Showing posts with label அதீதம். Show all posts
Showing posts with label அதீதம். Show all posts

Friday, July 12, 2013

வார்த்தைகள்

 
வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்
என்னைச் சுற்றிலும் வார்த்தைகள்.
 
 
என்னில் அவை வளர்கின்றன
இலைகளைப் போலவே.
 
 
உள்ளிருந்து
மெல்ல மெல்ல வளரும்
அந்த வார்த்தைகள்
வளர்வது நிறுத்தும்
என்று
எனக்குத் தோன்றவில்லை.
 
 
ஆனால்,
எனக்கு நானே
சொல்லிக் கொள்கிறேன்.
 
வார்த்தைகள் 
தொல்லை தருபவைதான்.
 
 
அவற்றிடம் சற்றுக்
கவனத்துடனும்
எச்சரிக்கையுடனும்
இருந்தாக வேண்டும்.
 
 
அவை...
 
 
பலதரப்பட்ட
விஷயங்களாக
இருக்கக்கூடும்.
 

ஓடுகின்ற கால்கள்
சற்றே இளைப்பாறும்
அகன்ற வெளிகளாய்
இருக்கக்கூடும்.
 
 
உறைந்து நிற்கும்
கடல் அலைகளாய்க்
காட்சி தரக்கூடும்.

 
எரிசூட்டுக் காற்றின்
மிகப்பெரிய வீச்சாய்
வெடிக்கக்கூடும்.
 
 
உன்னுடைய
உயிர்த்தோழமையின் கழுத்தை
மனமுவந்து அறுக்கும்
கத்தியாய் இருக்கக்கூடும்.
 
 
வார்த்தைகள் 
தொல்லை தருபவைதான்.
 
 
ஆனாலும் அவை
மரத்தில் வளர்கின்ற
இலைகள் போல
என்மீது வளர்கின்றன.
 
 
மௌனத்திலிருந்தும்
உள்ளே எங்கேயோ
இனம்புரியாத ஆழத்திலிருந்தும்
முளைத்துக் கிளைத்து வளர்வதை
அவை
நிறுத்துவதாகத் தோன்றவில்லை.
 
 
ஆங்கில மூலம்: Words, Kamala Das
 
அதீதம் இதழில் வெளிவந்தது.

Sunday, December 16, 2012

பாடப்படாத பாடல்

 
மூலம்: Song Unsung, Gitanjali, Selected Poems, Tagore

நான் பாடவந்த ஒரு பாடல்
பாடப்படாமலேயே இருக்கிறது
இன்று வரையில்....

என்னுடையை
இசைக்கருவியின் தந்திகளை
முடுக்கவுமாய் தளர்த்தவுமாய்
என் நாட்களைக் கழிக்கின்றேன்.

இன்னும் மெய்மையான அந்த நேரம்
வந்து வாய்த்தபாடில்லை;
வார்த்தைகளும் சரிவர
அமைக்கப்படவில்லை.

காற்று மட்டும் பெருமூச்சுடன்
கடந்து போகின்றது;
இன்னும் மொட்டுகள் அவிழ்ந்து திறக்கவில்லை.

நான் அவனுடைய முகத்தைப் பார்க்கவில்லை
இன்னும்..
அவன் குரலையும் கூடக் கேட்கவில்லை.

என் வீட்டின் முன் செல்லும் சாலையில்
மென்மையான அவன் காலடி அசைவுகளின்
ஒலி மட்டுமே கேட்டிருக்கிறேன்.

இந்த நீண்ட நாள் முழுவதும்
அவனுக்கான இருக்கையைத்
தரையில் விரிப்பதிலேயே கழிந்துபோய்விட்டது.

ஆனால் ஒளிவிளக்கு இன்னமும் ஏற்றப்படவில்லை;
என்னால் வீட்டுக்குள் வரும்படி
அவனை வரவேற்கவும் இயலவில்லை.

அவனைச் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்
நான் வாழ்கின்றேன்;
ஆனால் அந்தச் சந்திப்பு இதுவரையில்
நிகழவே இல்லை.
 

அதீதம் 14 செப்டம்பர் 2012 இதழில் வெளிவந்தது.

Wednesday, October 3, 2012

மங்கி வரும் இளமைக்காலம்


 
மூலம்: - ஷேக்ஸ்பியர் Sonnet 73

வருடத்தின் பருவகாலம் இன்னதென்று
முதிர்ந்து வரும் என்னில் நீ அறியலாம்;

சிதைந்து போன தேவாலயத்தில்
இனிய குரலில் குழுப்பாடல்கள்
பறவைகள இசைக்கும்
இடங்களுக்கு அருகாமையில்
குளிரில் நடுங்கும்
பழுப்பு மஞ்சள் இலைகள்
மிகவும் குறைந்த எண்ணிக்கையில்
கிளைகளில் ஆடும் தருணங்களில்;
அல்லது ஓர் இலை கூடக் கிளைகளில்
இல்லாத தருணங்களில்;


இன்னும் மீதமிருக்கும்
மங்கலான வெளிச்சமதை
மரணம் தழுவ அருகில் வரும்
என்னில் நீ காணலாம்.

சூரியன் மேற்கில்
மறைந்த பிறகான தருணங்களில்;
சடுதியில் கறுப்பு இரவு
ஒளிர் வெளிச்சத்தை
மறைத்துச் செல்லும்
மரிக்கச் செய்யும்
மறையச் செய்யும் தருணங்களில்;

மரணிக்கக் காத்திருக்கும்
இளமை நெருப்பின் மீது படரும்
நீறுபூத்த நெருப்பாய் நான்
தகதகவென்று ஒளிர்கின்றேன்.

மரணப்படுக்கையில்தான்
அனைத்தும் முடிவு காண வேண்டியுள்ளது.


உணவளித்து ஊட்டி வளர்த்த மரத்துண்டுகள்
முழுமையாய் எரிந்து போனதும்
மரித்துப் போகும் நெருப்பது போன்றது வாழ்க்கை.
இளமைச் சக்தி குறைந்ததும்
வாழ்க்கையின் வலுவும் குறைந்து போகும்..

மங்கி வரும் என் இளமையையும்
அதன் ஏக்கங்களையும் தாபங்களையும்
நீ உணர்வாயோ என் அன்பே!

என் இளமை மங்கி மயங்கி வருவதை
நீ அறிவாயோ
பிரியும் தருணம் நெருங்கி வருவதை
நீ அறிவாயோ
அதனால்தான்
அதிக காலம் விரயமாவதற்குள்
உணர்ந்த காதலை
மேலும் வலுப்படுத்துகிறாயோ...
அதீதம் 11 ஆகஸ்ட் 2012 இதழில் வெளிவந்தது.

Thursday, September 20, 2012

உன் கண்களால் நீ தேடிடும் வேளையில்..

ஒரு மெக்ஸிகன் கவிதையின் தமிழாக்கம்
 
ஆங்கிலத் தலைப்பு:  When you search with your eyes
 
 
 
 
உன் கண்களால்
நீ தேடிடும் வேளையில்
ஒருபோதும்
என்னை நீ காண மாட்டாய்;
என் இதயத்துள்ளேயும் கூட
யாருமே இருக்க மாட்டார்கள்...
எந்தப்பாதை நான் தேர்ந்தெடுத்தேன்
எந்த இடத்தில் உன்னை மறந்தேன்
என்று சொல்வதற்கு.

உன் கண்களை நீ திறந்திடும்
அந்த நாளில் ஒருபோதும்
நான் இருந்திட மாட்டேன்;
வேறொரு வழித்தடத்தில்
நான் போயிருப்பேன்;
உன்னை மறந்திருப்பேன்.
என்னை நீ தேடும்
அந்த ஒரு நாளில் ஒருபோதும்
என்னை நீ காண மாட்டாய்.

என்னை நீ தேடுவாய்
வடக்கேயும் தெற்கேயும்;
சூரியன் பிறந்த இடத்தேயும்
சூரியன் மறைந்திடும் இடத்தேயும்.

பாதைகளின் கரங்கள்
குறுக்கும் நெடுக்குமாகப்
போகும் இடங்களில் எல்லாம்
என் பாதச்சுவடுகளைத்
தேடிப் பைத்தியமாய்
நீ அலைந்திடுவாய்.

யாருக்குத் தெரியும்?
எந்தக் காற்று கலைத்தது
எந்த மழை அழித்தது
அச்சுவடுகளை என்று....
 

மூலக்கவிதை: When you search with your eyes
எழுதியவர்: Victor de la Cruz
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: David Shook
 
அதீதம் இதழில் 28.07.12 அன்று வெளிவந்தது.

Monday, September 10, 2012

என்னை நான் வெளிப்படுத்துகிறேன்...

ஓர் அரேபியக் கவிதையின் தமிழாக்கம்: ஆங்கிலத் தலைப்பு: I Reveal Myself


நான்...


கடல்வழித் தாக்குதல் நிகழ்த்தும்
மாலுமிகளின் வம்சத்தவள்;
மாவீரன் சாம்சனையே*
வலுவிழக்கச் செய்து வீழ்த்திய
பெண் மகளின் வாரிசு;
அலைகளுக்கும் நினைவுகளுக்கும்
மகளாகி நிற்பவள்;
பழமையின் சேகரிப்பில்
புதியதாக முளைத்திட்டவள்;


நான்...


என் கைகளை  விரிக்கும் தருணத்தில்
இந்தப் பிரபஞ்சம் தொடங்கும்.
சிரிக்கையில் என் கன்னி இதழ்களில்
தேன் ததும்பி நிற்கும்.
எடுத்து வைக்கும் ஓர் அடியில்
இந்தப் புவியே
தன் கட்டுப்பாட்டை இழந்து நிற்கும்.


என் சிரிப்பினில்
பூகம்பம் எதிரொலிக்கும்.
எரிமலைகள் பூமியின் பரப்புகளில்
விசையுடன் பீறிட்டெழும்.


நான்...


அறிவின்மைக்கும் அடக்கத்துக்கும்
மகளாகப் பிறந்தவள்;
துன்மார்க்கத்துக்கும் தூய்மைக்கும்
மகளாகப் பிறந்தவள்;
கறுப்புக்கும் வெள்ளைக்கும்
வாரிசாகி நிற்பவள்;


என் விரல் நுனிகள்
நட்சத்திரங்களைத் தட்டிச் சென்று
அவற்றைத் தடம்புரளச் செய்யும்.

மூடிக் கொண்ட என் கண்களை
நான் திறந்திடும் பொழுது வரை
உலகெங்கும் வியாபித்து நிற்கும்
கிரகண இருட்டு;
என் கண்கள் திறந்திடும் பொழுதினிலோ
உலகையே குளிப்பாட்டி நிற்கும் தங்கத் தகதகப்பு.


என் கூந்தல் கற்றைகளைச் சற்றே சுழற்றி நான்
பின்புறம் தள்ளி விட...
என் பலம் கண்ட இந்தப் பிரபஞ்சம்
அச்சத்தால் நடுநடுங்கி நின்றிடும்.


இன்றையப் பொழுதும் நான் தான்
நாளையப் பொழுதும் நான் தான்
விண்வெளியின் அரியணையில்
முடிசூட்டிக் கொண்ட அரசியும் நான் தான்


ஒரு முறை நான் கண் இமைத்தால் போதும்;
வயல்கள் முழுவதும் பச்சையாய் நுரைத்தெழுந்து
கோதுமைப் பயிர்கள் நிறைத்து நிற்கும்.
கோதுமைப் பயிர்களும் நான் தான்.
பச்சை நிறமும் நான் தான்.
முதல் அறுவடையும் நான் தான்.
இறுதி அறுவடையும் நான் தான்.


குறிப்பு: சாம்சன் பைபிளில் வரும் ஒரு பாத்திரம். அதிக வீரம் கொண்டவனாகக் கடவுளால் படைக்கப்பட்டவன்.
மேலும் செய்திகளுக்கு: http://en.wikipedia.org/wiki/Samson

அரேபிய மொழியில் மூலக்கவிதை:  Fatena Al-Gharra
ஆங்கில மொழிபெயர்ப்பு: Fatena Al-Gharra


அதீதம் இதழில் 22.06.12 அன்று வெளிவந்தது.

Wednesday, July 18, 2012

ஞாபகக் குறி ஒன்று எடுத்து வருவாயாக

ஓர் உருதுக்கவிதையின் தமிழாக்கம்

ஞாபகக் குறி ஒன்று எடுத்து வருவாயாக.


உன்னிடம்
இறைஞ்சுகிறேன்.


ஒவ்வொரு பயணத்தின் போதும்
ஞாபகக்குறி ஒன்று
எடுத்து நீ வாருவாயாக.
களைத்துப் போய்விட்ட பாதங்களுடன்
பட்டாம்பூச்சியின் சிறகுகளையும்
எடுத்து நீ வருவாயாக.


உன்னுடனான தோழமை பற்றி
எழுதி வருகின்றேன் ஒரு கதை.
உனக்கு முடியுமானால்
நல்ல வார்த்தை ஒன்றை
எடுத்து நீ வருவாயாக.


நான் நம்புகின்றேன்.
நம் அன்பும் அது தரும் நம்பிக்கையும்
நம்மைக் களைத்து போகவிடாது.
நம்மால் முடியும்.
இந்தக் காதலைப்
புதுப்பித்துக் கொண்டே இருக்க .


தேவதைகளின் மாந்திரீக உலகுக்கு
நீ செல்ல நேரும்போது
நிலவொளிரும் அழகு முகமொன்றால்
நீ கவரப்பட்டால்
அதே போன்றதொரு முகம் செதுக்கி
எடுத்து நீ வருவாயாக.


பயணங்களில் உனக்கிருக்கும்
கட்டுக்கடங்காக் காதல்
உன்னை வீட்டிலிருந்து வெளியே
இழுத்துக் கொண்டுதான் செல்கிறது.


பயணப்பைகளில் சுமந்தே வரும்
தூசியது போலவே
வருத்தப் பட வைத்திடும்
எதையும் திரும்பவும்தான்
கொண்டு நீ வந்திடாதே.


வருத்தங்கள் சுமந்துவர நேரினும்
ஆத்மார்த்தமாகச் சுமந்தேதான்
எடுத்து நீ வருவாயாக


விசித்திரமான வேடிக்கையான
சூழல்கள் தன்னில்
வாழ்ந்துதான் வருகின்றோம்.
உன் பயணமது முடியும் தருணம்
காதலை நீ எழுதி வந்திருந்தால்
நனைந்த கண்களைத்தான்
எடுத்து நீ வருவாயாக.


உருது மொழியில் மூலக்கவிதை:  Noshi Gillani (பாகிஸ்தான் பெண் கவிஞர் )
ஆங்கில மொழிமாற்றம்: Noshi Gillani
ஆங்கில மொழிபெயர்ப்பு: Lavinia Greenlaw (லண்டன்)

அதீதம் மே, 2012 இதழில் வெளிவந்தது.

Friday, April 20, 2012

நடுநிசிக்குப் பின் மூன்றாம் ஜாமத்தில்...

ஒரு ஹிந்திக் கவிதையின் தமிழாக்கம்

நான் பார்த்திருந்தேன்
என்னிலிருந்து மிகவும் தூரத்தில்
விண்மீன்களை.

நான் அவற்றைப் பார்த்த அந்தக்கணம்
அவற்றிலிருந்து எனக்கும்கூட
அதே தூரம்தான்.

கண்சிமிட்டிக் கடந்து போகும்
அவ்விண்மீன்கள்
கடந்து செல்லும்
காலமது போலவே.

நடு நிசிக்குப் பின்னான
மூன்றாம் ஜாமத்துப் பொழுது
இரவின் ஆழத்தினூடே
வேட்டையாடி விரட்டிச் செல்கிறது
விடியல்தனை.

முழுமையானதொரு தெளிவுக்கு
வரமுடியவில்லை என்னால்.

முதல் முறையாகத்தான்
இந்த வாழ்க்கையை
நான் வாழ்கிறேனா?
இல்லை,
மீண்டுமொருமுறை
திரும்பத்தான் வாழ்கிறேனா?
வாழ்ந்து கொண்டேயிருக்கையில்
சுவாசத்தின் அந்த முதல் கணத்தை
மறந்துதான் போனேனா?

மீனும்கூடத் தண்ணீரைக் குடித்திடுமா?
சூரியனும்கூட வெப்பமது உணர்ந்திடுமா?
ஒளியும்கூட இருளதனைக் கண்டிடுமா?
மழையும்கூட நனைந்துதான் போயிடுமா?
கனவுகளும்கூட நித்திரை குறித்த
வினாக்களைத்தான் வினவிடுமா
என்னைப் போலவே?

நான் நடந்தேன்
நீளமான மிகவும் நீளமான
நடை நடந்தேன்.

அப்போது நான் பார்த்தேன்.
நான் பார்த்த அந்தக்கணம்
எனக்கு மிக அருகில் விண்மீன்கள்.

இன்றைய பொழுது முழுவதும்
மழையது பொழிந்திட
உந்தன் முகத்திலிருந்து
கழுவப்பட்டுப்போயின வார்த்தைகள்.

அதீதம் ஏப்ரல் 09, 2012 இதழில் வெளிவந்தது...

ஹிந்திக் கவிதை

मैंने तारों को देखा बहुत दूर
जितना मैं उनसे
वे दिखे इस पल में
टिमटिमाते अतीत के पल
अँधेरे की असीमता में,
सुबह का पीछा करती रात में
यह तीसरा पहर

और मैं तय नहीं कर पाता
क्या मैं जी रहा हूँ जीवन पहली बार,
या इसे भूलकर जीते हुए दोहराए जा रहा हूँ
सांस के पहले ही पल को हमेशा !

क्या मछली भी पानी पीती होगी
या सूरज को भी लगती होगी गरमी
क्या रोशनी को भी कभी दिखता होगा अँधकार
क्या बारिश भी हमेशा भीग जाती होगी,
मेरी तरह क्या सपने भी करते होंगे सवाल नींद के बारे में

दूर दूर बहुत दूर चला आया मैं
जब मैंने देखा तारों को - देखा बहुत पास,
आज बारिश होती रही दिनभर
और शब्द धुलते रहे तुम्हारे चेहरे से


After Midnight

I saw the stars far off -
as far as I from them:
in this moment I saw them -
in moments of the twinkling past.
In the boundless depths of darkness,
these hours
hunt the morning through the night.

And I can't make up my mind:
am I living this life for the first time?
Or repeating it, forgetting as I live
the first moment of breath every time?

Does the fish too drink water?
Does the sun feel the heat?
Does the light see the dark?
Does the rain too get wet?
Do dreams ask questions about sleep as I do?

I walked a long, long way
and when I saw, I saw the stars close by.
Today it rained all day long and the words were washed away
from your face.


மூலம்: Theesra Pehar   Hindi poem by Mohan Rana
ஆங்கில மொழியாக்கம்: Lucy Rosensteinஆங்கிலக் கவிதையாக்கம்: After Midnight By Bernard O'Donoghue

Wednesday, April 4, 2012

தனித்த ஓர் இதயத்தின் கதவருகே...

1

நான் தனித்திருக்கவில்லை;
தனிமையை
என் நட்பாக்கிக் கொண்டிருக்கிறேன்.

2

அவன்
திருப்தியாகி விட்டிருந்தான்..

அன்றாட உணவிலிட்ட
சிட்டிகை உப்பினில்;

குறுகிய
இரவதனில்;
குறுகிய பொழுதேனும்
நீ உடனிருக்கும் இரவதனில்;

குறுகிய கனவதனில்;
கனவின் தோள்களில்
ஆள்துயில் கொண்ட உன்னில்;

குறுகிய
உறக்கமதனில்;
உறக்கத்தின் கரைதனில்
நடைபயிலும் உன்னில்;

குழலதன்
கூரிய ஓசைக்கும்
ஆடுமாடுகள் கழுத்து மணியின்
கரகரப்பான ஓசைக்கும்
இடையே ஊஞ்சலாடியபடி..

அவன்
திருப்தியாகி விட்டிருந்தான்.

3

நான் மட்டும்
ஒரே ஒருவனாய்
நின் ஒளிர்வைக்
கவனித்து வருகிறேன்.

சூரியனுக்காகவென
வாராந்திர விடுமுறையைக்
கடவுள் மட்டும் கொடுத்திருந்தால்..

அனைவரும்கூட
அறிந்திருப்பார்கள்
நீ எவ்வளவு ஒளிர்கிறாய் என்று.

4

வெற்றுச் சுவர்,
பழைய சுவர்,
வறட்சியாலும் களிமண்ணாலும்
கனமாக்கப்பட்ட இதயச்சுவர்.

இங்கே
உன் பெயரை
நீ எழுதிக் கொள்ளலாம்.

ஆனால்,
நகங்களால் மட்டும்
கீறி விடாதே.

5

அவன் அங்கங்களில்
கவனமாய் இருந்திடு.

உயர்தர நூல்வகையால்
அவனைத் தைத்திடு.

மடித்துத் தைத்திட்ட
விளிம்புப் பகுதிகளைக்
கிழிக்காமல் இருந்திடு.

அலைந்து திரியும்
அவன் நூல் இழைகளைச்
சேகரித்து வைத்திடு.

நீர் அவனைச்
சூழ்ந்திடும் போது
கொஞ்சம் நெருக்கிப் பிழிந்திடு.

வெறுமனே
ஒரு சட்டை
போலத் தோன்றினாலும்,
உண்மையில்
அவன் ஓர் இதயம் தானே.

6

சுதந்திர நாடுகளில்
பறந்திடும் கொடியது போல்
என் மனதுள் நீ
அசைந்தாடுகின்றாய்.

7

யாருடைய நெஞ்சில்
யார் சாய்ந்து அழுதாரோ?
நனைந்திட்ட சட்டை மட்டுமே
அறிந்திடும் விடைதன்னை.

At the Door of a Lonely Heart -  Arabic poem by: Abboud al Jabiri 
                                                       Translated by: Worod Musawi
1
I am not alone -
the truth is
I befriended my loneliness

2
He's satisfied with a pinch of salt on his daily bread
with a little of you at night
with a short night
with you asleep on dream's shoulder
with a brief dream
with you walking on sleep's shore
with a light sleep
that sways between the keening of the naiand the clanging of goat bells

3
If God gave the sun the weekend off
people would know how you shine all the time
even though I am the only one who notices

4
It is a blank wall,
an old wall -
a heart burdened by drought and clay:
write your name here,
but don't pierce it with nails

5
Be careful with his limbs:
mend him with fine yarn
and don't rip his hem,
gather up his stray threads,
and squeeze him gently
when he is wet -
even if he seems like just an old shirt,
really, he is a heart

6
Like a flag
flying in a free country
you are waving in my heart

7
Who wept on the breast of the other?
Only the wet shirt
knows the answer

ஓர் அரபுக்கவிதையின் மொழிபெயர்ப்பு தமிழின் தன்மைக்கேற்ப சிறு மாற்றங்களுடன்..-அதீதம் இதழில் 13.03.12 அன்று வெளியானது..