"அச்சம், மடம், நாணம் எல்லாம் மிச்சம் மீதி ஏதுமின்றி
எச்சில் போலத் துப்பிப் போடடி....."
கலைஞர் தொலைக்காட்சியில் வரும் ஏதோவொரு தொடரின் (புதுமைப்பெண்கள்?) பாடல் இப்படிப் ஒலிக்கிறது..
பெண் விடுதலை, பெண்ணியம் என்று காலம் காலமாகப் பேசி வருகிறோம்...பள்ளி போகாத நிலை, பால்ய விவாகம், சதி,விதவையாகி வீட்டில் முடக்கம், பெற்றோர் காட்டும் ஆண் பெண் குழந்தை பாரபட்சம், முதலிய கொடுமைகள் காலம் காலமாகப்பெண்களுக்கெதிராக நடைபெற்று வந்தன. அதெல்லாம் மாறி இன்றைய நிலையில் குறிப்பிடும் அளவு முன்னேறி இருக்கிறோம்.
சமுதாயத்தில் பெண்கள் நிலையைப் பொருளாதார அடிப்படையில் 3 விதமாகப் பிரிக்கலாம்..இதில் மேல்வகுப்பைச் சேர்ந்தவர்கள்,மத்திய வகுப்பைச் சேர்ந்தவர்கள், அடித்தட்டைச் சேர்ந்தவர்கள்...இதில் 3 ஆவது ரகத்தைத் தவிர(அவர்களுக்குத்தான்
விடிவு காலம் என்று வருமோ தெரியவில்லை) மற்ற பெண்கள் எல்லாம் அடிமைத்தளையிலிருந்து பெரும்பாலும் விடுபட்டவர்கள்தான்...விதிவிலக்குகளும் உண்டு..ஆனால் விழுக்காடு குறைவுதான்..
பெற்றோரால், கூடப் பிறந்தவர்களால் புரிந்து கொள்ளப்பட்டு, பின் கணவன் வீட்டாரால் புரிந்து கொள்ளப்பட்டு...இப்படிப் போகிறது பயணம்..ஆணுக்கும் இப்படித்தான்..ஆனால் சமுதாய மற்றும் உடற்கூறு அமைப்புகளால் ஆணுக்குச் சில சலுகைகள் வழங்கப்பட்டு
அதைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் உண்டு. பெண்களும் தங்களுக்குக் கிடைக்கும் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் என்ன ஆகும்? உலகத்தரத்தில் பண்பாட்டில் முக்கிய இடம் வகிக்கும் நம் இந்தியாவின் பெருமை என்னவாகும்?
காலம் காலமாக வழங்கி வரும் சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றாய் உடைந்து கொண்டுவருகின்றன..சம்பிரதாயங்கள் உடைந்தாலும் பண்பாடு பாக்கியிருக்கிறது...
உடைத்துவிட்டு நியாயமாக நடப்பது என்பது தனி மனித ஒழுக்கத்தைப் பொறுத்தது..கற்பு நெறி
இருவருக்கும் பொதுவில் வை என்று நாம் யாரைக் கேட்க முடியும் பாரதியைப் போல?
அடிமைக் காலத்தில் எழுந்த பொதுவான கேள்வி அது..இன்று தனி மனிதக் குடும்பங்களில் ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஒழுக்க நெறியால் விடை காணக்கூடிய கேள்வி...
தேசம், மொழி இவற்றை அன்னை என்னும் நாம் பெண்மைக்கென்று சமுதாயக் கட்டுப்பாட்டுக்காக சில அடையாளங்களை விட்டு வைத்துள்ளோம். ஆண், பெண் தனி இருக்கைகள், பொது இடங்களில் இருவரின் பழக்கவழக்கங்கள்....உடைகள் முதலியன..இவற்றில்
பெரும்பாலானவை மீறப்பட்டுள்ளன...நாகரிகமாக, பிறர் முகம் சுளிக்காவண்ணம் மீறப்பட்டுள்ளன..(மறுபடியும் சொல்கிறேன்..விதிவிலக்குகள் உண்டு..விழுக்காடு நம் நாட்டில் குறைவுதான்..)
பெண்ணியம், பெண் விடுதலை என்று என்னதான் பேசினாலும் இது போன்ற பாடல்கள் முகம் சுளிக்க வைக்கின்றன அநேகம் பெண்களை..அதுவும் என்னைப் போன்ற விடலைப் பருவத்தில் மகள் உள்ள தாய்களை..
நியாயமான சுதந்திரம் கிடைக்காத இடத்தில் போராடிப் பெற வேண்டியதுதான் புதுமைப்பெண்ணின் கடமை..இது போலப் பாடிக் கொண்டிருப்பதல்ல..
பாடிய கவிஞர் ஆண்தானே என்ற வாதத்துக்குச் சத்தியமாக நான் வரவில்லை..
ஆரோக்கிய, ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும் செயல்பாடுகளும்தான் நம் தற்போதையத் தேவை. தனி மனித வாழ்வின் நெறியே மெல்ல மெல்ல சமுதாய நெறியாக மாறும் என்பது
வரலாறு உரைக்கும் உண்மை.