Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Thursday, October 6, 2011

அரசியல் மங்காத்தா!!

என்ன ஒரு பரிமாண வளர்ச்சி! டார்வின் கோட்பாடு கூறுவது உடற்கூறு தொடர்பான 'survival of the fittest'...ஆனால் நம் தற்கால..ஏன், வருங்கால அரசியலைக் கருத்தில் கொண்டால், டார்வின் கோட்பாடு உடற்கூற்றைத் தாண்டிய உளவியல் தொடர்பானதாக இருப்பது என்ன பெரிய கொடுமை.... யாரை மிதித்து யார் முன்னேறுவது..இதுவும் உளவியல் தொடர்பான survival of the fittest...

எந்த ஒரு கட்சி மீதும் நம்பிக்கையில்லை...எந்த ஒரு தலைவனுக்கும் / தலைவிக்கும் கொள்கைகளும் இல்லை..கொள்கை பெயரளவில் இருந்தாலும் அதைப் பின்பற்றுவதாக இல்லை...எதில் வேறுபட்டாலும் இதில் மட்டும் அரசியல்வாதிகளுக்குத்தான் என்ன ஒற்றுமை!

உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவது கொஞ்சம் மக்களுக்காக ஏதோ செய்து வந்தார்கள்..இந்த உள்ளாட்சித் தேர்தலில் நடைபெறும் அதிசயங்களைப் பார்த்தால், உள்ளூர்த் திட்டங்கள் 10 சதவிகிதமாவது நிறைவேற்றப்படுமா என்று சந்தேகிக்க வைக்கின்றன...

  • வாக்காளர்கள் எண்ணிக்கையோ என்று மலைக்குமளவு வேட்பாளர் எண்ணிக்கை...
  • தேர்தல் அதிகாரி யார் என்று தெரியாத கட்சித் தலைவர்..
  • கூட்டணியை அவ்வப்போது கழற்றி, மீண்டும் சேர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பவாதம்...
  • காசு வாங்கிக்கொண்டு வேட்புமனு திரும்பப் பெறும் வாங்கும் வேட்பாளர்..
  • தன்னையறியாமலேயே வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து ஒரு வேட்பாளர்..
  • அதிக வேட்பாளர்கள் உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை சரியானதுதானா என்று நீதிமன்றத்தில் வரப்போகும் வழக்குகள்...
  • இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்..

தொலைக்காட்சிச் செய்திகள் பார்ப்பாவர்கள் தொடர்கள் பார்ப்பவர்களைத் தூற்ற...

தொடர்கள் பார்ப்பவர்கள் செய்திகள் பார்ப்பவர்களைத் தூற்ற..

ஆட்சி அரசியலும் சரி..குடும்ப அரசியலும் சரி...

எதுதான் சரியாக இருக்கிறது?

சரிதான்...inky pinky ponky  முறையில் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் என்னதான் ஆகப்போகிறது..

அரசியல் மங்காத்தா ஆட்டத்தில் மீண்டும் மீண்டும் இழப்பது மக்கள் மட்டுமே...

Monday, May 23, 2011

அவரும் இவரும்


நம் எதிர்பார்ப்பு:
2+2 = 4

அவர் சொன்னார்:
3+2 = 5

இவர் சொல்கிறார்:
2+3 = 5

அவர் குடும்பம்
அசல் ஆலமரம்
விழுதுகளாய் வியாபித்து
விண்ணளவு வளர்ந்து
நீள அகலம்
உயரம் ஆழம்
முடியுமட்டும் அளந்து
ஆர்ப்பரித்தது...

இவர் தோழி நட்பு
போன்சாய் ஆலமரம்
வரவேற்பறையில்
படு சமர்த்தாய்த்
தொட்டிக்குள் அமர்ந்து
எண்பது அடி பலத்தை
எட்டங்குலத்துள் அடக்கி
ஆர்ப்பரிக்கும்...

இருவரிடத்தும்
சமமாய்ச் சீரழியும்
சமச்சீர் கல்வி..

புதிய கோட்டையா
பழைய கோட்டையா
கோட்டைக்கான சர்ச்சையில்
கோட்டைவிடப்படும்
ஆக்கப்பூர்வ திட்டங்கள்..

அவர் எதுகை
இவர் மோனை

அவர் ஏணி என்பார்
இவர் கோணி என்பார்

கட்சி
கொள்கை
மக்கள்

அவருக்கும்
இவருக்கும்
விளையாட்டு பொம்மை...

நாம் மட்டும்
என்றும் மாறாத
சகிப்புத்தன்மையுடன்..

அவரையும் சகிப்போம்
இவரையும் சகிப்போம்...

ஐந்து வருடம்
கழித்து..
இன்னமும்
சகிப்போம்!

Monday, February 28, 2011

தேர்தல் தேர்வு

கொள்கை மறந்த
கொள்ளை
கூட்டுச்சதி மறந்த
கூட்டணிச்சதி...

மக்கள்நலம் மறந்த
பணநலம்
நியாய அநியாயம் மறந்த
லஞ்சலாவண்யம்...

இனப்படுகொலை மறந்த
மனப்படுகொலை
மொழிமாண்பு மறந்த
மாண்புமிகுக்கள்.....

நாளைய, நேற்றைய தவறுகள் மறந்த
இன்றைய நேசமணிகள்
கழகக் கலகங்களை மறந்த
கண்மணிகள்...

உடன்பட மறந்த
உடன்பிறப்புகள்
இரக்கம் மறந்த
இரத்தத்தின் இரத்தங்கள்...

தேர்தல் களங்களில்
தேர்வுகள் ஆரம்பம்!

வெற்றி பெற்றதும்
ஆட்சியமைப்பு!
கூட்டணி தேராவிட்டால்
ஆட்சிக்கலைப்பு!
குதிரைபேரத்தில் குளிர்காய்ந்து
மீண்டும் கைகோர்ப்பு!

தேர்தல் களங்களில்
தேர்வுகள் ஆரம்பம்!

இக்கழகமோ...
அக்கழகமோ...
அமோகமாய் வெற்றிதான்!

இதற்கு அது பரவாயில்லை!
அதற்கு இது பரவாயில்லை!
பாழாய்ப்போன நம்பிக்கையில்
மறுபடியும் மறுபடியும்
மறுதேர்வு எழுதினாலும்
பொதுமக்களுக்கு மட்டும்
பாரம்பரியத் தோல்விதான்!