Sunday, May 24, 2009

சிரித்தோம் சிந்தித்தோம்


ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக கடந்த ஏப்ரல் 30ந் தேதி, ரியாத் இந்திய பெண்கள் பன்னாட்டுப் பள்ளியில் நடந்த 'சிரிப்போம் சிந்திப்போம்' நிகழ்ச்சி மிக அருமையாக நடந்தேறியது. பேராசிரியர் டாக்டர் பெரியார்தாசன் அவர்களின் சொற்பொழிவை அடுத்து, ரோபோ ஷங்கர், ஈரோடு மகேஷ், ஜெகன் ஆகியோரின் பல்சுவை நிகழ்ச்சி சரியான விருந்து....நகைச்சுவை
மருந்தும்தான்...

நிகழ்ச்சி முடிந்ததும் நகைச்சுவைக் கலைஞர்கள் இந்தியா திரும்பினர். திரு. பெரியார்தாசன் அவர்கள் மேலும் இரண்டு வாரம் இங்கே தங்கியிருந்தார். இரண்டு வாரமும் சற்றும் ஓயாமல், சளைக்காமல் அடுத்தடுத்துப் பலவித நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

குறிப்பாக ரியாத், தமாம் மற்றும் ஜெத்தாவில் பள்ளி மாணவர்களின் சுய முன்னேற்றத்துக்காக அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. பாடங்கள் குறித்த திட்டமிடல், மனதை ஒருமுகப்படுத்துதல், படிக்க வேண்டிய சூழல் முதலிய தலைப்புகளில் அவர் கொடுத்த குறிப்புகள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன.

ஒரு பள்ளியில் ஒரு நிகழ்ச்சி என்ற நிலை மாறி அன்றாடம் ஒரு பள்ளி விஜயம் என்றாகிப் போனது. சவுதி அரேபிய மாணவ சமுதாயம் அவரை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.

சாதாரணமாக மனிதர்களைத் தாக்கக்கூடிய மனப்பிறழ்வுகள் பற்றிய அவரின் மனோதத்துவத்துறை சார்ந்த சொற்பொழிவுகளும் சரி, இனிய வாழ்க்கைக்கான வழிமுறைகள் குறித்த சொற்பொழிவுகளும் சரி...மீண்டும் மீண்டும் வியப்பில் ஆழ்த்திக் கொண்டேயிருந்தன.

ரியாத் எழுத்துக்கூடம் சார்பாக நிகழ்ந்த கவியரங்கத்தில் வெளிப்பட்ட அவரின் கவிதை முகம் பலரையும் மகிழ்ச்சிப் பரவசத்தில் ஆழ்த்தியது. புதுக்கவிதை, மரபுக்கவிதை எல்லாவற்றிலும் புலமை வாய்ந்தவர் என்பதைக் கண்கூடாகக் காணமுடிந்தது.

திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கியம் நமக்காக வகுத்திருக்கும் வாழ்க்கை நெறிகளில் இருந்து விலகி வேறுவழி செல்வதன் மூலம் எவ்வளவு சந்தோஷங்களை இழந்திருக்கிறோம் என்று அவர் கோடிட்டுக் காட்டியது...நல்மனம் பெறும் குறிப்புகள் தந்தது...என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

தனிப்பட்ட முறையில் மனவியல் குறித்த ப்ரச்சனைகளுக்காக சிலருக்கும் சிகிச்சை அளித்தார். அதன் பலனாய் அவர்கள் இன்று நலம் கண்டு முன்னேறி வருவதாகவும் தெரிய வந்தது.

தூய தமிழ், சென்னைத் தமிழ், ஆங்கிலம் என்ற அனைத்திலும் சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் அவருடைய பேச்சாற்றல் தனித்தன்மை வாய்ந்தது.

தன்முனைப்புப் பயிற்சியாளர், பச்சையப்பன் கல்லூரி தத்துவத்துறை உளவியல் பேராசிரியர்(ஓய்வு), 25 ஆண்டுகளாக மனவியல் பயிற்சியாளர், 20 ஆண்டுகளாக மனவியல் சிகிச்சையாளர், பல்வேறு துறைகளில் பல புத்தகங்கள் எழுதியவர், இலக்கியவாதி, சர்வதேச கருத்தரங்குகளில் மனவியல் சிகிச்சை பற்றிய கட்டுரைகள் வழங்கியவர், 'கருத்தம்மா' புகழ் திரைப்பட நடிகர் ..இவ்வாறாயப் பல்முகங்கள் கொண்டவரின் அனைத்துத் துறைத் திறமைகளையும் கண்கூடாகக் காணமுடிந்தது.

எப்பேர்ப்பட்ட எளிமையான மாமனிதர் என்ற வியப்பிலிருந்து இங்கே நான் மட்டுமல்ல, இன்னும் பல நண்பர்களும் விடுபடவேயில்லை.

6 comments:

கோபிநாத் said...

\\எப்பேர்ப்பட்ட எளிமையான மாமனிதர் என்ற வியப்பிலிருந்து இங்கே நான் மட்டுமல்ல, இன்னும் பல நண்பர்களும் விடுபடவேயில்லை\\

அவரை பற்றிய உண்மையான வரிகள்...வழிமொழிகிறேன்.

எங்கள் கல்லூரியில் 75வது ஆண்டு விழாவில் அவரை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

அவர் பணி மேன்மேலும் தொட வேண்டும்.

அப்படியே அவர் கூறிய சில கருத்துக்களையும் பதிவிட முடிந்தால் நன்றாக இருக்கும்.

$anjaiGandh! said...

நல்ல நடிகர்..( எனக்கு நடிகராகத் தான் தெரியும்)

வல்லிசிம்ஹன் said...

அவர் ஒரு பேச்சாளர், மனவியல் பேராசிரியர் என்றெல்லாம் தெரியாது பாசமலர்.
நீங்கள் இங்கு எடுத்துரைத்தது எவ்வளவு நல்லாதாகப் போச்சு. உண்மையில் நல்ல மனிதர்களைப் பற்றியும் அறிவாளிகளைப் பற்றியும் நமது புரிதல் கொஞ்சமாகவே இருக்கிறது. ரொம்ப நன்றிப்பா.

பாச மலர் said...

அவர் கருத்துகளைப் பதிவிட முயற்சிக்கிறேன் கோபி.

பாச மலர் said...

ஆமாம் சஞ்ஜய்..அதையும் தாண்டிப் பல முகங்கள் இருக்கின்றன..

பாச மலர் said...

வாங்க வல்லி மேடம்..மனவியல் சிகிச்சையாளரும் கூட...ஹிப்னாடிசம் போன்ற பயிற்சிகள் மூலம் பலரின் மனக்கோளாறுகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பவர்..