பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 104. உழவு
குறள் எண்: 1034
பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்ப
ரலகுடை நீழ லவர்.
பல குடை நீழலும் தம் குடைக் கீழ்க் காண்பர்
அலகு உடை நீழலவர்.
விளக்கம்:
உழவுத் தொழிலாம் சிறந்த தொழில் செய்து, நெற்பயிரை விளைவித்து உயர்ந்து நிற்கும் கதிர்க்குடையின் கீழ் வாழும் ஈர நெஞ்சுள்ள உழவர் பெருமக்கள், நாடாளும் அரசர் பலரின் வெண்கொற்றக் குடையின் கீழ் தங்கிய உலகத்தின் நிழலையும் கூடத் தம் கதிர்க்குடையின் கீழ்க் காண வல்லவர். உழவனின் ஆட்சிதான் அரசாட்சி செய்யவே வழிவகுத்து, துணைபுரிந்து நிற்கும்.
அரசர்களின் வெண்கொற்றக் குடைகளும் உழவர்களின் கதிர்க்குடைகளிடத்துதான் தஞ்சம் பெற வேண்டும்.
------------
பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 105. நல்குரவு
குறள் எண்: 1048
இன்றும் வருவது கொல்லோ நெருநலுங்
கொன்றது போலு நிரப்பு.
இன்றும் வருவது கொல்லோ-நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.
விளக்கம்:
'நேற்று வந்து என்னைக் கொன்றது போன்றதொரு துன்பத்தைத் தந்த நல்குரவு / வறுமை, இன்றும் என்னை வந்து கொல்லுமோ? அப்படி வந்தால் நான் என்ன செய்வேன்?' என்று எண்ணி ஏழை ஒவ்வொரு நாளும் கலங்கி நிற்பான். வறுமையுற்ற ஏழையை, நாள் ஒவ்வொன்றும் யுகம் ஒன்றாய் மாறித் துன்புறுத்தும்.
----------------------
பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 107. இரவு அச்சம்
குறள் எண்: 1065
தெண்ணீ ரடுபுற்கை யாயினுந் தாடந்த
துண்ணலி னூங்கினிய தில்.
தெள் நீர் அடு புற்கை ஆயினும், தாள் தந்தது
உண்ணலின் ஊங்கு இனியது இல்.
விளக்கம்:
தெளிந்த நீரைப் போலத் தோன்றும் அரிசிக் கஞ்சியே ஆனாலும், தன் உழைப்பு மற்றும் அறநெறியோடு கூடிய முயற்சியால் தான் பெற்றதை உண்பதே இனிமமயானதாகும். அதைவிட இனிமை வாய்ந்தது வேறு எதுவும் இல்லை. பிறரிடம் இரப்பதற்கு அஞ்சி, தம் உழைப்பால் தம் பொருள் ஈட்டுவதே இன்பம்.
---------------------
பால்: இன்பத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 124. உறுப்பு நலனழிதல்
குறள் எண்: 1236
தொடியொடு தோணெகிழ நோவ லவரைக
கொடிய ரெனக்கூற னொந்து.
தொடியொடு தோள் நெகிழ நோவல் - அவரை,
கொடியர்' எனக் கூறல் நொந்து.
விளக்கம்:
தலைவனைப் பிரிந்து நான் வருந்துவதால், என் தோள்கள் மெலிய, வளையல்கள் கழன்று விழுகின்றன. இவ்வாறு நான் வருந்தக்கண்ட தோழியர் அவரைக் 'கொடியவர்' என்று குற்றம் கூறுகின்றனர். அதைக் கேட்டு நான் மனம் நொந்து போகின்றேன். அவரைப் பிரிந்ததால் ஏற்படும் துன்பத்தைவிடத் தோழியர் அவரைப் பழிப்பதுதான் மிகவும் துன்புறுத்துகிறது.
-----------------
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 45. பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்: 449
முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை; மதலை ஆம்
சார்பு இலார்க்கு இல்லை, நிலை.
விளக்கம்:
முதல் போட வழியில்லாத வியாபாரிகளுக்கு, நிலையான ஊதியம் ஈட்டுவதற்கான வழியில்லை. அதுபோலத் தன்னைத் தாங்கிப் பிடித்து, காத்து, துணையாய் இருந்து உதவி செய்யவல்ல பெரியவர்களின் சார்பு / துணை இல்லாதவர்களுக்கு நிலையான வாழ்வும் இல்லை.
வாழ்வில் நிலைபெறுவதும், முன்னேறுவதும் பெரியோர் துணையிருந்தால் எளிதாக நடந்தேறும்.
கட்டடத்தைத் தாங்கும் மதலை / உத்தரம் போன்றதாகும் பெரியோரின் துணை.
--------------------
பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 97. மானம்
குறள் எண்: 963
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டு முயர்வு.
பெருக்கத்து வேண்டும் பணிதல்; சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
விளக்கம்:
செல்வம் பெருகி நிறைந்திருக்கும் காலத்தில், அச்செல்வம் உயர்வைத் தரும். அந்த நேரத்தில், பணிவுடைமைப் பண்போடு நடந்து கொள்ள வேண்டும்.
செல்வம் குறைந்து சுருங்கியிருக்கும் காலத்தில், அந்நிலை தாழ்வை உண்டாக்கும். அந்த நேரத்தில், மானம் இழக்காத உயர்ந்த பெருமித உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.