இயந்திர முலாம் பூசிய செயற்கையான வாழ்க்கைமுறை நடுவில் உறவுகளுக்கு நேரம் ஒதுக்குவது என்பது கூடப் பல சமயங்களில் இயலாமல் போய்விட்ட ஒன்று. 'வாழ்வு முழுவதும் தொடரும் தோழமை' என்ற கூற்று அர்த்தமற்றதாகி
வருகின்றதோ என்ற ஐயம் எழத்தான் செய்கிறது.
'உயிர் காப்பான் தோழன்', 'உடுக்கை இழந்தவன் கை' என்ற வாக்கியங்கள் இலக்கிய அளவில்மட்டும்..ஏட்டுச் சுரைக்காயாக மட்டும்உலவி வருகின்றன. தோள் கொடுக்கும்
தோழமை தோளை மீண்டும் எதிர்பார்க்கிறது. அதில் தவறில்லை என்றாலும் எதிர்பார்ப்பற்ற தன்னலம் கருதாத நட்பு என்பது அரிதாகி வருகிறதோ என்ற உணர்வு.
உறவுகளுக்குள் நட்பு என்பது அடிக்கடி பேசப்படுகின்ற ஒன்று. ஆனால் நட்பு என்ற உறவு? 'உன் நண்பனைக் காட்டு. உன் குணத்தைச் சொல்கிறேன்' என்பார்கள். இப்போது பலருக்கும், குறிப்பாகக் குழந்தைகள் மட்டும் இளைஞர்கள் பலருக்கு அப்படி ஒரு ஆத்மார்த்தமான நட்பைச் சுட்டிக் காட்ட முடியுமா என்பது சந்தேகம்தான். நட்பு வட்டாரம் என்ற ஒன்று இருக்கின்றது..ஒத்த வயதையுடைய நண்பர் கூட்டம் இருக்கிறது..என்றாலும் எங்கேயோ ஏதோ குறைந்து வருகின்றது..
இதற்குக் காரணங்கள் பல: ஒரே இடத்தில் நீண்ட நாள் குடியிருக்கும் வாய்ப்பு இல்லாத நிலைமை, பலவித படிப்பு மற்றும் அலுவல்களால் நட்புக்கு நேரம் ஒதுக்க முடியாத நிலைமை, தொலைக்காட்சி, கணினி போன்ற சாதனங்களின் நட்பு மயக்கம் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
தெரு முனைகளில் தவறாமல் கூடும் நண்பர்கள், கெக்கே பிக்கே என்று ஏதாவது பேசிச் சிரிக்கும் பெண்கள் கூட்டம், குடும்பத்தினரிடம் கூடப் பேச முடியாத பல விஷயங்களைத் தங்களுக்குள் பேசித் தீர்வு, ஆறுதல் காண்கிற மனங்கள் அரிதாகி வருகின்றன.
நாம் அனுபவித்த, இன்னும் கூட அனுபவித்து வருகின்ற நட்பின் அருமை பெருமைகள் பலவற்றை நம் குழந்தைகள் அனுபவிக்கிறார்களா? என்னவென்றே அறியாமல் அவர்கள் தொலைத்த பலவித சந்தோஷங்களுள், உரிமைகளுள் இதுவும் ஒன்று.
காரணங்கள் புரிந்தாலும் காரியமாற்ற முடியாத ஒரு நிலைமையில் தள்ளப்பட்டுதான் நிற்கிறோம்.
Wednesday, May 21, 2008
Subscribe to:
Posts (Atom)