகமொன்றால்
நீ கவரப்பட்டால்
அதே போன்றதொரு முகம் செதுக்கி
எடுத்து நீ வருவாயாக.


பயணங்களில் உனக்கிருக்கும்
கட்டுக்கடங்காக் காதல்
உன்னை வீட்டிலிருந்து வெளியே
இழுத்துக் கொண்டுதான் செல்கிறது.


பயணப்பைகளில் சுமந்தே வரும்
தூசியது போலவே
வருத்தப் பட வைத்திடும்
எதையும் திரும்பவும்தான்
கொண்டு நீ வந்திடாதே.


வருத்தங்கள் சுமந்துவர நேரினும்
ஆத்மார்த்தமாகச் சுமந்தேதான்
எடுத்து நீ வருவாயாக


விசித்திரமான வேடிக்கையான
சூழல்கள் தன்னில்
வாழ்ந்துதான் வருகின்றோம்.
உன் பயணமது முடியும் தருணம்
காதலை நீ எழுதி வந்திருந்தால்
நனைந்த கண்களைத்தான்
எடுத்து நீ வருவாயாக.


உருது மொழியில் மூலக்கவிதை:  Noshi Gillani (பாகிஸ்தான் பெண் கவிஞர் )
ஆங்கில மொழிமாற்றம்: Noshi Gillani
ஆங்கில மொழிபெயர்ப்பு: Lavinia Greenlaw (லண்டன்)

அதீதம் மே, 2012 இதழில் வெளிவந்தது.

2 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான மொழியாக்கம், மலர்.

கோமதி அரசு said...

பாசமலர், அழகான மொழிபெயர்ப்பு.
கவிதை மிக நன்றாக இருக்கிறது.