Wednesday, August 24, 2011

தங்க நிமிடங்கள்



காதல் கைகளின்
உயிர் தொடும் ஸ்பரிசம்

குழந்தைக்காய்த் தாய் மார்
பால் சுரக்கும் தருணம்

உலகத்து இயற்கையின்
மொத்த அழகும்
உச்சி முதல் பாதம்வரை
இட்டுச் செல்லும் பட்டு முத்தம்

வாழ்வின் சுகங்கள்
வழித்துத் தரும் வரம்

வாழ்வின் சோகங்கள்
துடைத்து எறியும் தவம்

சத்த யுத்தத்தின் இடையே
மௌன மோன மயான அமைதி....

சுகமோ சுகம்
இதமோ இதம்

குற்றாலச் சாரலில்
நனையும் தங்க நிமிடங்கள்..

Monday, August 1, 2011

கல்மலைச் சுவடுகள்



இல்லறக் கனவுகள்
உன்னோடு மரிக்க
வீட்டு உறவுகள்
என்னோடு வசிக்க

பெண்பிள்ளையை உன் பெயரில் விளிக்க
கொண்டவளுடன் வாழ்க்கையது நடக்க

நம் காதல் பேசிய இடங்களுக்கு
என் குடும்பத்துடன் போகையில்

சோலைகள் கதை சொல்லிட
கோவில்தூண்கள் கோபம் கொண்டிட
பேருந்து இருக்கைகள் இழப்பை இகழ்ந்திட
திரையரங்குகள் தீண்டல்கள் பேசிட...

அலைமணல் சுவடுகளாய்
அழிந்தே போயின
என்றெண்ணிய நினைவுகள்

மீண்டு வந்தன
மீண்டும் வந்தன
காலத்தால் அழியாத
கல்மலைச் சுவடுகளாய்..

'நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்'
என்றவளே!

இச்சுவடுகள்
மீட்டெடுத்த சுமைகள்
யாரிடம் பேசுவேன்?

உனக்கென்று ஒரு கணவன்
எனக்கென்று ஒரு மனைவி
என்றான பின்..

நீ அன்று
பேச நினைத்ததைப்
பேச முடியாதவன்..
நீ இன்று
பேசாதது கூடப்
பேசுகின்றேன்..

எங்கேயோ இருக்கும்
நீயும் கூட
நான் பேசுவதைத்தான்
நினைக்கின்றாயோ?

குறளின் குரல் - 31

பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 21. தீவினையச்சம்
குறள் எண்: 208

தீயவை செய்தார் கெடுத னிழறன்னை
வீயா தடியுறைந் தற்று.

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்து அற்று.

விளக்கம்:

தீய செயல்களைச் செய்தவர் அதன் விளைவுகளில் இருந்து தப்பிக்க இயலாது. ஒருவன் மேற்கொண்ட தீய செயல்களால், அவனுக்கு நேரவிருக்கும் துன்பங்களில் இருந்து அவன் தப்பிக்கவே இயலாது.

இது எத்தகையது என்றால், ஒருவன் தன் நிழல் அவன் பாதங்களின் கீழேயே எப்போதும் தங்கும் தன்மையுடையது. அப்படி அவன் பாதங்களின் கீழ் உறையும் நிழல், சமயம் வரும்போதெல்லாம் தவறாமல் வெளிப்பட்டே தீரும்.

நிழல் பாதத்தின் அடியே மறையாது தங்கியிருப்பது போல, தீய செயலால் வரும் துன்பங்களும் விலகாது கூடவே வரும். சமயம் வரும்போது வெளிப்படும் நிழல் போல, தக்க சமயத்தில் தவிர்க்க முடியாத துன்பங்கள் தவறாமல் வந்து சேரும்.

வீயாது - தவறாது, விலகாது, விடாது
---------------------

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 61. மடியின்மை
குறள் எண்: 604

குடிமடிந்து குற்றம் பெருகு மடிமடிந்து
மாண்ட வுஞற்றி லவர்க்கு.


குடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து
மாண்ட உஞற்று இல் அவர்க்கு.

விளக்கம்:

சோம்பலில் திளைத்து மூழ்குவதால், ஒருவர் வாழ்க்கையில் முயற்சி செய்யும் தன்மை குன்றிப் போகும். இதனால் சிறப்பு / மாட்சிமை தரக்கூடிய உழைப்பினையும் ஒருவர் கைவிட நேரிடும். இந்த நிலையில், அவர் குடியும் அழிந்து போகும்; குற்றங்களும் பெருகிப்போகும்.

மடி - சோம்பல்
மாண்ட - மாட்சிமை பொருந்திய, இறந்த
உஞற்று - முயற்சி, ஊக்கம், வழக்கு, தூண்டு, தவறு, முயற்சி செய்
---------------------
பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 10. இனியவை கூறல்
குறள் எண்: 92

அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந்
தின்சொல னாகப் பெறின்.


அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

விளக்கம்:

மனம் மகிழ்ந்து ஒருவருக்குப் பொருளை ஈவது நல்லதா? முகம் மலர்ந்து ஒருவரிடம் இன்சொல் பேசுவது நல்லதா?

பிறர்க்கு ஈவது என்பது தம்மிடம் இருக்கும் பொருளின் அளவைப் பொறுத்தே அமையக் கூடிய ஒரு சிறப்பாகும். பொருளின் இருப்பைப் பொறுத்து ஈயும் தன்மை மற்றும் அளவு, சூழலுக்கேற்றாற் போல மாறக் கூடும்.

ஆனால், இன்சொல் என்பது எப்போதும் ஒருவரிடம் இயல்பாய் இருக்க வேண்டிய தன்மையாகும். இது எந்த நிலையிலும் மாறாத இயல்புடன் விளங்கும். எப்போதும் குன்றி விடாமல், இன்சொல் பேசும் தன்மை நிறைந்து இருக்கும்படி பார்த்துக் கொள்வது சிறப்பு.
எனவே இன்சொல் பேசுவது, ஈவதைக் காட்டிலும் சிறந்ததாகும்.
--------------------
பால்: இன்பத்துப்பால்

இயல்: கற்பியல்
அதிகாரம்: 126. நிறையழிதல்
குறள் எண்: 1256

செற்றவர் பின்சேறல் வேண்டி யளித்தரோ
வெற்றென்னை யுற்ற துயர்.


செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்து அரோ
எற்று என்னை உற்ற துயர்?

விளக்கம்:

என் மனதுக்கு நெருக்கமானவர் என்னை பிரிந்து சென்ற பின்னும், அவர் பின் செல்ல விரும்புகிறது என் நெஞ்சம். என்னை வாட்டுகிறது இந்தப் பிரிவுத் துயர். இந்தத் துயரம் எத்தன்மையது? அந்தோ! மிகக் கொடியது. இரங்கத்தக்கது.

நிறையழிதல் - மனதின் இரகசியம் மறைத்து அலை பாயும் மனதை ஒரு நிலைப்படுத்துவது நிறை; பிரிவாற்றாமையால் மனதை நிலைப்படுத்தமுடியாமல், வெளிப்படையாகப் பேசுவது நிறையழிதல்.

எற்று - எத்தன்மையது
அரோ - அசைச்சொல்
சேறல் - செல்லுதல்
செற்று - நெருக்கம்; செற்றவர் - நெருங்கியவர்
----------------------------
பால்: அறத்துப்பால்

இயல்: ஊழ் இயல்
அதிகாரம்: 36. ஊழ்
குறள் எண்: 376

பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
சொரியினும் போகா, தம.


பரியினும் ஆகாவாம், பால் அல்ல; உய்த்துச்
சொரியினும் போகா தம.

விளக்கம்:

ஒருவன் தனக்கு உரிமையில்லாதவற்றை எவ்வளவுதான் போற்றிப் பாதுகாத்தாலும், ஊழ் / விதி என்பதன் காரணமாக, அப்பொருள் அவனிடம் தங்காமல் போய்விடும். தனக்கு உரிமையானவற்றை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளினாலும், ஊழ் / விதி காரணமாய் அவை உரியவரை நீங்கிப் போகாது.
--------------
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 41. கல்லாமை
குறள் எண்: 407

நுண்மா னுழைபுல மில்லா னெழினல
மண்மாண் புனைபாவை யற்று.


நுண் மான் நுழை புலம் இல்லான் எழில் நலம்
மண் மான் புனை பாவை அற்று.

விளக்கம்:

நுண்மை மற்றும் மாட்சிமை பொருந்திய பல நூல்களை ஆராய்ந்து கற்காதவனின் புறத்தோற்றம் வேண்டுமானால் அழகாக இருக்கக் கூடும். ஆனால் அகத்துக்கு அழகு தரும் கல்வி ஒளி பெறாத அவன், அழகான வண்ணம் தீட்டப்பெற்ற மண் பொம்மைக்கு ஒப்பானவன்.

அழகிய வண்ணங்கள் அணி சேர்த்தாலும், மண் பொம்மைக்கு உயிரோட்டம் வாய்க்காது. அதே போல் கல்வி என்னும் உள்ளொளி இல்லாதவனின் எழிலான புறத்தோற்றமும் ஆளுமை தராது.

நுழை - புத்திநுட்பம், நுண்மை, பலகணி, குகை, துளை, சிறுவழி
புலம் - அறிவு, நூல், வயல், இடம், திக்கு, பொறி, துப்பு, வேதம்
பாவை - பொம்மை, பதுமை, அழகிய உருவம், கருவிழி, பெண், குரவ மலர், நோன்பு வகை, திருப்பாவை திருவெம்பாவை பாடல்கள், இஞ்சிக்கிழங்கு, மதில்