Monday, February 23, 2009

விஸிட் விஸா

ஷ்..ஷ்..ஷ்...குக்கர் விசில் அடிக்க, 'ஏய் மாலூ குக்கரை
நிறுத்துடி..'குளியலறையில் துணிகளை இயந்திரத்துக்குள் திணித்துக்
கொண்டிருந்த சாந்தி கத்தினாள்.

அடுத்த இரண்டு நொடியில் மீண்டும் 'ஷ்..ஷ்..'இவ என்னிக்கிதான் சொன்ன பேச்சக்கேட்டிருக்கா' முணுமுணுத்தவாறே அடுக்களைக்கு விரைந்து அணைத்தாள். மீண்டும் குளியலறைக்கு விரைய,இப்போது போன்...
இன்னிக்கு என்ன நிம்மதியா ஒரு வேலையை முடிக்க முடியாது போலருக்கே...

'ஹலோ..'

'ஹலோ..வணக்கம் அண்ணி....நா முரளி பேசறேன்..அண்ணன் இருக்காரா...'

'இல்லியே முரளி. ஆபீசுக்குப் போயிட்டார்...மொபைல்ல பேசேன்..'

'முதல்ல அதுக்குதான் அடிச்சேன்..ஆனா எடுக்கவேல்ல...'

'ஏதும் சொல்லணுமா..'

'ஆமா..அம்மா விசாவுக்காகப் பாக்கச் சொல்லிருந்தாருல்ல...விசா கிடைச்சுருச்சு...கொஞ்சம் சொல்லிருங்க..நானும் அப்புறம் பேசறேன்..'
தூக்கிவாரிப்போட்டது அவளுக்கு..அய்யோ..இது வேறயா..'ம்.ம். சரிப்பா..நா சொல்லிர்றேன்..நீ நல்லாருக்கியா..என்னா வீட்டுப் பக்கம் வர்றதே இல்ல..'

'வர்றேன் அண்ணி..நேரம் கிடக்கிறப்ப..அவர்கிட்ட சொல்லிருங்க..வச்சுர்றேன்..'
போனை வைத்தவள் அப்படியே உட்கார்ந்துவிட்டாள். என்ன ஒரு தைரியம் இவருக்கு..என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம..

அவர்கள் வசிப்பது ரியாத்தில்.இருவரும் வேலைக்குப் போகிற அவசரம்தான்..இன்று நாலாவது வியாழன் என்பதால் அவளுக்கு விடுமுறை. பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறாள் சாந்தி. கணவன் மனோகர் ஒரு கணினிப் பொறியாளர். எப்போதும் தலையைப் பிய்க்கிற வேலைதான்..என்ன இருந்தாலும் அவங்கம்மா வருவது சின்ன விஷயமா...இத ஏன் எங்கிட்ட சொல்லாம இருக்கணும்...இங்கே இருக்கிற பரபரப்பில்.. இருக்கிற தலைவலில இது வேறயா..எவ்வளவு செலவாச்சோ...

பிள்ளைகள் படுக்கையறையில் ஒரே சத்தம்...மாலுவுக்கும் பூஜாவுக்கும் சண்டையோ சண்டை...பெரியவள் மாலதி 8வது வகுப்பு..சிறியவள் பூஜா 6ம் வகுப்பு..

ஏ...பரிட்சைக்குப் படிங்களேண்டி...மார்க் குறையட்டும்...கொன்னுர்றேன் ..ஆமா..உங்க முத்துலட்சுமிப் பாட்டி வர்றாங்களாமே..அப்பா ஏதும் சொன்னாரா..'

'ஹை...பாட்டி வர்றாங்களா..ஜாலி..' இருவருக்கும் கொண்டாட்டம்...

'ஆமா..வர்றாங்க...எனக்கு ஒரு வார்த்தை சொன்னாரா உங்கப்பா...'

'மறந்துருப்பார்...இல்லேன்னா சொன்னப்போ நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்கம்மா..'இது மாலு.

'சரி..பாட்டி நம்ம ரூம்ல தங்கட்டும்....' இது பூஜா...

இவளின் அவஸ்தை தெரியாமல் அவர்கள் திட்டமிடத் தொடங்கினார்கள் தங்கள் சண்டையையும் மறந்து...

என்ன இருந்தாலும் ஒரே ரத்தம்..கொண்டாட்டம் வேற இந்தப் பொண்களுக்கு..எனக்குதான் அவஸ்தை..அய்யோ என்றிருந்தது அவளுக்கு...ரியாத் வந்து போன வயதானவர்கள் குறித்த அனுபவங்கள், தோழியரின் கலந்துரையாடல்கள் மனதுக்குள் முண்டியடித்துக் கொண்டு வந்தன..

ஒரு அம்மா சொன்னது...'என்ன ஊருடா இது..அமாவாசைக்குச் சோறு வைக்க ஒரு காக்கா குருவி கண்ல பாக்க முடியுதா...' வெளியே போறதுக்கே பையன் வந்தாதான் முடியும்..இதுல காக்காயாவது குருவியாவது..

இன்னுமொருவர்....என்னமோ போ எப்போ காரை எடுத்தாலும் குறுக்கே ஒரு பூனை போகுது தினம்...'இந்த சாஸ்திரமெல்லாம் இங்கே பாக்க முடியுமா?

அடுத்தவர்...'இங்கே தங்கமெல்லாம்தான் மலிவாச்சே..உன் தங்கைக்கு ஒரு பிஸ்கட் வேணுமாம்..வரும்போது வாங்கிட்டு வரச்
சொன்னா...'என்னமோ பிரிட்டானியா பிஸ்கட்னு நெனப்பு..

இந்தக் கதையெல்லாம் சொன்ன தோழிகள் தங்கள் இடர்களையும் சொல்லத் தவறவில்லை..

'காலேல எந்திரிச்சு எல்லாம் ரெடி பண்ணி வச்சுட்டு வரதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுது...நம்ம மட்டும்னா அட்ஜஸ்ட் பண்னிக்கலாம்..வேளாவேளைக்குப் புதுசாச்சமைக்கணுமாம்..யாருக்கு அதுக்கு நேரமிருக்கு..'இது ஒருத்தி.

'ஃப்ரிட்ஜைப் பாத்தாலே எங்க மாமியாருக்கு அலர்ஜியாருக்குது..ஊர் மாதிரி இங்கே சிக்கன், மீன் எல்லாம் புதுசாவா கிடைக்கும்..வாங்கி ஃப்ரிட்ஜ்லதான் வச்சாகணும்..எங்கத்தைஎன்னாடி செத்ததைச் சாகடிச்சுச் சாப்பிடுறீங்கன்னு கேக்கிறாங்க...மாசம் பொறந்தா அனுப்புற காசு மட்டும்தான் தெரியுது..இங்கே வந்தாதானே நம்ம அவஸ்தை புரியும்..'இது ஒருத்தி.

'புரிஞ்சுற கிரிஞ்சுறப் போகுது...உனக்கு நெனப்புதான்..இங்கே கூரையப் பிச்சுகிட்டுத் தெய்வம் கொடுக்குது..நம்ம ஜாலியா இருக்கிறோம்னு அவங்க நினப்பு தான் பெரிசு..நம்ம கஷ்டமெல்லாம்அவங்களுக்கு எங்க தெரியுது..' இது மற்றொருத்தி.

இதுல அனைத்தும் கலந்த கலவையாச்சே நம்ம அத்தை...இந்த மனுஷனுக்கு ஆனாலும் ரொம்ப அழுத்தம்..மூச்சு விட்டிருப்பாரா..மாமாவைத் தனியா விட்டுட்டு எப்படி வருவாங்கன்னு ஒரு நிமிஷமாச்சும் யோசனை வந்ததா அம்மாக்கும் புள்ளைக்கும்...இந்த விஷயம் அத்தை மாமாவுக்குத் தெரியுமா..மாமாவை விட்டுட்டுத் தனியா வருவாங்களா என்ன..ஏன் வராம..அதான் அவரைத்தனியா விட்டுட்டுத்தானே ஊர் சுத்துறாங்க..இதுல வெளிநாடுன்னா கேக்கவா வேணும்..

மவளே உன் பாடு திண்டாட்டம்தான்..இப்பவே படாத பாடு..இந்த ஆம்பளைங்களுக்கெல்லாம் நமக்கு இல்லாத பெத்த பாசம் எப்படித்தான் பொத்துகிட்டு வருதோ..நம்மையுந்தான் ஊட்டி வளத்தாங்க..இவங்களுக்குன்னு விசேஷமா என்னத்தைத்தான் ஊட்டி வளத்தாங்களோ..என்னமோ என் போறாத காலம்..

வீட்டு வேலைகளில் நேரம் போக..இடையிடையே மனோகருக்கு போன் செய்யத் தவறவில்லை அவள்..அவன் எடுத்தால்தானே..சரி சரி வரட்டும் இன்னிக்கு..கச்சேரிதான்..

மாலை 7.30 மனியளவில் வந்தான் மனோகர்...

வாண்டுகள் ரெண்டும் வானொலியாகினர்...'அப்பா பாட்டி வர்றாங்களாம்..'

'ஆமாடா..முரளி உனக்கும் போன் பண்ணானாமே சாந்தி...அத்தைக்குப் போன் பண்ணி இங்க வர்றதுக்கு ரெடியாகச் சொல்லு...குட்டிங்களா..சகுந்தலாப் பாட்டி வந்தா உங்களுக்குதான் ரொம்ப ஜாலி..'

'என்னப்பா சகுந்தலாப் பாட்டியா வராங்க..அம்மா முத்துப் பாட்டின்னுல்ல சொன்னாங்க...நீங்க அம்மாகிட்ட சொல்லலியாமே..'

'.....தாத்தா போனதுக்கப்புறம் பாட்டி தனியா இருக்காங்கள்ல...பாவம் உங்கம்மா சாந்தி...3 மாசம் விஸிட் விசா எடுத்தாச்சு..இப்போதான் எனக்கு நிம்மதியாருக்கு. பாரேன்..பிள்ளைங்களுக்கு என்ன குஷி..ஆமா..நா சொல்லலியா உங்கிட்ட..ஸாரி....மறந்துட்டேன்..விசா அனுப்பிச்சாச்சு..ஸ்டேம்ப்பிங் ஆக 10 நாளாகும்...அத்தைக்குப் போன் பண்ணிடு..லக்கேஜ்லாம் அதிகம் வேணாம்..வர்ற 15ந் தேதி ராம் வர்றான்..அவன் கூட வந்துரலாம்..' மனோகர் சொல்லிக் கொண்டே போக, சாந்திக்குதான் சொல்ல வார்த்தைகளின்றிப் போனது.

26 comments:

கே.ரவிஷங்கர் said...

சூப்பர். நல்ல ச்ஸ்பென்ஸ் பில்ட் அப்.
நானே எதிர்பார்க்கலா.வாழ்த்துக்கள்.

//சாந்திக்குதான் சொல்ல வார்த்தைகளின்றிப் போனது//

இந்த வரிகளுக்குப் பதிலாக:-

”முகத்தில் அசட்டு களைத் தட்டியது”

இப்னு ஹம்துன் said...

கதையோட்டம் நல்லாருந்துச்சுங்க..

உண்மையச் சொன்னா, ஒரு திருப்பம் இருக்கணுமேன்னு யோசிச்சிட்டே படிச்சனா, இது மாதிரி ஒரு மாற்றத்தை எதிர்பார்த்(திருந்)தது தான்.

அன்புடன் அருணா said...

சூப்பர் கதை.....ரொம்ப நல்லாருக்கு ....
அன்புடன் அருணா

கோபிநாத் said...

அட்டகாசமாக கதை சொல்லியிருக்கிங்க ;)))

கலக்கல் ;)

நாகை சிவா said...

ஊகிக்க முடியாத முடிவு. இருந்த போதிலும் உங்களின் கதையின் நாயகியின் எண்ண ஒட்டடங்கள் மிக அருமை.

அப்படியே பெண்கள் (திருமணமாக சில வருடங்கள் கழித்தவர்கள்) மனதில் உள்ளதை பிடுங்கி போட்டது போல் இருக்கு.

அருமை!

கிருத்திகா said...

கதைல முடிவுல இருக்கற டிவிஸ்ட் நல்லாருக்கு...

அமுதா said...

நன்றாக இருந்தது.

பாச மலர் said...

நன்றி ரவிஷங்கர்...எப்போதும் நல்ல டிப்ஸ் கொடுப்பதற்காக..

பாச மலர் said...

இப்னு ஹம்துன்

நம்ம ஊராச்சே..ஏதோ இருக்கப்போகுதுன்னுஅ அவசியம் கண்டுபுடிச்சிருப்பீங்க..

பாச மலர் said...

நன்றி அருணா, கோபி.

கிருத்திகா..

பாச மலர் said...

சிவா,

எண்ண ஓட்டங்கள்...சொந்தக்கதை..பலரின் கதை..அங்கே இங்கே கேட்ட உண்மைகள்தானே..

பாச மலர் said...

நன்றி அமுதா.

கீதா சாம்பசிவம் said...

பாலராஜன் கீதா மெயிலில் அனுப்பினார் இந்தக் கதையைப் பாசமலர்.

முகத்தில் அறையும் நிதரிசனம்!! வார்த்தைகள் இல்லை, பாராட்ட!

பாச மலர் said...

பாலராஜன் கீதாவுக்கும், உங்களுக்கும் நன்றி கீதா..

கீழை ராஸா said...

கலக்கிட்டீங்க பாசமலர்

ஷாஜி said...

நண்பர் இப்னு ஹம்துன் நேற்று சொன்னார் இந்த மாதிரி நீங்கள் ஒரு கதை எழுதியிருப்பதாக..

இன்று பாலராஜன் கீதா ஐயா மெயில் அனுப்பியிருந்தார்கள்..

வேறு மாதிரி முடிவை எதிர்பார்த்திருந்தேன்.. இந்த திருப்பமான முடிவும் நன்றாக் இருக்கிறது சகோதரி.. பாராட்டுகள்..

ஆனா பாருங்க.. இந்த குடும்பத்தை எனக்கு நல்லாவே தெரியும்.. உங்களுக்குமா? :-)

குமரன் (Kumaran) said...

எனக்கு இந்தக் கதையின் முடிவு இப்படித் தான் இருக்கப் போகுதுன்னு தொடக்கத்திலேயே தெரிஞ்சிருச்சு. 'இந்தப் பசங்களுக்கு எப்படித் தான் இந்தப் பாசமோ'ன்னு சொல்றப்ப உறுதியாயிருச்சு. :-)

ஆனா முரளி ஏன் 'அம்மா'ன்னு சாந்தியோட அம்மாவைச் சொன்னாருன்னு தான் புரியலை. :-)

பாச மலர் said...

நன்றி கீழைராஸா..

பாச மலர் said...

வாங்க ஷாஜி

ஆனா பாருங்க.. இந்த குடும்பத்தை எனக்கு நல்லாவே தெரியும்.. உங்களுக்குமா? :-)

ஆமா...நிஜம்மாவே அந்தக் குடும்பத்தலைவியோட அம்மா வர்றாங்க..அதை வச்சுக் கொஞ்சம் கற்பனை கலந்து....

பாலராஜன் கீதா, இப்னுவுக்கு மீண்டும் நன்றி.

பாச மலர் said...

குமரன்

//ஆனா முரளி ஏன் 'அம்மா'ன்னு சாந்தியோட அம்மாவைச் சொன்னாருன்னு தான் புரியலை. :-)//

பொதுவாக எல்லா வயதனவர்களையும் அம்மா என்று அழைக்கும் வழக்கம்தான் அது..சாந்திக்கு அது தன் அம்மா என்று தோன்றாமல் கணவனின் அம்மா என்று தோன்றியதுதான் முக்கியமான விஷயம் கதையில்..

//'ஆமா..அம்மா விசாவுக்காகப் பாக்கச் சொல்லிருந்தாருல்ல...விசா கிடைச்சுருச்சு//

Divya said...

சான்ஸே இல்லீங்க......அட்டகாசமா இருக்கு உங்க கதையும், அதன் அழகான நடையும்:))

Divya said...

யூகிக்க முடியாத முடிவு:))

உரையாடல் & சாந்தியின் மைன்ட் வாய்ஸ் அனைத்தும் சிம்ப்ளி சூப்பர்ப்!!!

Divya said...

\\இந்த ஆம்பளைங்களுக்கெல்லாம் நமக்கு இல்லாத பெத்த பாசம் எப்படித்தான் பொத்துகிட்டு வருதோ..நம்மையுந்தான் ஊட்டி வளத்தாங்க..இவங்களுக்குன்னு விசேஷமா என்னத்தைத்தான் ஊட்டி வளத்தாங்களோ..\\

ஹா ஹா:))

நச்சுன்னு இருக்கு இந்த வரிகள்;)

பாச மலர் said...

நன்றி திவ்யா..

சுல்தான் said...

அவருடைய அம்மான்னாதான் கோபம். தன்னுடைய அம்மான்னு வந்தா பாசம் பிச்சிகிட்டு போகும், போனாபோகுதுன்னு கொஞ்சம் அவர் மேலேயும். :))
சர்ரியான ஆளுங்கப்பா :))

பாச மலர் said...

ஆமாம் சுல்தான்

சரியான ஆளுங்க தான்...