அதிகாரம்: 55. செங்கோன்மை
குறள் எண்: 545
இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு.
இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.
விளக்கம்:
ஆடம்பரம் ஏதுமில்லை.
நடுவுநிலைமை தவறுவதில்லை.
செங்கோல் நெறியில் வழுவில்லை.
இங்ஙனம் இயல்பாய்
ஆட்சி செய்யும்
மன்னன் மட்டும் இருந்துவிட்டால்
பருவமழை பொய்க்காது;
விளைபொருட்கள் குன்றாது.
அதிகாரம்: 59. ஒற்றாடல்
குறள் எண்: 585
கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டு
முகாஅமை வல்லதே யொற்று.
கடாஅ உருவொடு கண் அஞ்சாது, யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.
விளக்கம்:
அடுத்தவர் ஐயுறாத
மாற்றுரு தரித்தவன்;
எவரேனும் அடையாளம்
அறிந்து கொண்டாலும்
அவர்முன் அஞ்சாநெஞ்சன்;
அகப்பட்டாலும்
துன்புறுத்தப்பட்டாலும்
அரசன் தவிர
வேறெவர்க்கும்
தம் ஒற்றுச் செய்தி
சொல்லாத வல்லவன் -
இவனே ஒற்றன்.
அதிகாரம்: 53. சுற்றந் தழால்
குறள் எண்: 523
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடு இன்றி நீர் நிறைந்தற்று.
விளக்கம்:
குளத்திற்குக் கரை போல்வர்
நம் வாழ்க்கைக்குச் சுற்றத்தார்.
அவரோடு மனங்கலந்து
வாழ்தல் வேண்டும்.
சுற்றம் இல்லா வாழ்வு
கரையில்லாத குளப்பரப்பில்
நிறைந்திருக்கும் நீர் போலப்
பயனற்றதொன்றாகும்.
அதிகாரம்: 71. குறிப்பறிதல்
குறள் எண்: 702
ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
ஐயப்படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தொடு ஒப்பக் கொளல்.
விளக்கம்:
ஒருவர் உள்ளத்து
நினைப்பதைச் சற்றும்
ஐயுறாத வகையில்
உணர்ந்து கொள்பவன்
தெய்வத்துக்குச் சமமாவான்;
சரிவரக் குறிப்பறியும்
இவ்வாற்றல்
தெய்வீக ஆற்றலாகும்.
அதிகாரம்: 87. பகைமாட்சி
குறள் எண்: 864
நீங்கான் வெகுளி நிறையில னெஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கு மெளிது.
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.
விளக்கம்:
நீங்காத சினத்தைக்
உடையவன்;
பிறரிடத்து
மறைக்க வேண்டிய
செய்திகளை
மறைக்கும்
மனவலிமை இல்லாதவன் -
இவ்விருவரின்
பகை வெல்வது
யார்க்கும் எளிது.
Saturday, March 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
விளக்கங்கள் கவிதைகளாய்.. அருமை பாசமலர் அத்தனையும். தொடருங்கள்.
கவிதை முயற்சியில் விளக்கம் அருமை...;)
குறளை எப்படி படிப்பது என்று தெரியமால் இருக்க நீங்க திரும்ப எளிதாக சொல்லியிருப்பதும் நன்று ;)
ஆஹா திரும்ப எழுத ஆரம்பிச்சிட்டீன்ஹ்களா ரொம்ப சந்தோஷம், இப்பதான் வலைப்பக்கம் வாசிக்க வரமுடிந்தது. பின்னாடி இருந்து முன்னாடி போறேன்... வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்க
வாங்க ராமலக்ஷ்மி, கோபி, கிருத்திகா...நன்றி.
கவிதை வடிவில் தந்து இருப்பது அருமை
வாழ்த்துகள்
Post a Comment