Sunday, June 26, 2011

ஊடலாடல்




மலர மறுத்து
இதழ்களை
இறுக்கி
இழுத்துப் பிடிக்கும்
பூவுக்கும்
புயலின் வேகம்..

மலர மறுக்கும்
இதழ்க் கதவுகளைத்
தட்டித் திறக்க
முட்டி மோதும்
தென்றலுக்கும்
புயலின் வேகம்..

ஆணவங்களுக்குள்
அவசர மோதல்;
அகம்பாவங்களுக்குள்
அளவற்ற அளவளாவல்;

ஊடலாடும் பொழுதுகள்..

கத்தியின்றி
இரத்தமின்றி
சத்தமின்றி
முத்தமின்றி
நடந்தேறும் ஒரு
தற்காலிகத்
தனியுத்தம்;

வென்றவர் தோற்றிட
தோற்றவர் வென்றிட..
அதிசய யுத்தம்;

காதல் உணர்வுகள்
ஊசலாடும் உள்ளங்கள்
ஊடலாடும் பொழுதுகள்
உன்னதமானவை;

வாழ்க்கைப் பூவுக்கு
வாசம் தரும்
சுவாசம் தரும்
காதல் வேர்கள்..

காதல் வேருக்கும்
வாசம் தந்து
ஆழமாய் அழுத்திப்பிடிக்கும்
ஊடல் பூக்கள்..

குறளின் குரல் - 28


பால்: பொருட்பால் 
இயல்: துறவறவியல்
அதிகாரம்:  30. வாய்மை
குறள் எண்: 295

பொய்யாமை யன்ன புகழில்லை யெய்யாமை
யெல்லா வறமும் தரும்.


பொய்யாமை அன்ன புகழ் இல்லை; எய்யாமை,
எல்லா அறமும் தரும்.

விளக்கம்:

பொய்யாமையால் கிடைக்கப்பெறும் புகழுக்கு இணையான புகழ் வேறெதுவும் இல்லை; மிகவும் தன்னை வருத்திக் கொள்ளாமல், இயல்பாக மெய் பேசும் குணம், மற்ற எல்லா அறங்களையும் தேடித் தரும்.

-----------------------

பால்: பொருட்பால் 
இயல்: அரசியல்
அதிகாரம்:   63. இடுக்கணழியாமை
குறள் எண்: 623

இடும்பைக் கிடும்பை படுப்ப ரிடும்பைக்
கிடும்பை படாஅ தவர்.


இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅதவர்.

விளக்கம்:

மிகவும் கடுமையான துன்பம் வருகின்ற போதும், மிகவும் மனவுறுதியுடன் அத்துன்பத்தை எதிர்கொண்டு நிற்பவர், அத்துன்பத்திற்கே துன்பத்தை உண்டாக்குவார்கள்.

துன்பத்துக்கே துன்பம் தருவது மனவலிமை என்று வள்ளுவர் உணர்த்தி நிற்கும் உளவியல் கூறு இது.

இடும்பை - கடுந்துன்பம்

---------------

பால்: அறத்துப்பால் 
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 18. வெஃகாமை
குறள் எண்: 171

நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமு மாங்கே தரும்.


நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி,
குற்றமும் ஆங்கே தரும்.

விளக்கம்:

பிறரது பொருளைக் கவர்ந்து கொள்ள நினைப்பது நடுவு நிலையன்று; இதைக் கவனத்தில் கொள்ளாமல் பிறரது பொருளை ஆசையுடன் கவர்ந்து கொள்ள நினைப்பவனின் குடும்பமும் அழிந்து, பழியும் குற்றமும் வந்து சேரும்.

வெஃகாமை - (பிறர் பொருளுக்கு) ஆசைப்பாடாமல் இருத்தல்
பொன்றி - அழிந்து

--------------------
பால்: இன்பத்துப்பால் 
இயல்: கற்பியல்
அதிகாரம்: 125. நெஞ்சொடு கிளத்தல்
குறள் எண்: 1244

கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத்
தின்னு மவர்க்காண லுற்று.


கண்ணும் கொளச் சேறி - நெஞ்சே! - இவை என்னைத்
தின்னும், அவர் காணல் உற்று!

விளக்கம்:

நெஞ்சே! நீ என்னவரைத் தேடிச் செல்லும்போது என் கண்களையும் கூட்டிக் கொண்டு சென்றுவிடுவாயாக! இல்லையென்றால், அவரைக் காணவேண்டும் என்று கூறி இக்கண்கள் என்னை வதைத்துத் தின்றுவிடும்.

நெஞ்சொடு கிளத்தல் - தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவி, தன் ஆற்றாமையைப் பிறரிடம் சொல்ல வெட்கப்பட்டு, தன் நெஞ்சை முன்னிறுத்தி, அதனுடன் பேசி ஆறுதலடைதல்.

_____________


பால்: பொருட்பால் 
இயல்: அரசியல்
அதிகாரம்: 43. அறிவுடைமை
குறள் எண்: 425

உலகந் தழீஇய தொட்ப மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு.


உலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும்
கூம்பலும் இல்லது - அறிவு.

விளக்கம்:

உலகத்தையே நட்பாக்கிக் கொள்ளுவது நுண்ணறிவுடன் கூடிய சிறந்த செயலாகும். உலகத்துடன் இயைந்து நட்புடன் வாழ்வதே எந்நிலையிலும் சிறப்பு. அந்த நட்பைச் சீராக ஒரே நிலையில் வைத்துக்கொள்வது முக்கியமான ஒன்றாகும். சில பொழுது மிகவும் மனம் மகிழ்ந்து, சில பொழுது மிகவும் தளர்ந்து சோர்ந்து காணப்படும் ஏற்றத்தாழ்வுடன் கூடிய நிலையில்லாமல், நட்பை ஒரே சீரான நிலையில் வைத்துப்போற்றுவது அறிவு.

எந்நிலையிலும் உலகோடு இயைந்து நட்புடன் வாழ்வதும், அந்நட்பினால் ஏற்படும் இன்ப துன்பத்தைச் சமமாகப் பாராட்டுவதும் அறிவு.

ஒட்பம் - மேன்மைநிலை, நுண்ணறிவு

---------------
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 50. இடனறிதல்
குறள் எண்: 500

காலாழ் களரி நரியடுங் கண்ணஞ்சா
வேலாண் முகத்த களிறு.


கால் ஆழ் களரில் நரி அடும், கண் அஞ்சா
வேல் ஆள் முகத்த களிறு.

விளக்கம்:

வேல் ஏந்திய வீரனை நேருக்கு நேர் சந்தித்துச் சற்றும் அஞ்சாமல் தன் தந்தங்களால் குத்திக் கொன்று விடும் யானை; அத்தகைய வீரம் பொருந்திய யானை தன் கால்கள் அமிழும்படியான ஆழமான சேற்று நிலத்தில் அகப்பட்டுக் கொண்டால் சிறு நரி கூட அஞ்சாமல் யானையைக் கொன்றுவிடும்.

எவ்வளவுதான் வலிமையும் வீரமும் பெற்றிருந்தாலும், தமக்குப் பொருந்தாத இடத்திற்குச் செல்லும்போது, தம்மை விட வலிமையில் குறைந்த எளியரிடத்திலும் தோற்க வேண்டிவரும்.

களர் - சேற்று நிலம், உவர் நிலம், களர் நிலம், கூட்டம், கழுத்து, கறுப்பு

அடும் - வெல்லும், கொல்லும், சமைக்கும், வருந்தும், போராடும்