மனிதம்
மனதின் புனிதம்
தேவை இந்த வேதம்.
மனிதநேயம் மட்டுமே
விதியாய்க் கொண்டு
உயிர்கள் பலவும்
உலவிய காலம்
இது மனிதம் அன்று
மனிதம் மருவி
மதம் என்றாகி
இனம் என்றாகி
பணம் என்றாகி
பதவி என்றாகி............
மதம் பிடித்து
ஆ(ட்)டுகின்றது இன்று..
வாழ்க்கை அகராதியில்
மனிதத்தின் அர்த்தங்கள்
திரும்பத் திரும்பத்
திருத்தி எழுதப்பட்டு
திக்குத் தெரியாமல்
திகைக்கின்றது இன்று.
சாலியன்வாலாபாக்கில்
சக உயிர்கள்
சல்லடையாய்த்
துளைபட்ட போது
துடித்தெழுந்தது மனிதம் அன்று.
இலங்கை தொடங்கி
இஸ்ரேல் வரை
இனங்களின் பிணக்குவியல்களில்..
இதயங்கள் தின்னும்
இரத்த தாகத்தில்
இரை தேடுகின்றது மனிதம் இன்று
அரிய சரித்திரங்கள்
அசாதாரணமான செயல்கள்
அனாயாசமான சாதனைகளாய்..
மனிதமாய் அன்று..
உரிய கடமைகள்
சிறிய உதவிகள்
உயர்ந்த மனிதமாய் இன்று
முதுமையில்
முதியோர் இல்லம் செல்லாமல்
வாரிசுகளுடன் வாழ்க்கை
இது இன்று மனிதம்
உடன்பிறப்புகளுள்
உரசல்கள் இல்லாத
உறவுமுறைகள்
இது இன்று மனிதம்
இன்னும் கைப்பைக்குள்
கைத்துப்பாக்கி கத்தி
சுமக்கவில்லையே நாம்
இது இன்று மனிதம்.
பரிணாமத் தளர்ச்சியில்
பன்முகங்கள் கண்டாலும்
பாழ்பட்டு நின்றாலும்
நல்மனங்களில் இன்னும்
நலியாமல்
நாடிதுடித்து நிற்கிறதே
இதுவும் இன்று மனிதம்.
ஏதோவோர் மூலையில்
எரியும் உயிருக்காய்
சுனாமியில் சுருளும்
சகோதரருக்காய்
இனங்கள் அழிகையில்
இறைந்து கிடக்கும்
பிணங்களுக்காய்
இதயங்கள் வடிக்கும்
இரத்தக் கண்ணீரில்....
வலிய வந்து
உதவும் கரங்களில்...
இறக்காமல்இன்னமும் நின்று
இயங்குகின்றது மனிதம்.
இயக்குகின்றது மனிதம்.
Tuesday, April 28, 2009
Subscribe to:
Posts (Atom)