Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Sunday, March 25, 2012

உத்தியோகம் பெண்கள் லட்சணம் - வசுந்தரா

வாசலில் விசாலமான திண்ணை. அங்கிருந்த பிரம்பு ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் வசுந்தரா. நடந்ததை எண்ண எண்ண அலுப்பாயும் இருந்தது. களைப்பாயும் இருந்தது.

"போதும் பாப்பா.எந்திரிச்சு உள்ள வா. ஆஸ்பத்திரிலருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்து ஒரு நாள் கூட ஆகல. பனி வேற கொட்டுது. சீக்கிரம் உள்ள வா.."

சொன்னதோடு நிற்காத ருக்மணி, அவளைக் கையைப் பிடுத்து இழுக்காத குறையாக, உள்ள அழைத்துக்கொண்டு போய் வரவேற்பறை சோபாவில் அமர வைத்து விட்டுத் தொலைக்காட்சியை இயக்கினாள்.

"கண்ட கருமத்தையும் நெனக்காம ஆகுற வேலையைப் பாரு. நாசமாப் போறவனுங்க...வேற வேலயே இல்லாத போக்கத்த பயலுக...காபி கொண்டாரட்டா?"

"இன்னும் கொஞ்சம் சேரம் கழிச்சுக் குடு ருக்கு. இப்போ வேண்டாம்.." சோபாவில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள் வசுந்தரா.


ருக்கு பணிப்பெண் மட்டுமல்ல..வசுந்தராவுக்குத் தூரத்து உறவு..வசுந்தராவின் அப்பா அம்மா இறந்து விட்டார்கள்; தம்பி குடும்பத்துடன் ஹைதராபாத்தில் இருக்க, தங்கை தன் குடும்பத்துடன் சென்னையில் இருக்கிறாள்.

ருக்குவின் கணவன் இறந்துவிட, அவள் மகள் சென்னைக் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கிப் படிக்கிறாள்.இருவரும் ஒருவருக்கொருவர் துணை

மதுரையில் புகழ்பெற்ற கல்லூரி ஒன்றில் துணை முதல்வர் பொறுப்பு
வசுந்தராவுக்கு. இயற்பியல் துறையில் விரிவுரையாளராகத் தன் பணியைத் துவங்கி, தற்போது துணை முதல்வர் பதவி.

அப்பா, அம்மா இறந்த போது தம்பி தங்கையின் வாழ்க்கைப் பொறுப்பு இவள்தம் கடமையாகிப் போக, பொருந்திய வயதில்  திருமணத்தைத் தள்ளிப் போட்டாள். திருமணம் செய்ய நினைத்த போது, காலமும் கடந்து விட, அதில் ஆர்வமும் இன்றி இந்த வாழ்க்கை பழகிப் பிடித்துப் போய் விட்டது.

மறக்க முயன்றவுடன் நினைவுகள் மட்டும் மறைந்துவிட்டால்தான் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஒருவேளை அப்படி இருந்தால் அதுவும் வெறுமைதானோ?!

நீண்ட பெருமூச்சுடன் மீண்டும் அச்சம்பவத்தை அசைபோடலானாள் வசுந்தரா..

சென்ற வாரம் ஒரு நாள் கல்லூரிக்கு வழக்கம் போலவே சென்றாள். முதல்வர் நீண்ட விடுமுறையில் சென்றதால், இவளுக்குப் பணிச்சுமை அதிகம்.

வழக்கம்போலவே வழியில் வந்த மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் முகமன் கூறிச் செல்ல, புன்சிரிப்புடன் தலையை அசைத்தவள், அவர்கள் முகங்களில் காணப்பட்ட 'அய்யோ..பாவம்..' என்ற ரீதியிலான குறிப்பைக் கவனிக்கவில்லை.

அறையில் நுழைந்து, கணினியை இயக்கி, கல்லூரியின் தளத்துக்குச் சென்று, மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தவளுக்கு அதிர்ச்சி. அசிங்க அசிங்கமான கார்ட்டூன் பட இணைப்புகளுடன், அவளையும் ரவியைப் பற்றியும் ஆபாசத் தகவல்கள்..

ரவி எம்.ஃபில் ஆராய்ச்சி மாணவன். அவன் ஆராய்ச்சி முடியும் தருவாயில் இருக்க, அடிக்கடி கல்லூரியில் லேபிலும், நூலகத்திலும், அவள் அறையிலும், அவள் வீட்டிலும் அடிக்கடி சந்திப்புகள் நிகழ்வதுண்டு. ரவி மட்டுமல்ல, இன்னும் இரு மாணவிகளுக்கும் அவள் கைடுதான். ஒவ்வொரு வருடமும் இது போன்ற மாணவ மாணவியர்க்குக் கைடாக இருக்கும் பொறுப்பு வரும்தான்..

மிகவும் கண்டிப்பானவள் வசுந்தரா..3 மாணவர்கள் சஸ்பென்ட், 2 ஆசிரியர்களுக்கு மெமோ என்று வழக்கமாக அந்தக் கல்லூரியில் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டாதால், இந்தத் தண்டனையா? யார் இப்படிச் செய்திருப்பார்கள்?

கல்லூரித் தளத்தின் பாஸ் வேர்டைக் கூட ஹேக் செய்திருக்கிறார்களே..

காலம் மாறினாலும் வக்கிரங்கள் மாறவில்லை...நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் நவீன வக்கிரம்....

அய்யோ..மின்னஞ்சல் யார் யாருக்குப் போகுமோ...அவள் அதிர்ச்சியில்
குழம்பிக்கொண்டிருக்க,

"மே ஐ கம் இன், மேடம்?" சக ஆசிரியை மஞ்சுளாதான்.

"யெஸ்..வாங்க மஞ்சுளா.."சுதாரித்துக்கொண்டு தண்ணீரை எடுத்துக் குடித்தாள் வசுந்தரா.

"நானும் பார்த்தேன் மேடம். வெரி ஸாரி.."

"என்ன பாத்தீங்க..எதைப் பத்திப் பேசுறீங்க.."நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.  குடித்த தண்ணீர் மொத்ததையும் மீறி மீண்டும் நாக்கு வற்றி விட்டது..

"நம்ம காலேஜ் சுவத்துல, கண்ட கண்ட இடத்துல எழுதி வச்சுருக்காங்க.."

அய்யோ இது வேறயா.."என்ன எழுதிருக்கு.."

"அது வந்து மேடம்...உங்களையும் ரவியையும் பத்தி..."

அவள் சொல்லாமலே எல்லாம் புரிந்தது.

என்ன கருமம் இது..அப்பா ஊட்டிய தைரியம் எல்லாம் நொடிப்பொழுதில் எங்கே போனது?

பள்ளிக்காலத்தில், பஸ்ஸில் சில்மிஷம் செய்த ஒருத்தனை அத்தனை பேரும் வேடிக்கை பார்க்கத் தைரியமாய்க் கை நீட்டி அடித்த வசுந்தரா,

கல்லூரி மாணவியாய் இருந்து போது, இவளைப் பற்றித் தாறுமாறாக மைதானச் சுவற்றில் எழுதியிருக்க, கரித்துண்டைக் கொண்டு 'போடா பொறுக்கி, தைரியம் இருந்தால் நேரில் வந்து எழுதுடா.." என்று எழுதிய வசுந்தரா,

அதிர்ச்சியின் அடிகள் தாங்காமல், அவமானம் தாங்காமல்  இரத்தக் கொதிப்பு ஏறி, மயங்கி விழுந்து......

"இந்தா பாப்பா...காபி குடி...ராத்திரிக்கு என்ன சமைக்க.." நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது ருக்குவின் குரல்..

"சப்பாத்தியும் ஏதாவது குழம்பும் பண்ணு ருக்கு..கொஞ்சம் காரமாப் பண்ணு ..ஆஸ்பத்திரி டயட்ல நாக்கே செத்துப் போச்சு..."

சர்க்கரை வியாதியும் இருப்பதால், சர்க்கரை இல்லாத காபி..அதை உறிஞ்சியபோது தோன்றியது..

வயசுக் காலத்தில் போதுமான சர்க்கரை இல்லாவிட்டால் குடிக்கவே முடியாது..இப்போது சர்க்கரையே இல்லை..அது அப்போதைய பழக்கம்..இப்போது ஆரோக்கியம் வேண்டி இப்போது பழகிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ...

ம்ம்ம்....வயசுக்காலத்தில் பதவிகள் இல்லை..பொறுப்புகளும் இல்லை..தட்டிக் கேட்க முடிந்தது உடனுக்குடன்..இப்போது? உயர்ந்த பதவி..அது தந்த பொறுப்பு....அவள் மானத்தைப் பங்கப் படுத்தியவர்களைத் தேடிபிடித்து உடனடியாகத் தண்டிக்கும் அதிகாரம் வேகம் எல்லாம் உண்டு
என்றாலும் பொறுப்பான பதவிக்காய் கடைப்பிடிக்க வேண்டிய நிதானங்கள்..எல்லைகள்...வேகங்களைக் கட்டுப் படுத்தத்தான் செய்கின்றன..

ஆடிப்போய்விட்ட ரவியின் பெற்றோரைச் சமாதானப்படுத்த...
மாணவ மாணவியர் மத்தியில் சகஜ நிஐயைத் துரிதமாக மீட்டெடுக்க..
எல்லாவற்றுக்கும் மேலாகக் கல்லூரியின் பெயர் அளவுக்கதிகமாய் ஊடகங்களில் அடிபடாமல் பாதுகாக்க.....

வாழ்க்கையும் சர்க்கரை இல்லாத காபி போலத்தான்..சூழலின் ஆரோக்கியம் கருதி, பிடிக்கிறாதோ பிடிக்கவில்லையோ காம்ப்ரமைஸ் செய்து கொண்டு போக வேண்டிய கட்டாயம்.

மெதுவாகப் புன்னகைத்தபடி, செல்பேசியை எடுத்து ரவிக்குச் சுழற்றினாள்.."ரவி..கடைசி சாப்டெர் பத்தி டிஸ்கஸ் பண்ணனுமில்ல ...நாளைக்குக் காலைல 11 மணிக்கு வீட்டுக்கு வந்துடு.." என்றாள்.

நன்றி: வல்லமை

Friday, March 9, 2012

உத்தியோகம் பெண்கள் லட்சணம் - நந்தினி


"ஏ மனோ..பேங்க் போயிட்டு வந்துர்றியாப்பா..வீட்டு வாடகை, பால் காசு, மளிகைக் காசு குடுக்கணும்.."

"இதோ கிளம்பிட்டேம்மா...வேற ஏதும் வாங்கிட்டு வரணுமா.."
"அப்பா கண்ணாடி ரிப்பேர்க்குக் குடுத்துருந்தார்..ஒரு எட்டு வாத்தியார் கடைக்குப் போய் அத வாங்கிட்டு வந்துரு..."

"ஏன்..திரும்பியும் ரிப்பேரா...ஃப்ரேம் சுத்தமாப் போய்ருச்சும்மா..ரிப்பேர் பண்ணால்லாம் வேலைக்கு ஆவாது...என்ன பெரிசா செலவு ஆய்றப் போது..புதுசு வாங்கச் சொல்லுங்க."

"ஆமாண்டா....செலவைக் குறைச்சு உங்க அக்கா சுமையைக் குறைக்கணும்னு பாக்குறேன்..எல்லாம் நல்லாத்தான் இருக்கு கண்ணாடி..இன்னும் ஒரு வருஷத்துக்காவது வரும்.." பேசியபடியே உள்ளே நுழைந்தார் சபேசன்.
தனியார் கம்பெனி ஒன்றில் கணக்காளராய் இருந்து ரிட்டையர் ஆனவர்..ப்ளஸ் டூவில் நல்ல மார்க் வாங்கிய நந்தினிக்கு நல்ல மார்க் வாங்கியும் வசதியில்லாத காரணத்தால், டாக்டருக்குப் படிக்க வைக்க முடியவில்லை..அவள் விருப்பப்படி நர்ஸ் படிப்புதான் படிக்க வைத்தார்...

அவளும் படித்து முடித்து, தம்பி படிப்புக்கும் உதவி, தன் கல்யாணத்துக்காவும் பணம் சேர்க்கும் கடமையில், துபாய் ஆஸ்பத்திரி ஒன்றில் வேலை செய்கிறாள் கடந்த 3 வருடங்களாக..

அவள் போகும் போது இளையவன் மனோ 3 வது வருடம் படித்துக் கொண்டிருந்தான். இப்போது படிப்பு முடித்து, தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தவனுக்கு பஹ்ரைனில் வேலைக்கும் ஏற்பாடு செய்திருக்கிறாள் நந்தினி.

சபேசனும், அவர் மனைவி மீனாட்சியும் நந்தினி அனுப்பும் பணத்தில் பார்த்துப் பார்த்துச் செலவு செய்தது போக பேங்க்கில் அவள் கல்யாணத்துக்கென்று கணிசமான தொகை சேர்த்து வைத்திருந்தார்கள். மனோவும் தன் குடும்பச் சூழல் நன்கறிந்தவன்; அக்கா நந்தினியைப் பொறுப்பிலிருந்து விடுவிக்கத் தயாராக இருந்தவனுக்கு இந்த வேலையும் கிடைத்ததும் குடும்பமே குதூகலித்தது.

மனோவும் அடுத்த வார இறுதியில் பஹ்ரைன் கிளம்பி விடுவான். நந்தினியையும் கூடிய சீக்கிரம் வேலையை விட்டு விட்டு இங்கே வரச் சொல்லிவிட்டார்கள்.

மனோவுக்கு வேலை கிடைத்ததும்தான் இவர்களுக்கு நிம்மதி வாய்த்தது. பெண் பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்பிச் சம்பாதிக்க வைத்ததில், இவர்கள் ஏற்கனவே நொந்து போயிருந்த வேளை, உற்றார் உறவினர் வேறு அவ்வப்போது "ம்ம்ம்...காலம் கெடக்கிற கெடப்பில பொட்டப்புள்ளையை வெளிநாடு அனுப்பிச் சமபாதிக்கணுமா..இங்கே என்ன ஆஸ்பத்திரிக்கா பஞ்சம்...என்னமோ போப்பா.." என்று முடியும் போதெல்லாம் எதையாவது சொல்லி அவர்கள் வேதனையை இன்னும் அதிகப் படுத்தினார்கள்.

அப்பாடா..எல்லாமும் முடிந்து சீக்கிரம் விடிவு காலம் வரப்போகிறது.
.
"மனோ..போயிட்டு வாப்பா நேரமாகுது.."

"இதோ கிளம்பிட்டேம்மா..அம்மா மதியச் சாப்பாட்டுக்கு வர மாட்டேன்...ஃபேக்டரி வரைக்கும் போயி ஸெட்டில்மெண்ட் பணம் வங்கிட்டு வந்துர்றேன்..ஊருக்குப் போறதுக்கு முன்னாடி எல்லாரையும் பாத்த மாதிரியும் இருக்கும்.."என்றபடியே வெளியே கிளம்பிவிட்டான்.

"ஏங்க..சாயந்திரம் வெளிய போறப்ப மறக்காம் டெய்லர் கடைக்கு போயிட்டு மனோ தைக்கக் குடுத்த ட்ரஸ்ஸெல்லாம் வாங்கிட்டு வந்துருங்க.."

"சொல்ல மறந்துட்டேன். டெய்லரைப் பாத்தேன். சாயந்தரம் அவரே குடுத்தனுப்புறதாச் சொல்லிருக்கார். சரிமீனாட்சி.....சமைச்சுட்டியா..கொஞ்சம் சூடா ரசம் தாயேன்..நெஞ்சக் கரிக்கிற மாதிரி இருக்கு"

"ஏங்க மோர் வேணாத் தாளிச்சுக் குடுக்கட்டுமா.."

"வேணாம். ரசமே குடு..ஆனா சூடாக் குடு"

இதோ கொண்டு வர்றேங்க.." அடுக்களைக்குள் விரைந்தாள் மீனாட்சி.
ஈஸி சேரில் சாய்ந்த படியே தொலைக்காட்சியை இயக்கினார் சபேசன்.
செய்திகள் சானல் பக்கம் போக, கர்நாடகச் சட்ட சபையில் மந்திரிகள் மொபைலில் ஆபாச வீடியோப் படம் பார்த்து மாட்டிக்கொண்ட செய்தியை அக்கு வேறு ஆணி வேறாக அலசிக் கொண்டிருந்தார்கள்.

ரசம் கொண்டு வந்த மீனாட்சியிடமும் அதைப் பற்றி விளக்கிவிட்டு, " இவனுங்களுக்குப் படம் பாக்க வேற இடமே கெடக்கலியா...என்ன தைரியமாக் கொஞ்சம் கூட வெக்கமேயில்லாமக் காமிராவப் பாக்குறாங்க பாரு...கர்மம் கர்மம்..."

அரபு நாட்டில் என்னவெல்லம் நடக்கிறது என்ற கொடுமையை அந்தப் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்ததாகப் பாழாய்ப் போன விளக்கம் வேறு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்

"இந்த மந்திரிங்களோட இருக்க அப்பா, அம்மா, பொண்டாட்டி, புள்ளங்க எல்லாம் என்ன பாடு பட்டுப் போவாங்க..ஏன் நாண்டுகிட்டுச் செத்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.."

சாயங்காலம் 5 மணி அளவில் மனோ திரும்பி வந்தான்.

"ஏம்ப்பா இப்டி வாடிப் போயிருக்க...சாப்பிட்டியா இல்லியா.."

மீனாட்சிக்குப் பதில் சொல்லாமல் தொலைக்காட்சியை இயக்கிச் செய்திகள் சானலில் வைக்க மீண்டும் கர்நாடக மந்திரிகள் காட்சிகள் ஓட..

"காலேலருந்து இந்தக் கருமத்தைத்தான் காமிக்கிறான்..படம் பாக்குற எடத்தைப் பாரு...சனியன் புடிச்சவனுங்க.."

"இப்போ டான்ஸ் ஆடுன பொண்ணுங்களையும் சேத்துக் காமிக்கிறான்..பாருங்கப்பா...அம்மா நீங்களும் வாங்க.."

"இதுவே கண்றாவி..இனி அந்தக் கண்றாவியை வேறு பாக்கணுமா..."

க்லோஸ் அப் காட்சியாகப் பெண்களின் முகம் வர, விக்கித்துப் போனார்கள் சபேசனும், மீனாட்சியும்..அங்கே அரைகுறை ஆடையில் ஆடிக்கொண்டிருந்தது நந்தினியேதான்....

"பாபுகிட்டச் சொல்லிட்டு வர அவன் ரூமுக்குப் போயிருந்தேன். அப்பதான் டி.வி பாத்தேன்...." அவன் சொல்லிக் கொண்டு போன எதுவும் அவர்கள் காதில் விழவில்லை.

சபேசன் சுதாரித்துக் கொண்டு பார்த்த போது, மனோவும் மீனாட்சியும் ஓங்கிய குரலில் அழுது கொண்டிருந்தார்கள்.

இரண்டாம் நாள் மாலை...

மனோவின் துணியைக் கொண்டு வந்த டெய்லர் பையனும், எடுக்கப்படாத பால் பாக்கெட்டுகளைக் கண்ட பால்காரரும், அன்று எதேச்சையாய்ச் சந்திக்க..வீட்டினுள் இருந்து வந்த துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கைப் பிடித்துக்கொண்டே அக்கம் பக்கத்தைக் கூட்டிப் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் செய்தார்கள்...

போலீஸ் வந்து கதவை உடைத்த அவ்வேளையில், வீட்டுக்குள் போன் மணியடிக்க, "நந்தினிதான் போன் பண்றா போலருக்கு" என்றார் பக்கத்து வீட்டுக்காரர்.

வல்லமையில் வெளிவந்தது.

Wednesday, March 7, 2012

உத்தியோகம் பெண்கள் லட்சணம் - வித்யா

வல்லமையில் நேற்று வெளிவந்தது..


மழை வருமா என்று அண்ணாந்து பார்த்தபடியே கோரிப்பாளையம் பிராஞ்ச் பேங்க் வாசலை விட்டு வெளியே வந்தாள் சாரதா. நல்ல வேளை அதற்கான அறிகுறியே இல்லை. கைப்பேசி எடுத்து எண்களைச் சுழற்ற ஓட்டுநர், 

"என்னம்மா வண்டி எடுத்தாரட்டா" என்று கேட்டார்.

"வாப்பா..நான் வாசலுக்கு வந்துட்டேன்...லேட் பண்ணிராத.."

ஒரிரு நிமிடங்களில் கார் வர, விரைந்து சென்று ஏறியவள்.."மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போப்பா."

"சரிம்மா."

இந்நேரம் மாப்பிள்ளை வந்திருப்பாரா..இந்த வித்யா என்னதான் மனசில நெனச்சிட்டிருக்காளோ புரியலை..வித்யா சாரதாவின் மூத்த பெண். இரண்டாவது பெண் பூஜா 12ம் வகுப்பு படிக்கிறாள்.

கடந்த வருடம்தான் வித்யாவுக்கும், டாக்டர் அரவிந்துக்கும் திருமணம் நடந்தது. வித்யா பொறியியல் பட்டதாரி. விரும்பிப் படித்தாளேயொழிய, வேலைக்குச் செல்வதில் துளியும் விருப்பமில்லை. படித்த முடித்த கையுடன் நல்ல சம்பந்தம் வந்து விட கலயாணத்தைச் சீரும் சிறப்புமாக நடத்தி வைத்தார்கள்.

ஆயிற்று. வருடம் ஒன்று ஆவதற்குள் என்னென்ன ப்ரச்னைகள்.....ப்ரச்னைகள் என்ன ப்ரச்சனைகள்...ஒரேயொரு தலைவலிதான்..டாக்டர் எப்போதும் பிஸி. இவளுக்கு வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை..புதுக் கல்யாணக் கனவுகள்..கணவனுடன் அங்கே இங்கே சுற்ற வேண்டும் என்ற அவா..

திருச்சிதான் அவர்கள் சொந்த ஊர்; அங்கே தில்லை நகரில் சொந்தமாய் மருத்துவமனை வைத்துக் கொடுத்திருந்தார் அரவிந்துக்கு, கட்டடக் கான்டிராக்டரான அப்பா.

இத்தனைக்கும் மாமியார், நாத்தனார் பிடுங்கல் இல்லாத தனிக்குடித்தனம்தான்...

அரவிந்திடம் குறை சொல்ல ஒன்றுமில்லை...அவன் கல்யாணம் நிச்சயித்த போதே தன் பிஸியான, மூச்சு விட நேரம் இல்லாத வாழ்க்க்கையைப் பற்றி ஒளிவு மறைவு இல்லாமல் அவளிடம் சொல்லியிருந்தான். அப்போதெல்லாம் சரி சரி என்று தலையாட்டியவள், சாரதாவும், கணவர் ரமேஷ்பாபுவும் வரப்போகும் கஷ்டங்களை, சந்தோஷங்களை எடுத்துக்கூறும் போது பொறுமையாகக் கேட்டவள்...இப்போது எடுத்ததுக்கெல்லாம் குத்தம் சொல்கிறாள்..

"வேலைக்குப் போகச் சொல்றாரும்மா...அப்போதான் அவர் கஷ்டம் எனக்குப் புரியுமாம்..எனக்கும் மனசு அலைபாயாம இருக்குமாம்.."

"அதுல என்னம்மா தப்பு.."ரமேஷ் பாபு கேட்க..

"அது சரி..அம்மா வேலைக்குப் போனதால நானும், பூஜாவும் எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு எங்களுக்குத்தான் தெரியும். அதையே என் பிள்ளைகளும் படணுமா...அதும் க்ளினிக்கையே கட்டிக்கிட்டு எப்பவும் இவர் மாரடிக்கிற லட்சணத்துக்கு நானும் வேலைக்குப் போனா நல்லாத்தான் இருக்கும்."

"வெளில வேற எங்கயும் போகாட்டாப் பரவால்ல...மாப்பிள்ளை க்ளினிக்கத்தான கவனிச்சுக்கச் சொல்றார்..அதைச் செய்யலாமில்ல.."

"போங்கம்மா...அதுக்கு டாக்டர் பொண்ணாக் கட்டிருக்க வேண்டியதுதானே...ரெண்டு பேரும் வேல பிஸின்னு இருந்திருக்கலாமே..சரிக்குச் சரியா ஜாடிக்கேத்த மூடியா இருந்திருக்கும்...நீங்கதான் இந்த வயசுலயும் வேலக்குப் போயிக் கஷ்டப்படுறீங்க...வேலைய விட்டுட்டு அக்கடான்னு இருங்கன்னாக் கேக்குறீங்களா...அப்போதான் தேவையிருந்துச்சு..வேலைக்குப் போனீங்க..இப்ப என்ன தேவை...நிம்மதியா வீட்ல இல்லாம..இந்த வயசுலயும் உங்க அம்மா எப்படி உழைக்கிறாங்கன்னு உம் மாப்பிள்ளை நக்கல் பேச்சு வேற.."

அரவிந்த் நல்ல டாக்டர்னு பேரெடுத்தவன்..பணக்கார அப்பாக்குப் பொறந்து, நல்லாவும் படிச்சு வந்தவன். அவனிடம் வரும் நோயாளிகள், அந்த டெஸ்ட், இந்த ஸ்கேன்னு அங்கே இங்கே அலைய வேண்டியதில்லை. நவீன கருவிகள் எல்லாம் அங்கேயே இருந்தது....அவன் மட்டுமின்றி, கூட இருந்த 5 டாக்டர்களும் நல்ல பேர் எடுத்து விட, நோய்க்குத்தான் பஞ்சமா..நோயாளிகளுக்குதான் பஞ்சமா..

சின்னச் சின்னதாய்த் தொடங்கிய ப்ரச்னை, வித்யா வீட்டோடு வந்துவிடும் அளவுக்கு முற்றிவிட்டது..இரண்டு தரப்பிலும் சமாதானமும் செய்தாகிவிட்டது..சும்மா சொல்லக்கூடாது அவ்வளவு வேலையிலும், மாதம் இருமுறையாவது திருச்சியிலிருந்து வந்து அவளைச் சமாதானப் படுத்திக்கொண்டுதான் இருந்தான்..நோயாளியைக் குணப்படுத்த அவ்வபோது வரும் ஹவுஸ் விஸிட் போல..

இன்றும் அப்படி அவன் வருவதால்தான், அவர்கள் தனியாக இருக்கட்டும் என்று இவர்கள் ஒதுங்கி விட்டார்கள்..அலுவலகப் பணிக்காய் ரமேஷ்பாபு சென்னை சென்றுவிட, பூஜாவும் தோழி பிறந்த நாள் பார்ட்டிக்குப் போய் விட, இதோ சாரதா மீனாட்சி கோவில் தெப்பக்குளப் படிகளில்...

மணி 7 ஆக, மீண்டும் டிரைவருக்கு நம்பரைச் சுழற்றி, வீட்டுக்குக் கிளம்பினாள். வீடு பசுமலையில்..வரும் வழியெல்லாம் மனசு பதைத்தது. கணவனுக்கு போன் அடிக்க, அவர் எடுத்தால்தானே..."என்னதான் பிஸியோ..".பேங்கில் என்ன வேலையிருந்தாலும், வீட்டில் யாரிடமிருந்தாவது போன் வரும்போது, தலை போற வேலையாருந்தாலும், அட்லீஸ்ட்15 நிமிடம் கழித்தாவது போன் பேசி விடுவாள்..

"அது சரி..கணவன் என்ன..மாப்பிள்ளை என்ன..இந்த ஆண்கள் எல்லாரும் இப்படித்தான்..அய்யயோ..இது என்ன நானும் வித்யா மாதிரிப் புலம்புகிறேன்..."
இன்னிக்காவது மனசு மாறியிருப்பாளா..என்னாச்சோ தெரியலை என்று குழம்பியபடி வீட்டுக்குள் நுழைந்தாள்.

வித்யாவின் இறுகிய முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

"மாப்பிள்ளை போயிட்டாரா வித்யா.."

"ம்..ம்.."வேறு எதுவும் கேட்காதே என்கிற தோரணை...

"என்ன சொன்னார்.."

"வழக்கமான பல்லவிதான்..வீட்டுக்கு வான்னு...ஹாஸ்பிட்ல்ல மோகன்னு ஒரு டாக்டர்..அவங்க பொண்டாட்டியாம் போர் அடிக்குதுன்னு வேலைக்குப் போறாங்களாம்..இன்னோரு டாக்டரோட பொண்டாட்டி வீட்டுல இருந்தாலும் ஜாலியா இருக்காங்களாம்..இதேதான் புராணம்.."

வேலைக்குப் போகலாமா வேணாமான்னு ஒரு பொண்ணே முடிவெடுக்கிற சூழல் எத்தனை பேருக்கு வாய்க்கும்.....தன்னோட கொடுப்பினை இந்தப் பொண்ணுக்கு ஏன் புரிய மாட்டேங்குது..

இந்தப் பூஜா நாளைக்கு என்ன கூத்தடிக்கப் போறாளோ...கட்டுப்பாடாய்த்தானே வளர்த்தோம்..என்னதான் பண்றதோ..காபி கலக்க கிச்சனுக்குச் சென்றாள் சாரதா..

"யம்ம்மோவ்..."வேலைக்கார சுப்பம்மாவின் குரல்..

"வாங்க மகாராணி..என்ன ரெண்டு நாளா ஆளயே காணோம்..."காபியைக் கொஞ்ச நேரம் மறந்து விட்டு அவளிடம் பாயலானாள் சாரதா..

ஓங்கிக் குரலெடுத்து அழ ஆரம்பித்தாள் சுப்பம்மா...திரும்பி முதுகைக் காண்பித்து, "அந்தப் பாழாப் போன மனுசன் குடிச்சுட்டு வந்து போட்டு அடியா அடிச்சுட்டான்...காய்ச்சல்ல ரெண்டு நாள் படுத்துட்டேன்..இன்னிக்காவது பொழுதோட வரணும்னு இருந்தேம்மா ...தூங்கிப்புட்டேன்...அதான் லேட்டாயிர்ச்சு.."

என்றவள் வித்யா பக்கம் திரும்பி
"என்ன பாப்பா மாப்பிள்ளை இன்னிக்கு வந்திருப்பாரே..கூடப் போகலியா..."

"ஆமா ..ஆமா..உனக்கெல்லாம் அறிவே இல்லியா...இப்படி அடி வாங்குற..இதெல்லாம் ஒரு பொழப்பு...ஆம்பளையா லட்சணமா உன் புருஷனை வேலைக்குப் போகச் சொல்லாம நீ சம்பாரிச்சுப் போடுற திமிர்...நீ வேலைக்கு வராம, நாலு நாள் பட்னி போடு..வயிறு காஞ்சா எல்லாம் வழிக்கு வந்து சேரும்.."

"என்னம்மா பண்றது..உத்யோகம் புருச லச்சணம்னு சொல்வாக..குடிக்குறதுதான் இந்தாளோட லச்சணமாருக்கு...அதெல்லாம் பாத்தா முடியுமா...அதெல்லாம் பாத்தா என் பொழப்பைப் பாக்க முடியுமாம்மா...நாலு நாள் அந்த ஆள மட்டுமா என் புள்ளயும்தான் பட்னியாக் கெடக்கும்.

பாவம்...என் மகன மாதிரித்தான் அந்தாளும்னு நெனச்சு சமாதானமாப் போக வேண்டியதுதான்..அதுவும்...தப்புச் செஞ்சுப்புட்டு அப்றம் தலையைச் சொறிஞ்சிட்டு வந்து நிக்கும்...எங்க ஆத்தா சொல்லும்...புருசன உன் புள்ள மாதிரி நெனச்சுக்கோ..தப்பு செஞ்ச புள்ளய அடிச்சாலும் பின்ன நம்மதான தாயி அணச்சுக்கிறோம்...புருசனயும் அப்படி மன்னிச்சுட்டா எல்லாம் சரியாப் போய்ரும் தாயி..நீங்க ஒரு புள்ள பெக்கும் போதுதான் பாப்பா உங்களுக்குப் புரியும்...

மாப்பிள்ளைத் தம்பி எவ்ள தங்கமான புள்ள...பொழுத வெட்டியாப் போக்குற மாதிரிக் கோச்சுக்கிறீங்களே பாப்பா..எத்தன உசுரைக் காப்பாத்துது..போன தரம் உங்க ஊருக்கு வந்தப்ப பாத்தேன்..ஆஸ்பத்திரில, எவ்வளவு பேரு வாழ்த்துறாங்க..பாவம் பாப்பா அந்தத் தம்பி...புரிஞ்சு பக்குவமா நடந்துக்காம ஏன் கஷ்டப்படுத்துறீக..

ஒங்க அம்மா அப்பாவும் பாவம்தானே பாப்பா..மனசுக்குள்ள மருகிப் போறாக..இத்தன நாள் சொல்லத் தயக்காமாருந்துச்சு..இன்னிக்கு என்னமோ மனசு தாங்கல..அதான் சொல்லிப்புட்டேன்.."

சுப்பம்மா சொல்லிக்கொண்டேசேலையை இழுத்துச் சொருகியபடி புழக்கடைப்பக்கம் போக, அடுக்களையில் இருந்து காபி குடித்தபடியே வந்த சாரதா, வித்யாவின் முகத்தில் என்றும் இல்லாத மென்மையும் தெளிவும் பொலிவது கண்டு, பெருமூச்செறிந்தாள்.

Sunday, April 17, 2011

அவன் அவள் நாங்கள்

ரொம்ப நாள் கழித்துத் தியேட்டருக்கு இன்று வந்தோம்..எப்போதும் ஏதாவது ஒரு அலுவல்..தட்டிக் கழித்துவந்த என் கணவர் மனம் வந்து இன்று ஒருவழியாகப் படத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்...சீக்கிரமே வந்துவிட்டதால் தியேட்டருக்கு வருபவர்களை நோட்டம் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் அவர்கள் வந்தார்கள்...

வித்தியாசமான அவள் முக பாவத்தைப் பார்த்ததுமே தெரிந்தது..அந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டவள் என்பது..கூட வந்த ஆண் சுற்று முற்றும் பார்த்துவிட்டு இரண்டு வரிசை முன்னால் அமர்ந்தான்...கடைசி வரிசையில் நாங்கள் இருந்தோம்...உட்கார்ந்த மாத்திரத்திலேயே அவன் மேல் சாய்ந்து உட்கார்ந்தாள் அவள்...அவன் தோள் மீது கைகள் போட, அவளிடம் குனிந்து ஏதோ பேசி மெல்லிதாக அவள் கைகளை விலக்கினான் அவன்...சற்றே விலகிச் சுற்று முற்றும் பார்த்தவள் அவன் கைகளை எடுத்துத் தன் கைகளுடன் பின்னிக் கொண்டாள்..சட்டென்று அவன் கைகளில் ஒரு முத்தமும் கொடுத்தாள்...மீண்டும் அவன் குனிந்து ஏதோ சொல்ல விலகினாள்...

அய்யோ படமே இன்னும் ஆரம்பிக்கலை..இவ்வளவு வெளிச்சத்திலேயே இப்படின்னா....இன்னும் விளக்கு அணைந்தால்...நல்ல வேளை கோடை விடுமுறைக்குக் குழந்தைகள் பாட்டி வீடு சென்றுள்ளதால், அவர்கள் வரவில்லை...வேறு யாராவது வந்து சேர மாட்டார்களா என்றிருந்தது அந்தப்பெண் அடித்த கூத்து....அவள் ஏதாவது செய்வதும், அவன் குனிந்து பேசுவதும், அவள் விலகுவதும்...தொடர்ந்தது..பாக்ஸ் என்பதால் குறைந்த இருக்கைகளே இருந்தன...

இது என்னடா வித்தியாசமாருக்கு...சில்மிஷங்கள் எல்லாம் ஆண்தான் செய்வான் என்றால்..இங்கே இப்படி...அந்தப் பெண் மேல் இரக்கம்தான் வந்தது..அந்தப் பாவி எந்த அளவுக்கு இப்பெண்ணிடம் பழகியிருந்தால் இவள் இந்த அளவுக்குத் துணிவாள்..அது சரி பாவம் அவளுக்கென்ன செய்கிறோம் என்று புரியவா போகிறது?!

ஏன் அங்கேயே பாக்குற...சும்மா இரேன்..

ஏங்க..தள்ளிட்டு வந்துருப்பானோ...

அதுல என்ன சந்தேகம்? நிச்சயமா அதுதான்..

எங்கேயிருந்து வந்திருக்கும் இந்தப்பெண்?

எப்படிங்க இப்படில்லாம்...எப்படித்தான் மனசு வருதோ..பாத்தா நமக்கே பாவமாருக்கு..

சும்மா இருக்க மாட்டே...

இப்படித் தள்ளிட்டு வர்றவங்களுக்கெல்லாம் தண்டனை குடுக்க சட்டம் இல்லியோ...இதுவும் ஈவ் டீஸிங்ல வருமா?
சின்னப் பசங்கதான் இப்படிக் கூத்தடிக்குதுன்னா..இதுங்களுமா இப்படி...

நமக்கேன் வீண் பேச்சு..படம் ஆரம்பிச்சாச்சு...படத்தை ஒழுங்காப் பாரு..

மெல்லிய இருளைத் துளைத்த திரை வெளிச்சம் பரவ...கண்கள் படத்தைப் பார்த்தாலும் அவ்வப்போது அவர்களைப் பார்க்கத் தவறவில்லை என் கண்கள்....படம் போட்டதும் கைதட்டிப் படத்தைப் பார்க்க ஆரம்பித்தாள் அவள்...ஆனால் திடீரென்று அவன் மேல் மீண்டும் சாய்ந்து கொள்ள...

பேசாம படத்தைப் பாரு..என் கைகிள்ளினார் இவர்...

திடீரென்று நாலு இளைஞர்கள் வந்தார்கள்...எங்களுக்கும் அந்த ஜோடிக்கும் இடையே இருந்த இருக்கையில் அமர்ந்தார்கள்...

அய்யோ...இவர்கள் இதைப் பார்த்து..என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ....நல்ல நாள் பாத்து வந்து தொலைச்சோம் படத்துக்கு...ச்சே!

அந்தப் பெண் என்ன செய்தாளோ என்னவோ.. திடீரென்று அவர்கள் எழுந்து வந்து எங்கள் வரிசையின் அடுத்த ஓரத்தில் அமர்ந்தார்கள்...

திரும்பிப்பாத்தே கொன்னுடுவேன் உன்னை...இவர் மிரட்டுகிறார்...

ஆனாலும் ஓரக்கண்ணில் இந்தக் காட்சிகளைக் காணத் தவறவில்லை நான்...இவருக்கு மட்டும் எப்படித்தான் வேறெந்த சிந்தனையும் இல்லாமல், தொந்தரவு இல்லாமல் படத்தைப் பார்க்க முடிகிறதோ தெரியவில்லை...

கண்களை மீட்டெடுத்துத் திரைப்பக்கம் திருப்பினாலும்...அவ்வப்போது அங்கேயேதான் போகிறது..

ஒரு வழியாய் இடைவேளை வந்தது...வெளியே அவன் போகும் போது அவன் கையைப் பிடித்துக்கொண்டே அந்தப் பெண்ணும் பின்னால் சென்றது..

கோன் ஐஸ் வாங்கிக் கொண்டு வந்தார்கள்...ஆமாமா இந்த மூஞ்சிக்கு இது வேறு...கையில் வழிய வழிய அந்தப் பெண் சாப்பிடச் சாப்பிட அவன் கைக்குட்டையால் அதைத் துடைத்துக் கொண்டேயிருந்தான்....ரொம்ப அவசியம்தான்...சாப்பிடும் வரையில் சும்மா இருந்த அவள் மீண்டும் தன் வேலையை ஆரம்பிக்க....ஏதோ குனிந்து அவளிடம் சிரித்துப்
பேசினான்..நல்ல வேளையாக அந்த இளைஞர்கள் இன்னும் வரவில்லை...இவ்ள நேரம் இவன் சும்மா இருந்த மாதிரி இருந்துச்சு....இப்ப இவனும் ஆரம்பிச்சுட்டானா...


நினைத்துக் கொண்டிருந்த போது அவனும் அவளும் புறப்பட ஆயத்தமானது தெரிந்தது..போலாம்மா...என்று அவன் கெஞ்ச...ம்ஹும் படம் பாக்கணும் என்று அவள் குழறுமொழியில் கொஞ்ச...எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது...ஒழிந்து போங்கள்....வீடு வாசல் இல்லேன்னா லாட்ஜுக்குப் போய்த் தொலைய வேண்டியதுதானே...

காபி வாங்கப் போனவர் என்ன இன்னும் காணோம்..அந்த இளைஞர்களையும் காணவில்லை..இவரையும் என்ன இன்னும் காணவில்லை...அங்கே தனியாக அதுகளுடன் இருக்க பயமாகக்கூட இருந்தது..

அதோ..கூட யார் பாலு அண்ணாவும் வருகிறார்...

என்ன அண்ணா படம் பாக்க வந்தீங்களா நீங்களும்..

ஆமாம்மா....நண்பர்களுடன் வந்தேன்...கீழே உட்கார்ந்திருக்கோம் நாங்க..என்றவர்...

ஹலோ முரளி..எப்படியிருக்கீங்க...விமலா எப்படிம்மா இருக்கே என்று அவனையும் அவளையும் பார்த்துக் கேட்க...

நல்லாருக்கோம்...என்ன பாலு  இந்த வாரம் வீட்டுக்கே வரலை..ஃப்ரீயா இருக்கப்ப வாங்க.....இதுக்கு மேல தாங்காது...ஏதோ ஆசப்பட்டாளேன்னு வந்தேன்....நாங்க கிளம்புறோம்னு சொல்லிவிட்டுப் புறப்பட்டார்கள் இருவரும்.

இவன் என் ஃப்ரெண்ட்..எவ்ள நல்ல மனுஷன்..நல்லாருக்க பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணவே அவன் அவன் யோசிக்கும் போது, இவனுக்கு ரொம்ப நல்ல மனசு..போன மாசம்தான் கல்யாணம் ஆச்சு..புத்தி சுவாதீனம் இல்லாத அல்லது ஊனமுற்ற ஒரு பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னான்...வீட்ல இவங்க அம்மா எதிர்த்தும் கூட இப்படி ஒரு பொண்ணத் தேடிப் புடிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டான்...பாவம்னு அவன் அம்மாவும் சமாதானமாய்ட்டாங்க...முகம் கோணாம எப்படிப் பாத்துக்குறான் தெரியுமா...

பாலு அண்ணா சொல்லிகொண்டே நான் கூனிக் குறுகிப் போனேன்...ஏன் இவர்கள் உறவு பற்றி நல்லதாய், ஆரோக்கியமாய் ஒரு சிந்தனை எங்களுக்கு வராமல் போனது...என் கணவரை நான் பார்க்க அவரும் தர்மசங்கடத்தில் நெளிவது புரிந்தது...பாலு அண்ணா சென்றதும் திரைப்படம் தொடர....ஏதோ ஒரு புரிதலுடன் அவர் கையை என் கைக்குள் வைத்துக்கொண்டேன்...

Thursday, March 10, 2011

கண்ணாடிப்பெட்டியும் கலிஃபோர்னியாவும் காத்திருத்தலும்


ஆச்சு...ராமநாதன் போய்ச் சேர்ந்து சரியா இருபத்து நாலு மணி நேரம் முடியப் போகிறது...இறுதிக்காரியங்கள் முடிந்திருக்க வேண்டிய நிலையில் கலிஃபோர்னியாவிலிருந்து வரவேண்டிய மூத்த மகன் கண்ணனுக்காய்க் காத்திருக்கிறார்கள்...

மதுரை மையப்பகுதிலிருந்து சற்றே ஒதுக்குப்புறமான ஐயர் பங்களா பகுதியில் இருந்தது ராமநாதன் வீடு..ஒரு மகன் கலிஃபோர்னியாவில், இரண்டாவது மகன் பெங்களூரில், மூன்றாவது பெண் சென்னையில்...
இவ்வீட்டில் ராமநாதனும், அவர் மனைவி பரிமளாவும் மட்டுமே வாசம்...

பெரிய தோட்டம்...அதை மொத்தமாக அடைத்துப் போடப்பட்டிருந்த ஷாமியானாப் பந்தல்..வீட்டுக்கு வெளியே அகலமான தெரு என்பதால் நல்ல வேளையாக உட்காரும் இடத்துக்குப்பஞ்சமில்லை...

முருகனும், அவன் மனைவியும் எல்லாவேலைகளையும் முன் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தனர்..முருகன் பரிமளாவுக்குத் தம்பிமுறை ...கிராமத்தில் விவசாயம் பார்த்துக்கொண்டிருந்த அவர்களைத் தங்களுக்குத் துணைக்காக மதுரைக்கு வரவழைத்துக்கொண்டார்கள். அவர்கள் பிள்ளைகள் விடுதியில் தங்கிப் படிக்கின்றனர்.

சட்டென்று ஒரு நாள் இரவு வந்த நெஞ்சுவலியில் தூக்கத்திலேயே போய்விட்டார் ராமநாதன்..முதல் சில மணி நேரங்கள் குளிப்பாட்டுதல், சங்கு சவுண்டிக்கு ஆள் சொல்லுதல், கண்ணாடிப்பெட்டி ஏற்பாடு, ஆர்ப்பட்டமான அழுகை என்று ஆரம்பித்தது..தொடர்ந்தது...

*********

ராஜா..அப்பா போய்ட்டாருடா...பெங்களூரிலிருந்து வந்துவிட்டது இரண்டாவது மகன் ராஜேஷ் குடும்பம்...அவனும் வாய்பொத்தி அழுது, அம்மாவை அணைத்து ஆறுதல் சொல்லி அடுத்தடுத்த ஏற்பாடுகளைக் கவனிக்கலானான்.

இந்தா இருக்கு பெங்களூரு..இவன் வரவே இவ்வளவு நேரமாகிவிட்டதே...கண்ணன் எப்போ வரப்போறானோ...

ஃபிளைட் ஏறிட்டானாம்...மாறி மாறி வரணுமில்லியா...லாங் ஜர்னி....நாளைக்குச் சாயந்திரம் வருவானாம்...

போன மாசம் என் நண்பன் செத்தப்போ அவன் மகன் துபாய்லருந்துதான்ன்னு நெனக்கிறேன் ..அவன் உடனே வந்துட்டானே...

துபாய் பக்கம்யா...இது ரொம்பத் தூரம்...பெருசாச் சொல்றியே..அதுவும் சரியான கிழமைல இங்க செத்திருக்கணும்..அவனுக்கு லீவு நாளாப்பாத்துச் சாகணும்..இல்லேன்னா வர்றது கஷ்டம்.. என் பெரியம்மா இறந்தப்போ, சவூதிலருந்து அவங்க பையனால வர முடியல...பாஸ்போர்ட் புதுப்பிச்சு வந்திருக்கு...இவங்க புதன்கிழமை செத்துட்டாங்க...வியாழன் வெள்ளி லீவு...அவன் வரவும் ரெண்டு நாளாச்சு..

வெளிநாட்டச் சொல்றீங்களே...இந்தாருக்கு டில்லி நம்ம நாட்லயே....பிரகாஷ் அவங்க அப்பா சாவுக்கு வந்தப்ப ஃபிளைட் ஸ்ட்ரைக் அது இதுன்னு மும்பைல வந்து மாட்டிட்டு இங்க வரவே ரெண்டாவது நாளாயிடுச்சே...

இந்த விஷயத்துல ஒண்ணும் சொல்ல முடியாது...அவங்க அவங்க நேரம் காலம்..

***********

பூமா, ராமநாதன் மகளும் குடும்பத்தோடு வந்து சேர்ந்தாள்...அழுகை, ஆர்ப்பாட்டம் ஓய்ந்த பின் அவள் கணவன் அவளை ஜாடை செய்து வெளியே அழைத்தான்..

பூமா...அப்பா, அம்மாவை இங்க தங்க வைக்க முடியாது...பக்கத்துல நல்ல ஹோட்டல் விசாரி..அவங்களைப்போய்த் தங்க வச்சுட்டு வந்துர்றேன்..கடைசி நேரம் அவங்க வந்தாப்போதும்...

சரி..முருகன் மாமாவைக் கேட்டு ஏற்பாடு பண்ணிக்கோங்க..

அவனுக்கு மதுரை ஒன்றும் தெரியாத ஊரில்லை..இருந்தாலும் மனைவியிடம் சொன்னால், அவள் வீட்டுச் செலவாகிவிடும் அல்லவா!

***************

ஏ...காப்பி குடுப்பா...சர்க்கரை போடாதே...காபியை வாங்கிக் குடித்துக் கொண்டே வந்தார் உறவினர் ஒருவர்..கன்னியப்பன் கேட்டரிங் சர்வீசாரை வரவழைத்து வந்திருந்தவர்களுக்குத் தாகசாந்தி செய்வித்தார்கள்..

எப்போதும் காப்பி, உணவு வேளைகளில் சித்ரான்னம், சப்பாத்தி, கறி, இட்லி, சட்னி, சாம்பார் என்று ஒரு பக்கம் வந்தவர் பசி ஆறிக்கொண்டிருந்தது..

என்னங்க...இந்தக் கேட்டரிங் சர்வீஸ் நம்பர் வாங்கி வச்சுக்கோங்க...நாளைப்பின்ன நமக்கு உபயோகப்படும்...ஒரு மருமகளின் பொறுப்பான கவலை..அவள் கவலை அவளுக்குத்தானே தெரியும்...வயதான மாமனார், மாமியார் அவர்கள் பொறுப்பில் இருக்க, மூத்தார் குடும்பம் சிங்கப்பூரில்...


**************

யப்பப்பா...இழவு வீட்டில் இத்தனை வேலைகள் இருக்கிறதா...பார்த்துப் பார்த்து மாய்ந்து போனது கார்த்திக் மனம்...ராமநாதனுக்குத் தூரத்து சொந்தம்..கார்த்திக் ஓர் இந்தக்கால இளசு ...வேலையில்லாப் பட்டதாரி..

பார்த்துப் பார்த்துச் செய்வதற்கு எல்லார் வீட்லயுமா ஒரு முருகன் இருக்க முடியும்..

கண்ணாடிப்பெட்டி, சங்கு, சவுண்டி, கேட்டரிங், பந்தல், விளக்கு, மின்சாரம் போனால் கண்ணாடிப்பெட்டி இயங்க ஜெனரேட்டர், வருவோர் போவோர் முறை செய்ய ஜவுளி வாங்கப் போய் வர ஆட்டோ ஏற்பாடு, பட்டாசு, போஸ்டர், மேளம், ஒயிலாட்டம், ஒப்பாரி ஏற்பாடு, இறுதி ஊர்வல ஏற்பாடு, மயான ஏற்பாடு...இன்னும் இன்னும்...

போனில் நண்பனிடம் பேசினான் கார்த்திக்...டே மச்சி...கல்யாண வீடு மாதிரியே சாவு வீட்டில் கூட எவ்ள வேலைடா...பேசாம நாம இதுக்காக ஒரு காண்டிராக்டிங் சர்வீஸ் ஆரம்பிச்சுரலாம்...சேவை செஞ்ச புண்ணியமும் சேரும்...வேலை கிடச்ச மாதிரியும் இருக்கும்..
மச்சி..சிரிக்காதடா..சீரியஸாச் சொல்றேன்..

**********

உலகக் கோப்பை கிரிக்கெட் பிரியர்கள் வேறு..அவ்வப்போது போனில் ஸ்கோர் கேட்டார்கள் ஆரம்பத்தில்..பின் மெதுவாக ராஜேஷிடம் சொல்லி டிவியைத் தோட்டத்துப் பக்கம் கொண்டுவரச்செய்து விளையாட்டைப் பார்க்க ஆரம்பித்தார்கள்...நடுநடுவில் கூட்டணிக் களேபரத்துக் குளறுபடிச் செய்திகள் வேறு...அடுத்து யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற அலசல்கள், உரசல்கள் வேறு..

அய்யோ...கோபி, மகாவுக்கு ராமேஸ்வரத்தில் கல்யாணம் ஆச்சோ இல்லியோ தெரியலியே...ஒரே கலாட்டாவா இருந்துச்சு...ஒரு மனைவி அங்கலாய்க்க..

கணவன் அப்பாவியாய்ச் சொன்னான்........போன் போட்டுக் கேட்க வேண்டியதுதானே..

அய்யோ..அய்யோ...இது நாதஸ்வரம் சீரியல் கோபி, மகா...உங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது..

ரொம்ப அவசியம்...

ஆமா எவனோ எவனோடயோ ஆடறான்...இந்தியா கூட இல்ல...உங்களுக்கு மட்டும் சாவு வீட்லயும் கிரிக்கெட்டும், அரசியலும் கேக்குதோ...ஒரு நிமிஷம் சானல் மாத்தி வச்சா என்ன குறஞ்சா போய்டுவீங்க...

************

வீட்டுக்குள்ள இருக்க முடியல...என்னதான் ஐஸ் பொட்டின்னாலும் சரியா வராது போலிருக்கு...ஏதோ வாசனை வர மாதிரி இருக்கு..இந்தக் கண்ணன் எப்போதான் வரப்போறானோ..

பிள்ளைகள் தனியா விட்டுட்டு வந்திருக்கேன்....

ஆபிசில் ஆடிட் நடக்குது...லீவு போட முடியாது..
பெரியப்பா பிள்ளை கல்யாணத்துக்குப் போகணும்..

காரியத்தவாது பத்து பதினைஞ்சு நாள்னு நீட்டிட்டுப் போகாம உடனே சட்டுப் புட்டுன்னு முடிச்சா நல்லாருக்கும்..அதுக்கு வேற லீவு போட்டுட்டு இவ்ள தூரம் வர முடியாது...

சான்ஸே இல்ல..காரியத்துக்குத்தும் சேத்துதான் இங்க உக்காந்தாச்சே...காரியத்துக்கு வேற எங்க வர்றது..

இப்படி அவரவர் வேலை அவரவர்க்கு...

************
இரண்டாம் நாள் இரவு வந்து சேர்ந்தான் கலிஃபோர்னியாக் கண்ணன்...

ஆமா...அவன் மட்டும் வந்திருக்கான்..பொண்டாட்டி பிள்ளைகளைக் காணோம்...

பிள்ளைகளுக்குப் பரீட்சை...அவளுக்கு லீவு கிடைக்கலியாம்..போன மாசம்தான் தங்கச்சி கல்யாணத்துக்கு வந்துட்டுப் போயிருக்கா...

*************

ஒரு வழியாக ராமநாதன் இறந்து ஐம்பத்தைந்து மணிநேரங்கள் கடந்த நிலையில் இறுதிக்காரியங்கள் நடந்தேறின. நெஞ்சு வலியால் ஒரு முறை செத்த அவர், சூழ்நிலைகளால் மீண்டும் மீண்டும் சாகடிக்கப்பட்டார்.

கண்ணன் கிளம்பும்போது அம்மா சொன்னாள்: நான்லாம் செத்தா உடனே எல்லாத்தையும் முடிச்சுடுங்கடா....அவங்க அவங்க சவுகரியத்துக்குப் பதினோராம் நாள் காரியத்துக்கு வந்தால் போதும்....யாருக்கும் கஷ்டம் வேணாம்..

Tuesday, January 4, 2011

வல்லவன் வில் - விமர்சிப்பது நல்லகண்ணன்

'உஸ் அப்பாடா...' என்று வீட்டிற்குள் நுழைந்த நல்லகண்ணன் காலை ஓடி வந்து கட்டிக் கொண்டாள் கீர்த்தி. கீர்த்தி, நல்லகண்ணன் - உமா தம்பதியரின் செல்ல மகள்.

நல்லகண்ணன்  ஒரு வார இதழின் சினிமா விமர்சகன். நடுநிலையான நல்ல விமர்சகர் என்று பரவலாகப் பலரும் பாராட்டும் புகழ் அவனுக்குண்டு. இது மேற்படி வருமானத்துக்கான பகுதி நேர வேலைதான். மற்றபடி தனியார் நிறுவனமொன்றில் சொற்பமான சம்பளத்துக்கு வேலை செய்து, தேதி இருபதைத் தாண்டுகையில் அடுத்த மாதம் எப்போது பிறக்கும் என்று நாட்காட்டியைப் பார்த்துக் குடும்பம் நடுத்துகின்ற கீழடுக்கு நடுத்தர வர்க்கம்.


'இந்தாங்க..' தண்ணீர் லோட்டாவைத் தந்தாள் உமா.


'என்னங்க...'வல்லவன் வில்' படத்துக்கு உங்கள் விமர்சனம் படிச்சாங்களாம் மல்லிகாக்கா...அவங்க மனசுல இருக்கிறதை அப்படியே சொல்லிருக்கீங்களாமே....புத்தகம் கொடுத்துட்டுப் போனாங்க....படிக்கணும். நல்லாருக்கா படம்? என்ன எழுதிருக்கீங்க'....என்றவள் குழந்தையைப் பார்த்துக் கொள்ள அவன் வந்துவிட்ட திருப்தியில் பக்கங்களைப் புரட்டிப் படிக்க ஆரம்பித்தாள். படத்தின் நாயகன் அவள் மனம் கவர்ந்தவர் ஆயிற்றே.



'என்னங்க...எல்லாரும் படம் நல்லாருக்குன்றாங்க. நீங்க இப்படி பாடாவதின்ற மாதிரி எழுதிருக்கீங்க....அதானே..மல்லிகாக்கா எப்படி இப்படிப் பாராட்டுனாங்கன்னு நான் அப்பவே நெனச்சேன். அவங்களும் உங்கள மாதிரிதான். எதையும் நல்லாருக்குன்னு அவ்வளவு சுலபமாச் சொல்லிர மனசு வராது.'



'காபி கொண்டு வா உமா'...'கீர்த்திக்குட்டி..அது மேல ஏறாத..விழுந்துறப் போற..'



'இந்த வாரம் இந்தப் படத்துக்குப் போலாம்னு நெனச்சேன்....நீங்க இப்படி எழுதிருக்கதைப் பாத்தாத் திரும்பியும் ஒரு வாட்டி பாப்பீங்களான்னு சந்தேகமாருக்குங்க...'


'...........'


'என்ன..பதிலே காணோம்...அவ்ள மோசமாவாருக்கு படம்?'


'யப்பா...உங்காளு நடிச்ச படம்னவுடன எவ்வளவு ஆர்வம் உமா உனக்கு?'


' ஆமாமா..கதநாயகியத்தான் மாஞ்சு மாஞ்சு வர்ணிச்சுருக்கீங்களே...'


அவளின் உதட்டுச் சுழிப்பை ரசித்தவன் சட்டப்பையிலிருந்து இரண்டு நுழைவுச்சீட்டுகளை எடுத்தான்.


'இந்தா... இந்த வாரம் வெள்ளிக்கிழமை அந்தப் படத்துக்குப் போறோம்...'


புருவத்தை நெறித்து அவனைப் பார்த்த உமா, தொடர்ந்து வந்த அவன் பேச்சைக் கேட்டு இன்னும் ஆச்சரியமானாள்.


'இயல்பா ஓடுற எதார்த்தமான படம். சந்தேகப் புத்தினால வர்ற கேடு, இப்ப சில டிவி சானல்கள் நடத்துற சில கேடுகெட்ட நிகழ்ச்சிகள், சில பணக்காரப் புத்திகள், கொஞ்சம் சோகம், கொஞ்சம் மிகை, கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் அத்துமீறல்கள், கொஞ்சம் குழப்பம், தவிர்த்திருக்க வேண்டிய விஷயங்கள்.....இப்டில்லாம் நிகழ்ச்சிகள் தொட்டுக்காட்டி எழுதணும்னு ஆசைதான்.



ஆனா அதுக்கெல்லாம் எனக்குச் சுதந்திரம் இல்ல உமா.....எவ்வளவு மோசமா எழுதணுமோ அவ்வளவு மோசமா எழுதணும்...நேரடியா இல்லாம மறைமுகமா...படத்தை விட. படத்தின் இயக்குநரைவிட, மத்த விஷயங்களவிடப் படத்தின் நாயகனத் தாக்கணும்னு எனக்கு உத்தரவு....


ஆங்கிலப்படத்தின் அப்பட்ட காப்பி, தன் கேவலமான கருத்துகளை நாசூக்காய் வெளியிட்டு வேஷம் போடும் நாயகன்......அவர் சொந்த வாழ்க்கை பிரதிபலிப்பு, ஆத்திகம் / நாத்திகம் என்றெல்லாம் விமர்சனம் எழுதவேண்டிய தலையெழுத்து...


இப்ப 'தந்திரன்' படத்துக்கு என்ன எழுதுனேன்....ஆஹா..ஓஹோ...
ஆங்கிலப்படத்திற்கு நிகரான தமிழ்ப்படம்....நினைக்கவே முடியாத பட்ஜெட்டில் எடுத்த படம்.....மறந்தும் கூட நடிகரின் சொந்த வாழ்க்கைய விமர்சனத்தில் இழுக்கக்கூடாது...அதுவும் உத்தரவுதான்...என் எண்ணங்கள் சிலவற்றை மறைச்சு, நடுநிலை மறந்துதான் எழுதவேண்டிருக்கு.


என் சொந்த நினைப்பை நண்பர்கள்கிட்டக் கூடப் பகிர்ந்துக்க முடியாது....வெளிய தெரியாமருக்கணுமே...அலுத்துப்போச்சு உமா..

ஆங்கிலப்படச் சாயல் இருப்பதை ஒருபடத்தில் தூக்கி எழுதிவிட்டு, அடுத்த படத்தில் தாக்குவது...எனக்கே கொஞ்சம் அசிங்கமாத்தான் இருக்கு....என்ன பண்றது சொல்லு?


இதுல சம்பந்தப்பட்ட நாயகனின் ரசிகர்களிடமிருந்து மிரட்டல் கடிதங்கள் வேற போட்டுத் தாக்குது....


நடுநிலைமையோட விமர்சனம் எழுதுறது சொந்த விருப்பு வெறுப்பு இருக்குற ஒரு சாதாரண மனுஷனுக்கு ரொம்பச் சுலபமான காரியமில்ல. இருந்தும்  இப்டில்லாம் பண்ண வேண்டிருக்கு.


நல்லவேள...சமுதாய விமர்சனம் பண்ற வேல எனக்கில்ல...அதுலயும் இப்படி எழுத வேண்டிய கட்டாயம் இருந்துச்சுன்னா....கஷ்டம்தான்..




வேற நல்ல வேலை பாத்துட்டு இருக்கேன். கெடச்சதும் சீக்கிரம் இந்த வேலைய விட்டுறலாம்னு இருக்கேன்.... '



குறிப்பு: இது யாரையும் எதற்காகவும் தாக்க எழுதப்பட்டதல்ல...பார்வைகள் நபருக்கு நபர் எப்படி வேறுபடுகின்றன, விமர்சனங்கள் எப்படி,  எதனால் மாறுபடுகின்றன, விமர்சனம் செய்வது சுலபமான காரியமா, விமர்சகர்கள் மனநிலை எப்படியிருக்கும்என்று எண்ணிய விபரீத எண்ணத்தின் விளைவான கற்பனையே....

Monday, February 23, 2009

விஸிட் விஸா

ஷ்..ஷ்..ஷ்...குக்கர் விசில் அடிக்க, 'ஏய் மாலூ குக்கரை
நிறுத்துடி..'குளியலறையில் துணிகளை இயந்திரத்துக்குள் திணித்துக்
கொண்டிருந்த சாந்தி கத்தினாள்.

அடுத்த இரண்டு நொடியில் மீண்டும் 'ஷ்..ஷ்..'இவ என்னிக்கிதான் சொன்ன பேச்சக்கேட்டிருக்கா' முணுமுணுத்தவாறே அடுக்களைக்கு விரைந்து அணைத்தாள். மீண்டும் குளியலறைக்கு விரைய,இப்போது போன்...
இன்னிக்கு என்ன நிம்மதியா ஒரு வேலையை முடிக்க முடியாது போலருக்கே...

'ஹலோ..'

'ஹலோ..வணக்கம் அண்ணி....நா முரளி பேசறேன்..அண்ணன் இருக்காரா...'

'இல்லியே முரளி. ஆபீசுக்குப் போயிட்டார்...மொபைல்ல பேசேன்..'

'முதல்ல அதுக்குதான் அடிச்சேன்..ஆனா எடுக்கவேல்ல...'

'ஏதும் சொல்லணுமா..'

'ஆமா..அம்மா விசாவுக்காகப் பாக்கச் சொல்லிருந்தாருல்ல...விசா கிடைச்சுருச்சு...கொஞ்சம் சொல்லிருங்க..நானும் அப்புறம் பேசறேன்..'
தூக்கிவாரிப்போட்டது அவளுக்கு..அய்யோ..இது வேறயா..'ம்.ம். சரிப்பா..நா சொல்லிர்றேன்..நீ நல்லாருக்கியா..என்னா வீட்டுப் பக்கம் வர்றதே இல்ல..'

'வர்றேன் அண்ணி..நேரம் கிடக்கிறப்ப..அவர்கிட்ட சொல்லிருங்க..வச்சுர்றேன்..'
போனை வைத்தவள் அப்படியே உட்கார்ந்துவிட்டாள். என்ன ஒரு தைரியம் இவருக்கு..என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம..

அவர்கள் வசிப்பது ரியாத்தில்.இருவரும் வேலைக்குப் போகிற அவசரம்தான்..இன்று நாலாவது வியாழன் என்பதால் அவளுக்கு விடுமுறை. பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறாள் சாந்தி. கணவன் மனோகர் ஒரு கணினிப் பொறியாளர். எப்போதும் தலையைப் பிய்க்கிற வேலைதான்..என்ன இருந்தாலும் அவங்கம்மா வருவது சின்ன விஷயமா...இத ஏன் எங்கிட்ட சொல்லாம இருக்கணும்...இங்கே இருக்கிற பரபரப்பில்.. இருக்கிற தலைவலில இது வேறயா..எவ்வளவு செலவாச்சோ...

பிள்ளைகள் படுக்கையறையில் ஒரே சத்தம்...மாலுவுக்கும் பூஜாவுக்கும் சண்டையோ சண்டை...பெரியவள் மாலதி 8வது வகுப்பு..சிறியவள் பூஜா 6ம் வகுப்பு..

ஏ...பரிட்சைக்குப் படிங்களேண்டி...மார்க் குறையட்டும்...கொன்னுர்றேன் ..ஆமா..உங்க முத்துலட்சுமிப் பாட்டி வர்றாங்களாமே..அப்பா ஏதும் சொன்னாரா..'

'ஹை...பாட்டி வர்றாங்களா..ஜாலி..' இருவருக்கும் கொண்டாட்டம்...

'ஆமா..வர்றாங்க...எனக்கு ஒரு வார்த்தை சொன்னாரா உங்கப்பா...'

'மறந்துருப்பார்...இல்லேன்னா சொன்னப்போ நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்கம்மா..'இது மாலு.

'சரி..பாட்டி நம்ம ரூம்ல தங்கட்டும்....' இது பூஜா...

இவளின் அவஸ்தை தெரியாமல் அவர்கள் திட்டமிடத் தொடங்கினார்கள் தங்கள் சண்டையையும் மறந்து...

என்ன இருந்தாலும் ஒரே ரத்தம்..கொண்டாட்டம் வேற இந்தப் பொண்களுக்கு..எனக்குதான் அவஸ்தை..அய்யோ என்றிருந்தது அவளுக்கு...ரியாத் வந்து போன வயதானவர்கள் குறித்த அனுபவங்கள், தோழியரின் கலந்துரையாடல்கள் மனதுக்குள் முண்டியடித்துக் கொண்டு வந்தன..

ஒரு அம்மா சொன்னது...'என்ன ஊருடா இது..அமாவாசைக்குச் சோறு வைக்க ஒரு காக்கா குருவி கண்ல பாக்க முடியுதா...' வெளியே போறதுக்கே பையன் வந்தாதான் முடியும்..இதுல காக்காயாவது குருவியாவது..

இன்னுமொருவர்....என்னமோ போ எப்போ காரை எடுத்தாலும் குறுக்கே ஒரு பூனை போகுது தினம்...'இந்த சாஸ்திரமெல்லாம் இங்கே பாக்க முடியுமா?

அடுத்தவர்...'இங்கே தங்கமெல்லாம்தான் மலிவாச்சே..உன் தங்கைக்கு ஒரு பிஸ்கட் வேணுமாம்..வரும்போது வாங்கிட்டு வரச்
சொன்னா...'என்னமோ பிரிட்டானியா பிஸ்கட்னு நெனப்பு..

இந்தக் கதையெல்லாம் சொன்ன தோழிகள் தங்கள் இடர்களையும் சொல்லத் தவறவில்லை..

'காலேல எந்திரிச்சு எல்லாம் ரெடி பண்ணி வச்சுட்டு வரதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுது...நம்ம மட்டும்னா அட்ஜஸ்ட் பண்னிக்கலாம்..வேளாவேளைக்குப் புதுசாச்சமைக்கணுமாம்..யாருக்கு அதுக்கு நேரமிருக்கு..'இது ஒருத்தி.

'ஃப்ரிட்ஜைப் பாத்தாலே எங்க மாமியாருக்கு அலர்ஜியாருக்குது..ஊர் மாதிரி இங்கே சிக்கன், மீன் எல்லாம் புதுசாவா கிடைக்கும்..வாங்கி ஃப்ரிட்ஜ்லதான் வச்சாகணும்..எங்கத்தைஎன்னாடி செத்ததைச் சாகடிச்சுச் சாப்பிடுறீங்கன்னு கேக்கிறாங்க...மாசம் பொறந்தா அனுப்புற காசு மட்டும்தான் தெரியுது..இங்கே வந்தாதானே நம்ம அவஸ்தை புரியும்..'இது ஒருத்தி.

'புரிஞ்சுற கிரிஞ்சுறப் போகுது...உனக்கு நெனப்புதான்..இங்கே கூரையப் பிச்சுகிட்டுத் தெய்வம் கொடுக்குது..நம்ம ஜாலியா இருக்கிறோம்னு அவங்க நினப்பு தான் பெரிசு..நம்ம கஷ்டமெல்லாம்அவங்களுக்கு எங்க தெரியுது..' இது மற்றொருத்தி.

இதுல அனைத்தும் கலந்த கலவையாச்சே நம்ம அத்தை...இந்த மனுஷனுக்கு ஆனாலும் ரொம்ப அழுத்தம்..மூச்சு விட்டிருப்பாரா..மாமாவைத் தனியா விட்டுட்டு எப்படி வருவாங்கன்னு ஒரு நிமிஷமாச்சும் யோசனை வந்ததா அம்மாக்கும் புள்ளைக்கும்...இந்த விஷயம் அத்தை மாமாவுக்குத் தெரியுமா..மாமாவை விட்டுட்டுத் தனியா வருவாங்களா என்ன..ஏன் வராம..அதான் அவரைத்தனியா விட்டுட்டுத்தானே ஊர் சுத்துறாங்க..இதுல வெளிநாடுன்னா கேக்கவா வேணும்..

மவளே உன் பாடு திண்டாட்டம்தான்..இப்பவே படாத பாடு..இந்த ஆம்பளைங்களுக்கெல்லாம் நமக்கு இல்லாத பெத்த பாசம் எப்படித்தான் பொத்துகிட்டு வருதோ..நம்மையுந்தான் ஊட்டி வளத்தாங்க..இவங்களுக்குன்னு விசேஷமா என்னத்தைத்தான் ஊட்டி வளத்தாங்களோ..என்னமோ என் போறாத காலம்..

வீட்டு வேலைகளில் நேரம் போக..இடையிடையே மனோகருக்கு போன் செய்யத் தவறவில்லை அவள்..அவன் எடுத்தால்தானே..சரி சரி வரட்டும் இன்னிக்கு..கச்சேரிதான்..

மாலை 7.30 மனியளவில் வந்தான் மனோகர்...

வாண்டுகள் ரெண்டும் வானொலியாகினர்...'அப்பா பாட்டி வர்றாங்களாம்..'

'ஆமாடா..முரளி உனக்கும் போன் பண்ணானாமே சாந்தி...அத்தைக்குப் போன் பண்ணி இங்க வர்றதுக்கு ரெடியாகச் சொல்லு...குட்டிங்களா..சகுந்தலாப் பாட்டி வந்தா உங்களுக்குதான் ரொம்ப ஜாலி..'

'என்னப்பா சகுந்தலாப் பாட்டியா வராங்க..அம்மா முத்துப் பாட்டின்னுல்ல சொன்னாங்க...நீங்க அம்மாகிட்ட சொல்லலியாமே..'

'.....தாத்தா போனதுக்கப்புறம் பாட்டி தனியா இருக்காங்கள்ல...பாவம் உங்கம்மா சாந்தி...3 மாசம் விஸிட் விசா எடுத்தாச்சு..இப்போதான் எனக்கு நிம்மதியாருக்கு. பாரேன்..பிள்ளைங்களுக்கு என்ன குஷி..ஆமா..நா சொல்லலியா உங்கிட்ட..ஸாரி....மறந்துட்டேன்..விசா அனுப்பிச்சாச்சு..ஸ்டேம்ப்பிங் ஆக 10 நாளாகும்...அத்தைக்குப் போன் பண்ணிடு..லக்கேஜ்லாம் அதிகம் வேணாம்..வர்ற 15ந் தேதி ராம் வர்றான்..அவன் கூட வந்துரலாம்..' மனோகர் சொல்லிக் கொண்டே போக, சாந்திக்குதான் சொல்ல வார்த்தைகளின்றிப் போனது.

Tuesday, January 27, 2009

தாய்மை விதி


என்ன இவளை இன்னும் காணவில்லை..கடிகாரத்தைப் பார்த்தாள் சுவாதி..மணி காலை 7.15..7.16..அதோ அரக்கப் பரக்க ஓடி வருகிறாளே..


பாவம்.. வாடகை குறைவென்பதால் மூன்றாவது மாடியில் மொட்டைமாடி வீட்டில் இருந்து 40 நாள் குழந்தையையும் அதற்கான மூட்டைகள்,

இவளுக்கான மூட்டைகள் சுமந்து இறங்கி வந்து குழந்தையை நாலு தெரு தள்ளி இருக்கும் ஒரு பெண்ணிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு ரியாத்

காலை நேரப் போக்குவரத்து நெரிசலில் நீந்தி வருவதென்றால் சும்மாவா..


வழியில் இருந்த மேற்பார்வையாளரைப் பார்த்துச் சமாளித்து வகுப்பிற்குள் வந்தாள் வந்தனா.


'வந்து ரொம்ப நேரமாச்சா சுவாதி?'


'ம்ம்..6.50க்கு வந்தேன்..என்ன இன்னிக்கும் சிவப்புப் புள்ளிதானா ரிஜிஸ்தர்ல?'


'ஆமா..5 சிவப்புப் புள்ளி வந்தாச்சு 15 தேதிக்குள்ள..இப்பவே ஒரு நாள் சம்பளம் அம்பேல்..கொஞ்சம் இரு வந்திர்றேன்' ..வகுப்பறையில் நுழைந்த வந்தனா குழந்தைகளுக்குக் காலை வணக்கம் சொல்லிப் பணியைத் துவங்கினாள்.


நர்சரி வகுப்பின் இரண்டாவது வாரம்..ஒரே கூச்சலும் குழப்பமும் குவிந்த அறை..மலர்ந்தும் மலராத கண்களுடன் தூக்கத்தில் மலங்க மலங்க விழித்தபடி சில, புரியாத மழலை அரபியில் முனகிக் கொண்டு சில, அழுது தேம்பியபடி சில..இருந்தாலும் ஆசிரியையைக் கண்டதும் ஒரு மலர்ச்சி..ஒரு குழந்தையின் மூக்கைத் துடைத்து, பழச்சாறு குடிக்க முறபட்ட குழந்தையைச் சமாதானப்படுத்தி அதை உள்ளே வைத்து..ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாய்ச் சமாளித்து அவர்களுக்கான படிப்பு மற்றும் விளையாட்டுக் கருவிகளை ஒவ்வொரு குழந்தையின் முன் எடுத்து வைத்தபடியே பேசினாள் வந்தனா..


'இன்னிக்கே தமாம் போகணுமா என்ன..ஒரு நாள் இருந்துட்டுப் போயேன்..'


'இல்ல. ராகுல் தனியா இருப்பானே.'


'கூட்டிட்டு வந்திருக்கலாம்ல அவனையும்..'


'உடனே திரும்பணுமே. அதான் கூட்டிட்டு வரலை. அவனும் பள்ளிக்கு லீவே

போடமாட்டான். பக்கத்து வீட்ல இருப்பான். உன்னைப் பாக்கலாமேன்னு

நான் வந்தேன். ராத்திரிக்குள்ளதான் போய்ருவோமே...'


இருவரும் பள்ளிப்பிராயத்துத் தோழிகள். கல்யாணமாகி வெளிநாடு வந்தும் நட்பு தொடரும் கொடுப்பினை வாய்த்தவர்கள். ரியாத்திலேயே இருந்தவர்கள்தான். ஆனால் இப்போது சுவாதியின் கணவனுக்கு தமாம் மாற்றலாகிவிட்டது.


முதலில் இந்தப் பள்ளியில்தான் சுவாதியும் வேலை செய்தாள். ஆனால் இந்தியப் பிரிவில். வந்தனா வேலையில் இருப்பது அரேபியப் பிரிவில்.


அலுவலகப் பணிநிமித்தம் ரியாத் வரவேண்டியதால் இன்று இங்கே..


'இன்னும் இந்தியப் பிரிவிக்கு மாறலியா வந்தனா?'


'எங்கே..இதுல பழகியாச்சு..கொஞ்சம் அரபியும் பேச ஆரம்பிச்சுட்டேன்.. வேற யாரும் கிடைக்கல..அதான்..எங்கே மாத்தப் போறாங்க..'


'என்னக் கேட்டா இந்த நர்சரி, மர்றும் கே.ஜி. வகுப்பாசிரியர்களுக்குத்தான் சம்பளம் அதிகம் இருக்கணும். அதிகாரம் என் கையில் இருந்தா நான் அதான் பண்ணுவேன்..'


பேச்சும் வேலையுமாய்ப் போய்க் கொண்டிருக்கையில்..


சட்டென்று முகம் மாறினாள் வந்தனா. வலி பொறுக்க முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டாள்.


'இரு வர்றேன்..' போய்விட்டு அவள் திரும்பியபோது முகத்தில் வேதனை கொஞ்சம் குறைந்திருந்தது.


'இன்னும் பள்ளியில் குழந்தைகள் காப்பகம் வக்கலியா வந்தனா..'


'இடம் பத்தலன்னுதான் சொல்றாங்க இன்னும்..'


வேலையை விடவும் முடியாது. அவள் கணவனுக்குக் குறைவான சம்பளம், வீட்டு வாடகை, சாப்பாடு இத்தனை செலவையும் சமாளிக்க வேண்டுமே. குழந்தைக்குப் பாலூட்ட முடியாத கொடுமைதான்..


'என்னமோ போடி..கஷ்டமாருக்கு..உன் வீட்டுக்காரருக்கு நல்ல வேலை இன்னும் கிடைச்ச பாடில்லயா..'


'எங்கே..அங்கங்கே சொல்லி வச்சுருக்கு..கிடைக்கும்னு நினைக்கிறேன்..'


ஒரு குழந்தை ஓடி வந்து இன்னொரு குழந்தையைக் காட்டி அரபியில்

ஏதோ சொல்ல இவள் சென்று சமாதானப்படுத்தி வந்தாள்.


'அடுத்த மாசம் ஊருக்குப் போறேன், வந்தனா. அம்மாவைப் பாத்துட்டு வர்றேன்..ஏதும் கொடுக்கணுமா அவங்களுக்கு..'


'இல்ல..நா நல்லாருக்கேன்னு சொல்லு..வேற எதுவும் சொல்ல வேணாம். வீணாக் கஷ்டப்படுவாங்க..வெளிநாட்டுல மக நல்ல வாழ்க்கை ஏகபோகமா வாழ்றான்னு நெனச்சுக்கட்டும்..'


'ஊருக்காவது ஒரு நடை போயிட்டு வாயேன்..குழந்தையைப் பாக்க அங்க எல்லாருக்கும் ஆசையா இருக்குமில்ல..'


'போகணும்..'என்று வாய் சொல்ல இயலாமையில் மனம் தளும்பியது. 'நீயும் தமாம்ல வேற வேலை இவருக்கு முயற்சி பண்ணு..ரிலீஸ் கொடுப்பாங்க கம்பெனில..விசா மாத்தறது ப்ரச்னை இருக்காதாம். இவர் சொன்னார்..'


'கண்டிப்பா..ஏற்கனவே நல்ல வேலையாத்தான் உன் கணவருக்காகப் பாத்திட்டிருக்கார் இவர்..'


சுவாதியின் கைபேசி அவள் கணவர் வரவை அறிவிக்க விடைபெற்றுச் சென்றாள் அவள்.


குழந்தைகளுடன் பணியில் மூழ்கிப் போனாள் வந்தனா.


மீண்டும் வலி ....மீண்டும் ஓய்வறைக்குச் செல்லுதல்..என்று இது தொடர்ந்தது 3 முறை...


பள்ளி முடிந்து தனியார் வாகனத்தில்தான் செல்ல வேண்டும். அவள் கணவனால் மதியம் வர முடியாது..அந்தப்பெண்ணின் வீட்டுக்குப் போனாள்..


'இன்று என்னமோ கரைத்த பாலை இவ குடிக்கவே இல்ல..'என்றாள் அந்தப் பெண்.


சட்டென்று ரவிக்கை நனைந்ததைக் கருப்பு பர்தாவுக்குள் உணர முடிந்தது அவளால்.


'குட்டிம்மா..கொஞ்சம் இருங்க..இதோ வீட்டுக்குப் போய்ரலாம்...அப்புறம் வயிறு முட்டக் குடிக்கலாம்..'


மீண்டும் போக்குவரத்து நெரிசல்..இன்னும் அரை மணி தாமதம்..வழியில் அத்தனை குழந்தைகளையும் இறக்கி விட்டு வீடு வருவதற்குள் குழந்தை தூங்கிப் போய்விட்டது பசி மயக்கத்தில்..


படியேறிக் கதவைத் திறக்கையில் நெஞ்சு வலித்தது.


மீண்டும் அழ ஆரம்பித்தது குழந்தை.


....பைகளை விசிறிவிட்டுக் கருப்பு பர்தவைக் கழற்றிவிட்டுக் குழந்தையை வாரியணைத்துப் பாலூட்ட முற்பட்டாள்....பால் கட்டிக் கொண்டுவிட என்ன முயன்றும் முடியாமல் போக...


அதுவரை தொண்டை வரையில் அடைபட்டிருந்த தாழ்கள் திறந்து துக்கம் பீரிட மடிந்து சரிந்து அழ ஆரம்பித்தாள் வந்தனா.
பத்து மாதம் சுமக்க வேண்டும்
தாய்மை விதி..
பாலூட்டி வளர்க்க வேண்டும்
தாய்மை விதி..
இது என்ன விதி?

Thursday, November 27, 2008

சம்சாரம் அது எதார்த்தம்



பேருந்திலிருந்து இறங்கி நடந்தான் மாதவன்..லேசான தூறல்..
'இன்னும் விட்டபாடில்லையே இந்த மழை'
சற்றே வேகமாக நடையைப் போட்டான். பசுமலையில் ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்று இருக்கும் ஒரு மாத பட்ஜெட்டில் அவன் மற்றும் மனைவி காஞ்சனாவின் குடித்தனம். தனிக் குடித்தனம்தான்.


'இன்னும் விசேஷமில்லையா' என்ற அனைவரின் கேள்விக்கும் சிரிப்பும் மழுப்பலும் கலந்து அசடு வழிய ஆரம்பித்துவிட்ட, திருமணமான பத்து மாதங்கள் முடிந்த அந்தக் கால கட்டம். திருச்சி சொந்த ஊரென்றாலும் கடந்த 6 வருடங்களாக பணிநிமித்தம் மதுரை வாசம். தூரத்துச் சொந்தமொன்று திண்டுக்கல்லில் இருந்ததைக் கண்டுபிடித்து உறவு விட்டுப் போகக்கூடாதுன்னு அவன் அப்பா, அம்மா தேர்ந்தெடுத்த பெண்தான் காஞ்சனா.


6 மணிக்கு வீட்டுக்குச் சென்றதும் ஒரு குளியல், 6.15க்கு காபி, 7 மணிக்கு செய்தித்தாள் அலசல், 7.15 க்கு அவர்கள் வீட்டுக்கு வரும் பக்கத்து விட்டுக் குழந்தையுடன் கொஞ்சல், சரியாக 7.30 அளவில் தினமும் ஏதாவது ஒரு சாக்கில் ஆரம்பிக்கும் பக்கத்துவீட்டுச் சண்டை, 8 மணிக்கு டிவி செய்தி,
8.30 க்குக் காஞ்சனா சமைத்துவைத்த சாம்பார், அவரைக்காய் அல்லது பீன்ஸ் எதாவது ஒரு பொரியல்...இதை அள்ளி விழுங்கும் போது

'எப்பதான் ரகம் ரகமாச் சமைக்கக் கத்துக்கப்போற' ன்னு

தொண்டை வரை வந்து காணாமல் போகும் வார்த்தைகள்..8.45 ஆனதும் டிரஸ் மாற்றிக் கொண்டு...முதுகுப்பக்கம் துளைத்தெடுக்கும் மனைவியின்

'கிளம்பியாச்சா' என்கிற வழக்கமான கேள்வி..

'கதவைச் சாத்திக்கோ. சீக்கிரம் வந்துர்றேன்'
சீட்டுக் கச்சேரிக்குப் புறப்பாடு..மதுரை வந்த புதிதில் தனிமையை விரட்டத் தொடங்கிய பழக்கம் இன்னும் தொடர்கிறது அதே நேரம் தினமும் நண்பன் ராம் வீட்டில்.

இதுதான் அவர்கள் வாழ்க்கை அன்றாடம். 'அப்பாடா..மழை வராது இனிமே. வெறிச்சிருச்சு' என்று வீடு நெருங்கியவனுக்குப் பகீரென்றது.

வீட்டு வாசலில் பூட்டு.

'மாமா..அத்தை குடுக்கச் சொன்னாங்க' 7.15 மணிக்கு வரவேண்டிய குழந்தை 6 மணிக்கே வந்தது கையில் ஒரு பேப்பருடன்.

'அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு போன் வந்துச்சு. உங்க போன் லைன் கிடைக்கவேயில்ல..அதான் கிளம்புறேன். நிலமைய எப்டின்னு போன் பண்றேன். மஞ்சு அக்காவைப் பால் வாங்கிக் காச்சி வக்கச் சொல்லிருக்கேன். அடுப்படில சாப்பாடு இருக்கும். போட்டுச் சாப்பிடுங்க. போன் பண்றேன். நீங்களும் பண்ணுங்க. - காஞ்சனா.'

உடனே போனை எடுத்து அவங்க வீட்டு எண்ணைச் சுழற்ற அடித்துக்
கொண்டேயிருந்தது. மச்சான் எண்ணைச் சுழற்ற அதுவும் கிடைக்கவில்லை.

'சே' என்றிருந்தது அவனுக்கு. முன்னறையில் வழக்கமான ஒழுங்கு இல்லை.கண்ணாடி அருகில் சீப்பில் சுருண்டு கிடந்த காஞ்சனாவின் முடி, கொடியில் தொங்கிய அவளது ஆடைகள்...

'தம்பி..இந்தாங்க பால்..அவங்க அம்மாக்கு உடம்பு சரியில்லையாம்ப்பா. போன் போட்டுச்சு உனக்கு. கிடைக்கலியாம். நான் வேணா காபி போட்டுத் தரவா?'
மஞ்சு அக்கா.

'இல்லை..வேணாங்க்கா..நா சாப்பாடே சப்பிட்டுக்கிறேன். எத்தனை மணிக்கு போனா?'

'காலேல 10 மணியிருக்கும். சரி. தம்பி. எதுவும் வேணும்னாச் சொல்லிவிடுங்க.'
மஞ்சு போய் விட்டாள்.
பத்து மணிக்கே போயிட்டாளா..


...ஒவ்வொரு இடத்திலும் காஞ்சனாவின் வாசம், சுவாசம் மனதை நெருட சட்டையைக் கூடக் கழற்றாமல் நாற்காலியில் சரிந்தான் மாதவன்..
செய்தித்தாளில், காபியில், டிவியில் மனம் லயிக்கவில்லை. அவள் மெல்லிய கொலுசுச் சத்தம், பூவாசம் எல்லாம் கலந்து நினைவைப் புரட்ட துக்கம் தொண்டையை அடைத்தது அவனுக்கு.

'பாவம் அவள். ஒரு வெளியே தெருவே அழைச்சுட்டுப் போனதில்ல. சொல்லிக்கிறாப்புல ஒண்ணு வாங்கிக் கொடுத்ததில்ல. இனிமே இப்டி இருக்கக் கூடாது..' பிசைந்த சாம்பார் சாதம் இன்று புது ருசியுடன் இருந்தது.
ஆனாச் சாப்பிடத்தான் முடியவில்லை.

'இத்தனை நாள் ரொம்பத் தப்புப் பண்ணிட்டேன். யார் கேலி பண்ணாலும் பரவால்ல..இனிமே சீட்டுக் கச்சேரியைக் குறைச்சுக்கணும். அப்பப்ப வெளில கூட்டிட்டுப் போணும். அவளுந்தான் என்னிக்காவது வாயைத் தொறந்து ஒரு குறை சொல்லிருப்பாளா..' மனைவி மேல் காதல் பொங்கி பொங்கி வழிந்தது அவனுக்கு. கண்ணீருந்தான். ஆனா அதற்காக அவன் வெட்கப்படவில்லை. துடைத்துக்கொள்ளவுமில்லை.

மீண்டும் எண்களைச் சுழற்றினான். கிடைச்சால்தானே..ச்சே!
மணி 8.30. வாசலில் ஆட்டோச் சத்தம் கேட்க, காஞ்சனா வந்துவிட்டாள்.

'அத்தைக்கு இப்போ எப்டிருக்கு?'

'இப்ப நல்லாருக்காங்க. வழக்கமா வர்ற மூச்சு இரைப்புதான். உங்க போன் கிடைக்கல. நேரா ஆஸ்பத்திரிக்குப் போனேன். ஆக்ஸிஜன் கொடுத்திருக்காங்க. சாப்பிட்டீங்களா? சாயந்திரம் டிஸ்சார்ஜ் பண்ணிருப்பாங்க. நாந்தான் போட்டது போட்டபடி கிடக்குன்னுட்டு ஓடிவந்துட்டேன்..' பட படவென்று அவள் தொடர,

'கிளம்பியாச்சா' என்ற அவள் கேள்விக்கு முன்...



'கதவச் சாத்திக்கோ. சீக்கிரம் வந்துர்றேன்' மாதவனின் வழக்கமான புறப்பாடு..
*அப்பாடா..ரொம்ப நாளா நம்ம திவ்யா மாதிரிப் படத்தோட கதை போடணும்கிற ஆசை அரைகுறையாவாவது நிறைவேத்தியாச்சு...
* இது ஓ ஹென்றியின் 'The Pendulum' என்கிற ஆங்கிலச் சிறுகதையின் தழுவல்..

Monday, March 31, 2008

யார் பித்தன்?

இன்றைக்குக் கொஞ்சம் லேட்டாகிவிட்டது..அய்யோ பஸ் போயிருக்குமோ என்னவோ..அந்த ஆரப்பாளையம் நேர் பஸ்ஸை விட்டு விட்டால் பெரியார் பெருந்து நிலையம் போய் மறுபடியும் வேறு பஸ் பிடித்துப் போவதற்கு நேரமிருந்தாலும், கனகாவுக்கு என்னவோ அது பிடிப்பதில்லை. இதில் போனால் சீக்கிரமாகவே பள்ளிக்குப் போய்விடலாம். அரக்கப் பரக்க ஓட வேண்டிய அவசியமிருக்காது.

வீட்டில் புறப்படும் போது ஒலிக்க ஆரம்பித்த "காதலின் தீபமொன்று" பாடலை நின்று கேட்டு ரசிக்க நேரமில்லை..பருத்திப் புடவை மடிப்புகளைச் சரிசெய்யவென்று 5 நிமிடம் அதிகம் நேரம் ஒதுக்கிய அவகாசத்தில் ஒலித்திருக்கக்கூடாதா அந்தப் பாடல்..காலில் செருப்பைப் போடும் போது ஒலிக்க ஆரம்பித்தது..முனை டீக்கடையில் "..பொன்னிலே பூவையள்ளும் புன்னகை மின்னுதே.."மனதுக்குள் வரிகளை ரசித்தபடி வேக நடை போட்ட கனகாவின் கால்கள் பேருந்து நிறுத்தத்தை நெருங்கியதும் தன்னிச்சையாகத் தயங்கின.

இன்றும் அவன் வருவானோ? அய்யோ..தூரத்தில் இருந்தபடிப் பார்வையை நாலாபுறமும் சுழலவிட்டாள்..நல்லவேளையாகஅவன் அறிகுறி எதுவும் தென்படவில்லை..இதோ சுந்தரமூர்த்தி மாமாவும் வந்துவிட்டார்..அவருக்கும் அதே பஸ்தான்..

"என்னம்மா இன்னிக்கு லேட் போலருக்கே?"

"ஆமாம் மாமா." கடையில் ஒலித்த.."என்னை நான் தேடித்தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்.."பாடலை ரசித்துக் கொண்டே இருக்கையில் அவன் அதோ வந்து விட்டான்..நாக்கு சட்டென்று மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. பயத்துடன் சுந்தரமூர்த்தி அருகில் நெருங்கி நின்று கொண்டாள் கனகா. "வந்துட்டானா" என்று வரவேற்கத் தயாரான முணுமுணுப்புகள் அங்கங்கே..நின்றிருந்த ஒன்றிரண்டு பள்ளிப் பிள்ளைகளும் கனகா போலவே பயந்தனர்.

அவனுக்கு வயது 15 இருக்கும். சற்று மீறிய வளர்ச்சி..மன நலம் சரியில்லாதவன்..
பூக்காரம்மாவின் பையன். பூ வியாபாரம் முடித்து அந்தம்மா இரண்டு மூன்று வீடுகளில் வேலை செய்து பிழைத்து வந்தார். கணவன் இறந்துவிட, இருக்கும் ஒரே பிள்ளையும் இப்படி.

அந்தம்மா அப்படிப் போனதும் இவன் இப்படி வருவது வாடிக்கையான ஒன்றுதான். சில நேரம் அவன் பாட்டுக்கு அமைதியாய் நிற்பான். அல்லது நடந்து கொண்டேயிருப்பான். சிலநேரம் அங்கே இருக்கின்றவர்களிடம் வம்பு செய்வான். காசு கேட்பான்,கொடுத்ததும் வாங்கிக் கொண்டு போய்விடுவான். ஆனால் சமீப காலமாகப் பெண்களைப் பார்த்தால் அசிங்கமான சைகைகள் புரிவது வழக்கமாகிவிட்டது..தர்மசங்கடத்தில் நெளிய வேண்டிய தருணங்கள்..

என்றைக்குத் தான் மாட்ட போகிறோமோ என்ற பயம் கனகாவுக்கு..

பயத்தைப் புரிந்து கொண்டவராய் சுந்தர மூர்த்தி மாமா, " பயப்படாதேம்மா..ஒன்றும் செய்ய மட்டான் " என்று கூறியும் சமாதானமாகவில்லை..ஏதாவது நடந்து விட்டால் எவ்வளவு அசிங்கம்..என்ன இந்த பஸ் இன்னும் வரவில்லையே என்று பார்க்குப் போது, ஒரு வழியாக அன்று சற்றுத் தாமதமாக வந்து சேர்ந்தது பஸ்.

அப்பாடா தப்பித்தோம் என்று பஸ் ஏறி வழக்கமான இடத்தில் உட்கார்ந்தாள் கனகா. என்ன இருந்தாலும் அந்த அம்மா இவனை இப்படி விட்டு விடுப் போகக் கூடாது. என்றைக்கு என்ன செய்வானோ என்ற பயத்துடன் எத்தனை நாள் இருக்க முடியும்..அந்தப் பையன் மீது கோபம் வந்தது..

அம்மாவிடம் சொன்னபோது அம்மா சிரித்தார்கள்.
"பசங்களுக்குப் பாடம் சொல்லிக் குடுக்குற நீயே பயப்பட்டா எப்படி.."

அதுவும் சரிதான். அதற்காகப் பயம் இல்லாத மாதிரி நடிக்க வேண்டுமானால் முடியும். பயம் இல்லாமல் இருக்க முடியுமா என்ன?

சரியான கிறுக்கன்..கனகாவுக்குக் கோபம் கோபமாய் வந்தது. இப்படிப் பொறுப்பில்லாமல் வெளியே அந்தப் பையனை அனுப்பிய அவன் அம்மா மீது..அவன் நினைவே எரிச்சலை மூட்ட இதே போல் எத்தனை நாள் போகுமோ என்று எண்ணியபடி பள்ளியை அடைந்தாள். வேலைப்பளுவில் சற்றே மறந்தாலும் ஒவ்வொரு காலையிலும் இம்சை தருகின்ற அந்தத் தருணங்கள் மனதின் ஓரம் வந்து வந்து போயின.

அன்று சாயந்திரம் அதே பஸ்ஸில் வீடு திரும்புகையில், அவள் கண்முன் கண்ட காட்சி மனதைப் பற்றியெரிய வைத்தது. அவ்வளவு அதிகமாகக் கூட்டமில்லை. சற்று முன் நின்று கொண்டிருந்த பள்ளிச் சிறுமியின் மீது சாய்வதும், பின் விலகுவதுமாகப் போக்குக் காட்டிக் கொண்டிருந்த நடுத்தர வயது மனிதரைக் கோபத்துடன் வெறித்தாள் கனகா. தற்செயலாக நடப்பது போல் காட்டிக் கொண்டாலும், அந்தப்பாவியின் வக்கிரபுத்தி பார்த்த மாத்திரத்தில் உரைத்தது. அந்தச் சிறுமி பாவம், நகர்ந்து சென்றாலும் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்தது அந்த ஜடம்.

ஏதோ ஒரு படத்தில் யாரோ சொன்ன வசனம் நினைவுக்கு வந்தது. "இப்பல்லாம் வயசுப்
பசங்கள விடப் பெரிசுககிட்டதான் ஜாக்கிரதையா இருக்கணும்."

இருக்கையில் இருந்து எழுந்த கனகா அந்தச் சிறுமியிடம் சென்றாள்.

"இங்கே உட்கார்ந்துக்கோம்மா. நான் இறங்கப் போகிறேன்."

"தேக்ஸ் அக்கா." என்றபடி சிறுமி நகர்ந்தாள். அங்கே நின்ற கனகா பார்வையால் அந்த ஆசாமிக்குச் சவால் விட, நெளிந்து குழைந்தார் ஆசாமி. அடுத்த நிறுத்தம் வர, இறங்க வேண்டுமோ அல்லது பயமோ இறங்கிப் போனது அந்த ஜென்மம்.

ஏனோ கிறுக்கனின் முகம் கண்முன் வந்தது. இந்த வக்கிர நடத்தையை அவன் திடீரென்றுதானே தொடர்கிறான்..யாரோ ஒரு விஷமிதான், வக்கிரபுத்திக்காரன் தான் இதைச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். பஸ்ஸில் பார்த்த ஆசாமிக்கும் சித்தம்
சுவாதீனமாகவே இருக்க, அவன் என்ன பித்தனா? கிறுக்கனுக்குச் சைகை செய்யச் சொல்லிக் கொடுத்த ஆசாமிக்கும் மன நலம் நன்றாகவே இருக்க..அவன் பித்தனா? இல்லை எதுவும் புரியாமல் பித்தன் என்று பெயரைச் சுமக்கும் சிறுவன் பித்தனா? யார் பித்தன்?

நாலாபுறமும் இழுத்துப் பிடித்துக்கொண்டு முறுக்கேறிய தசைநார்கள் நொடியில் இறுக்கம் தளர்ந்து இலகுவாக...சட்டென்று ஒரு நெகிழ்வு பிரவகித்தது மனதில். பெரியப்பா மன நல மருத்துவர்தானே. அந்தப் பையனைக் கூட்டிக் கொண்டு போய் அவரைப் பார்த்தால் என்ன? முதலில் அவன் அம்மாவை பார்த்துப் பேச வேண்டும். சுந்தர மூர்த்தி மாமா இந்நேரம் வந்திருப்பார். அவருக்குதான் அவன் வீடு தெரியும். ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணியவளாய் சுந்தரமூர்த்தி வீடு நோக்கி நடக்கலானாள் கனகா. மனதில் இனம் புரியாத அமைதி நிலவியது.

Saturday, January 19, 2008

இரட்டைச் சிறுகதை - ஒரே தலைப்பில்(2)

மறுமணம் - இரண்டாவது கதை.

ஏன் இப்படி நடக்க வேண்டும் எனக்கு? மீளாத்துயிலில் ஆழ்ந்திருந்த கல்பனாவைப் பார்த்துக்
குமுறினான் மோகன். வாய் விட்டுக் கதறியழ நினைத்தான் முடியவில்லை....அருகில் இருக்கும் சொந்தங்கள் .. வாயில் துணி பொத்திச் சிறிய விசும்பல்கள், துக்க முகம் என்று அடக்கி வாசித்தார்கள். கல்பனாவின் தாயார் மட்டும் சற்றுப் பெருங்குரலில் அவ்வப்போது அழ..ஒரு இறுக்கமான மௌனம் நிலவியது.

வெளியே போடப்பட்டிருந்த ஷாமியானா பந்தலின் கீழ் ஆண்கள் அமர்ந்திருக்க,
உணவகத்திலிருந்து தருவித்த சிற்றுண்டிகள் பக்கம் ஒன்றிரண்டு பேராய்த் தொடர்ந்து சென்று பசியாறிக் கொண்டிருந்தார்கள்.

"ஈவ்னிங் 4.30 க்கு மேல்தான் எடுப்பார்களாம்."

"எலெக்ட்ரிக் சுடுகாடுன்னாலே இது ஒரு கஷ்டம்..அவன் கொடுக்கற டைமுக்குதான் நாம் போகணும்."

"இல்ல. மோகன் தான் லேட் பண்றான்..ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணப்போ கல்பனா ஒரே ஒரு தடவை வீட்டுக்குப் போகணும் போல இருக்குன்னு சொல்லிருக்கா..டாக்டர்கள் அனுமதிக்கலயாம். அதுகுள்ள இப்டியாகி விட்டது..அதுனால கொஞ்சம் நேரம் வீட்ல
வச்சுருக்க நெனக்கிறான்.."

"ஆம்புலன்ஸ் வருதாம்..சரியான டைமுக்கு வருமோ வராதோ..நைட்டே போகணும் ஊருக்கு. லீவில்ல...பஸ், ட்ரெய்ன் எல்லாம் கூட்டம்..எப்படிப் போகப் போகிறோமோ.."

அவரவர் கவலைப்படும் இடைவெளியில், கல்பனாவுக்கு என்ன ஆயிற்று என்று பார்க்கலாம். முதல் குழந்தை பிறக்கும் போது சுகப் பிரசவந்தான். இரண்டாவது குழந்தைக்குப் பிரசவ நேரம் நெருங்கிய போது வடபழனி மருத்துவமனையில் சேர்த்தார்கள்.சற்றுச் சிக்கல் என்று தெரியவர சிசேரியன் செய்து பெண் குழந்தை பிறந்தது. எனினும் ரத்தப் போக்கு நிற்காததால், மீண்டும் ஒரு
அறுவை சிகிச்சை செய்தும் பலனின்றிக் கல்பனா கண்மூடினாள். இப்படி ஒரு துர்பாக்கியம் எப்போதாவது ஒரு முறை நிகழக்கூடும் என்று மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

நான்கு வயதில் ஒரு மகன் கார்த்திக், பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை விட்டு விட்டுக் கண்மூடிய 28 வயது கல்பனா ஒரு பொறியாளர்.மோகனை (30 வயது)
விடச் சற்று வசதியான குடும்பத்தில் வந்த பெண். அவளுக்கு ஓர் அண்ணன். அவனுக்குக் குழந்தையில்லை. பொறியியல் பட்டயப் படிப்பு முடித்த மோகன்,மூன்று அக்காக்களுக்கு ஒரே தம்பி. சரியான வேலையில்லாமல் இருந்தவனுக்கு, கல்பனாவின் அப்பாதான் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தந்து, ஒரு விட்டையும் கொடுத்து, தன் பெண்ணைக் கொடுத்தார்.
கல்பனா மோகன் வீட்டைச் சேர்ந்தவருக்கு உதவுவதில் மிகவும் உறுதுணை புரிந்தவள். அவன் அக்கா பையன்கள், பெண் சென்னையில் படிக்க வந்த போது, அவர்கள் வீட்டில் தங்கிக் கொள்ள மட்டுமின்றி, படிப்புக்காகப் பண உதவியும் செய்தவள்.

இன்று மூத்த அக்கா, நர்ஸ், தலைமாட்டில் அமர்ந்து இன்னமும் மூக்கில் இருந்து கசியும் ரத்தத்தைத் துடைத்துக் கொண்டிருந்தாள். இரண்டாவது அக்காவின் மகள் சௌம்யா தான் கல்பனா வீட்டில் தங்கிக் கலைக்கல்லூரியில் முதல் வருடமும், கல்பனா அறிவுரையின்படி வேறு சில தனி விசேட வகுப்புகளுக்கும் சென்று வந்தாள். மாமியார் இறந்து விட, மாமனாருக்கான கடமைகளையும் நன்கு செய்து வந்தாள். அலுவலகம், வீடு இரண்டுக்காகவும் உழைத்தவளுக்கு அதிகம் உதவியாக இருந்தது அவள் பெற்றோர்.மோகனின் அதிர்ஷ்டத்தைப் பாராட்டாதவர்களே கிடையாது.

ஆயிற்று. எல்லாம் முடிந்து கல்பனாவை எரித்து விட்டு வந்தாயிற்று. பிறந்த குழந்தையைக் கல்பனா வீட்டார் தங்களுடன் எடுத்துச் சென்று விட்டனர். அவர்கள் வீடு சற்றுப் பக்கம்தான். தன் அறையிலேயே மோகன் பெரும்பாலும் அடைந்து கொள்ள, தொடர்ந்த நாட்களில்
அக்காக்கள் கச்சேரி ஆரம்பம்.

"பாவம். எப்படி இந்தப் பிள்ளைகளை வளர்க்கப் போகிறானோ..வீடு கல்பனா பெயரில்தானே இருக்கிறது..." அக்கா 1.

"ஆமாம். சௌம்யாதான் நல்லா ஒத்தாசையா இருந்தா..கார்த்திக் அவகிட்ட ரொம்ப ஒட்டிக்கிட்டான்.." அக்கா 2.

"சரிடி..எதுக்கு ரூட் போடறன்னு தெரியுது நல்லா..." அக்கா 3.

"சௌம்யா சின்னப் பொண்ணுதானேடி..படிச்சு வரட்டும்..எம் பொண்ணு கலாவுக்கும் மாப்பிள்ளை பாக்கலாம்னு இருந்தோம்..இப்ப தம்பியக்கேக்க வேண்டியதுதான்..அவன எப்படி இப்டியே விட்டுற முடியும்?" அக்கா 1.

"ஒனக்கென்னம்மா..அத்தானும் நீயும் சம்பாரிக்கிறீங்க..மகனும் வேலக்குப் போகப்போறான்..
சௌம்யாவுக்கு முடிச்சுக்கிறேன்.."அக்கா 2.

"அது சரிடி...தம்பி விஷயத்துல நீங்க என்ன பேசுறது...நல்லாருக்கே நியாயம்.."அக்கா 3.

"உனக்கு மகள் இல்ல..நீ ஏன் பேசமாட்டே?" ..அக்கா 2.

இப்படி அவர்களுக்குள்ளே பேசினாலும் தம்பியிடம் யாரும் பேசவில்லை. ஆனால் அக்கா 2 மட்டும் சௌம்யாவைவிட்டு கார்த்திக்கும், மோகனுக்கும் பணிவிடைகள் செய்யச் சொன்னாள்.
காரணம் புரிந்த போது சௌம்யா தயங்கினாள்.

பிறந்த குழந்தையைக் கல்பனாவின் அண்ணன் குடும்பம் சேலத்துக்கு எடுத்துப் போய்விட்டார்கள். கார்த்திக் மற்றும் மோகனை அவ்வப்போது வந்து பார்த்துப் போவார்கள் கல்பனாவின் பெற்றோர். அக்கா 2 மட்டும் தற்காலிகமாகக் குடும்பத்தோடு அங்கேயே தங்கிவிட, அக்கா 1,3 ஊருக்குப் போய்விட்டார்கள். அக்கா 1 அவ்வப்போது வந்து போவாள் அப்பாவை, தம்பியைப்
பார்க்கும் சாக்கில்.

மறுமணப் பேச்சை அக்காக்கள் எடுத்த போது பிடி கொடுக்காமல் இருந்தான் மோகன்.

"முதல்ல ஒன் மகள இங்க கூட்டிட்டு வந்துருப்பா..நானும் சௌம்யாவும் பாத்துக்க மாட்டோமா.."அக்கா 2.

"வீடு கல்பனா பேர்ல இருக்குது. புள்ள இல்லன்னா அனாதப் பிள்ளைய எடுத்து வளர்க்க வேண்டியதுதானே.அம்மா சொத்து மகளுக்குன்னு சட்டமிருக்குல்ல..வீட்டக் காபந்து பண்ணிக்கடா தம்பி.." அக்கா 1.

அவனுக்குப் புரிய ஆரம்பித்தது அக்காக்களின் எண்ணம். "நான் மறுமணம் பண்ணிக்கிறதா இல்ல..இதப் பத்திப் பேச வேண்டாம்"னு அவர்களை அடக்கினான். இருந்தாலும் பல இடங்களிலிருந்து பலவித அறிவுரைகள் இது குறித்து..ஏன், கல்பனாவின் பெற்றோரே
இதை வலியுறுத்தினார்கள். மகளைப் பிரிய முடியாமல் கூட்டி வந்து விட்டான்.

கல்பனா இறந்து எட்டு மாதங்கள் கழிந்தது. மனம் மாறி மறுமணத்துக்குச் சம்மதம் தெரிவித்துள்ளான் மோகன். அவன் கலாவையோ, சௌம்யாவையோ மணக்கத் தன் மனம் ஒப்பவில்லை என்று கூறிவிட்டான். ஆதரவற்ற விதவை, குழந்தைகளற்ற விதவைக்கு முன்னுரிமை, அல்லது அதிக காலம் மணமாகாத பெண்..தன்னை விட வயது சற்று அதிகமானாலும் பரவாயில்லை என்று சம்மதம் தெரிவிக்க, தகுந்த பெண் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

(இதுவும் உண்மைச் சம்பவம்தான்.மன்னிக்கணும் மக்களே..கொஞ்சம் நீ...ள....மாகி விட்டது)
மறுமணம்-முதல் கதை - http://pettagam.blogspot.com/2008/01/blog-post_17.html

Sunday, December 16, 2007

இன்றிரவு எப்படியும் - சும்மா ஒரு கதை

இன்றிரவு எப்படியும் அவனைக் கொலை செய்து விட வேண்டும்..பார் விளையாடும் நேரம்தான் சரியான தருணம்..ஒரு விபத்து போல் ஆகி விடும். அப்புறம் ஆரவாரம் எல்லாம் அடங்கிய பின்னே மெதுவாக ராசி நம் வழிக்கு மீண்டும் வந்து விடுவாள். யோசித்து யோசித்து, மனசாட்சியின் கூக்குரலையும் அடக்கி வைத்துவிட்டு முடிவு செய்தான் மரியோ.

பார் விளையாடும் போது கீழே வலைகள் ஏதும் விரிக்காமல் விளையாடுவதுதான் அவர்கள் சர்க்கஸின் தனித்துவம். அந்தரத்தில் தொங்கிக் கொண்டு, தாவிச் சுழன்று பார் மாறுவதுதான் உச்சக்கட்டம். அப்படி மூன்றாவது முறை மாறும் போது எதேச்சையாக நிகழ்ந்தது போல் ராஜுவின் கையை விட்டுவிட வேண்டும். பின் என்ன சங்குதான்..

காலடியில் இருந்த பழத்தைக் கொத்திக் கொண்டிருந்த அந்தப் பஞ்சவர்ணக்கிளியைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் மரியோ...சற்று தூரத்தில் இருந்த கூடாரத்திலிருந்து லேசான புகை வந்து கொண்டிருந்தது. வழக்கம்போல் பாலுதான் சமைத்துக்கொண்டிருப்பான். சர்க்கஸ் முதலாளிக்குத் தெரிந்தால் ப்ரச்னையாகிவிடும். எத்தனை முறை கண்டித்தாலும் இவன் கேட்பதில்லையே என்று நினைத்தான் மரியோ. தீ விபத்து நேரும் அபாயம் இருப்பதால் சமைப்பதற்குத் தடை விதித்திருந்தார் முதலாளி.

அந்தக் காலை நேரத்திலேயே லேசாக வெயில் உரைக்க ஆரம்பித்திருந்த கோடைக்காலமது. அவன் மனம் மட்டும் பனி மூட்டமாய்..எப்படி என்னை ஏமாற்றத் துணிந்து விட்டாயே ராசி...அநேகமாக எல்லோருக்கும் தெரியும் அவர்கள் காதலர்களென்று...மரியோ அனாதை
விடுதியிலிருந்து வந்தவன்..சிறு வயதிலேயே இந்த சர்க்கஸ் முதலாளியிடம் சேர்ந்து படிப்படியாக முன்னேறி இன்று முக்கியமான"பார்" விளையாட்டில் முன்னணி நாயகன். அவன் சேர்ந்த ஐந்து ஆண்டுகளின் பின் வந்து சேர்ந்தவள் ராசி. நட்பு முறையில் ஆரம்பித்த பழக்கம் காதலாகிக் கனிந்துருகி கல்யாணம் செய்யும் முடிவுக்கு வந்திருந்தனர். ராசியின் பெற்றோரும் சம்மதித்து விட்டனர்.

அப்போதுதான் இடையில் வந்து சேர்ந்தான் இந்த ராஜு..சர்க்கஸ் வட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுபவன் அவன். தனித்திறமைகள் நிறைய வாய்ந்தவன். கோமாளி, மேஜிக் வித்தைகள், மரணக்கிணறு மோட்டார் சைக்கிள், பார் விளையாட்டு என்று அனைத்திலும் அசத்தும் ஓர் ஆல் ரவுண்டர். அவன் பழைய கம்பெனி நொடித்துப் போனதும் இங்கே வந்து சேர்ந்தான், மரியோவின் காதலுக்கு எமனாக.

ராசியும், அவள் பெற்றோரும் மனம் மாறிக் கொஞ்சம் கொஞ்சமாய் அவன் பக்கம் சாயத் தவிப்புக்குள்ளானான் மரியோ..அனைவரும் பலவிதப் பயிற்சிகளும் ராஜுவிடம் பெற்றுக் கொள்ளும்படி முதலாளியின் ஆணை. முதலில் இதை நம்ப மறுத்த அவன் இதயம் அவர்கள்
இருவரையும் பயிற்சி நேரம் நெருக்கமாகப் பார்த்த பல தருணங்களில் குமைந்து போனது. போதாக்குறைக்கு அவன் நண்பர்கள் வேறு "என்னடா ரூட் மாறிப்போகுது போலருக்கு" என்று பேச ஆரம்பித்தனர். ராசியின் பெற்றோரும் கூட மாறிப் போயினர்.துணிந்து விட்டான் மரியோ...புழுங்கிப் புழுங்கி ...இதோ இன்று கொலை பண்ணும் அளவுக்கு..

இரவு ஆட்ட நேரம் வந்தது..ஆவலுடன் எதிர்பார்த்த பார் விளையாட்டு..இதோ முதல் சுற்று மாறியாகிவிட்டது..இன்னும் ஒரு சுற்று போக வேண்டும்..இரண்டாவது சுற்றில் தயார்நிலைக்கு வந்தான் மரியோ...அடுத்த சுற்றில் ராஜுவின் கையைப் பிடிக்காமல் தவற விட
வேண்.......அடடா..இது என்ன யார் விழுந்து கொண்டு இருப்பது...எல்லாமே சுற்றுவது போல்..மிதந்து மிதந்து கீழே...தரையை முத்தமிடும் உச்சந்தலை... ரத்தவெள்ளத்தில் மரியோ..

ஆரவாரம்...போலீஸ்...எல்லாம் முடிந்து ராஜு நினைத்துக் கொண்டான்...அப்பாடா..முரண்டு செய்த ராசி என் வழிக்கு வந்து விடுவாள்...திட்டமிட்டபடி இரண்டாவது சுற்றில் அவள் காதலனைக் கொலை செய்தாயிற்றே..."இன்னும் கொஞ்ச நாள் பொறு மனமே ராசி உனக்குத்தான்" என்று சொல்லிக் கொண்டான்...

(எப்போதோ பார்த்திருந்த ஓர் ஆங்கிலப் படத்தின் தழுவல் தான் இது...பெயர் மறந்து விட்டது..கணவன் மனைவியைக் கொல்ல நினைக்க, மனைவி அதே போல் திட்டமிட்டுக் கடைசிக் காட்சியில் கணவனைக் கொல்லும் கதை..களமும் பாத்திரங்களும் சற்றே மாற்றி...)