Thursday, November 27, 2008

சம்சாரம் அது எதார்த்தம்



பேருந்திலிருந்து இறங்கி நடந்தான் மாதவன்..லேசான தூறல்..
'இன்னும் விட்டபாடில்லையே இந்த மழை'
சற்றே வேகமாக நடையைப் போட்டான். பசுமலையில் ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்று இருக்கும் ஒரு மாத பட்ஜெட்டில் அவன் மற்றும் மனைவி காஞ்சனாவின் குடித்தனம். தனிக் குடித்தனம்தான்.


'இன்னும் விசேஷமில்லையா' என்ற அனைவரின் கேள்விக்கும் சிரிப்பும் மழுப்பலும் கலந்து அசடு வழிய ஆரம்பித்துவிட்ட, திருமணமான பத்து மாதங்கள் முடிந்த அந்தக் கால கட்டம். திருச்சி சொந்த ஊரென்றாலும் கடந்த 6 வருடங்களாக பணிநிமித்தம் மதுரை வாசம். தூரத்துச் சொந்தமொன்று திண்டுக்கல்லில் இருந்ததைக் கண்டுபிடித்து உறவு விட்டுப் போகக்கூடாதுன்னு அவன் அப்பா, அம்மா தேர்ந்தெடுத்த பெண்தான் காஞ்சனா.


6 மணிக்கு வீட்டுக்குச் சென்றதும் ஒரு குளியல், 6.15க்கு காபி, 7 மணிக்கு செய்தித்தாள் அலசல், 7.15 க்கு அவர்கள் வீட்டுக்கு வரும் பக்கத்து விட்டுக் குழந்தையுடன் கொஞ்சல், சரியாக 7.30 அளவில் தினமும் ஏதாவது ஒரு சாக்கில் ஆரம்பிக்கும் பக்கத்துவீட்டுச் சண்டை, 8 மணிக்கு டிவி செய்தி,
8.30 க்குக் காஞ்சனா சமைத்துவைத்த சாம்பார், அவரைக்காய் அல்லது பீன்ஸ் எதாவது ஒரு பொரியல்...இதை அள்ளி விழுங்கும் போது

'எப்பதான் ரகம் ரகமாச் சமைக்கக் கத்துக்கப்போற' ன்னு

தொண்டை வரை வந்து காணாமல் போகும் வார்த்தைகள்..8.45 ஆனதும் டிரஸ் மாற்றிக் கொண்டு...முதுகுப்பக்கம் துளைத்தெடுக்கும் மனைவியின்

'கிளம்பியாச்சா' என்கிற வழக்கமான கேள்வி..

'கதவைச் சாத்திக்கோ. சீக்கிரம் வந்துர்றேன்'
சீட்டுக் கச்சேரிக்குப் புறப்பாடு..மதுரை வந்த புதிதில் தனிமையை விரட்டத் தொடங்கிய பழக்கம் இன்னும் தொடர்கிறது அதே நேரம் தினமும் நண்பன் ராம் வீட்டில்.

இதுதான் அவர்கள் வாழ்க்கை அன்றாடம். 'அப்பாடா..மழை வராது இனிமே. வெறிச்சிருச்சு' என்று வீடு நெருங்கியவனுக்குப் பகீரென்றது.

வீட்டு வாசலில் பூட்டு.

'மாமா..அத்தை குடுக்கச் சொன்னாங்க' 7.15 மணிக்கு வரவேண்டிய குழந்தை 6 மணிக்கே வந்தது கையில் ஒரு பேப்பருடன்.

'அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு போன் வந்துச்சு. உங்க போன் லைன் கிடைக்கவேயில்ல..அதான் கிளம்புறேன். நிலமைய எப்டின்னு போன் பண்றேன். மஞ்சு அக்காவைப் பால் வாங்கிக் காச்சி வக்கச் சொல்லிருக்கேன். அடுப்படில சாப்பாடு இருக்கும். போட்டுச் சாப்பிடுங்க. போன் பண்றேன். நீங்களும் பண்ணுங்க. - காஞ்சனா.'

உடனே போனை எடுத்து அவங்க வீட்டு எண்ணைச் சுழற்ற அடித்துக்
கொண்டேயிருந்தது. மச்சான் எண்ணைச் சுழற்ற அதுவும் கிடைக்கவில்லை.

'சே' என்றிருந்தது அவனுக்கு. முன்னறையில் வழக்கமான ஒழுங்கு இல்லை.கண்ணாடி அருகில் சீப்பில் சுருண்டு கிடந்த காஞ்சனாவின் முடி, கொடியில் தொங்கிய அவளது ஆடைகள்...

'தம்பி..இந்தாங்க பால்..அவங்க அம்மாக்கு உடம்பு சரியில்லையாம்ப்பா. போன் போட்டுச்சு உனக்கு. கிடைக்கலியாம். நான் வேணா காபி போட்டுத் தரவா?'
மஞ்சு அக்கா.

'இல்லை..வேணாங்க்கா..நா சாப்பாடே சப்பிட்டுக்கிறேன். எத்தனை மணிக்கு போனா?'

'காலேல 10 மணியிருக்கும். சரி. தம்பி. எதுவும் வேணும்னாச் சொல்லிவிடுங்க.'
மஞ்சு போய் விட்டாள்.
பத்து மணிக்கே போயிட்டாளா..


...ஒவ்வொரு இடத்திலும் காஞ்சனாவின் வாசம், சுவாசம் மனதை நெருட சட்டையைக் கூடக் கழற்றாமல் நாற்காலியில் சரிந்தான் மாதவன்..
செய்தித்தாளில், காபியில், டிவியில் மனம் லயிக்கவில்லை. அவள் மெல்லிய கொலுசுச் சத்தம், பூவாசம் எல்லாம் கலந்து நினைவைப் புரட்ட துக்கம் தொண்டையை அடைத்தது அவனுக்கு.

'பாவம் அவள். ஒரு வெளியே தெருவே அழைச்சுட்டுப் போனதில்ல. சொல்லிக்கிறாப்புல ஒண்ணு வாங்கிக் கொடுத்ததில்ல. இனிமே இப்டி இருக்கக் கூடாது..' பிசைந்த சாம்பார் சாதம் இன்று புது ருசியுடன் இருந்தது.
ஆனாச் சாப்பிடத்தான் முடியவில்லை.

'இத்தனை நாள் ரொம்பத் தப்புப் பண்ணிட்டேன். யார் கேலி பண்ணாலும் பரவால்ல..இனிமே சீட்டுக் கச்சேரியைக் குறைச்சுக்கணும். அப்பப்ப வெளில கூட்டிட்டுப் போணும். அவளுந்தான் என்னிக்காவது வாயைத் தொறந்து ஒரு குறை சொல்லிருப்பாளா..' மனைவி மேல் காதல் பொங்கி பொங்கி வழிந்தது அவனுக்கு. கண்ணீருந்தான். ஆனா அதற்காக அவன் வெட்கப்படவில்லை. துடைத்துக்கொள்ளவுமில்லை.

மீண்டும் எண்களைச் சுழற்றினான். கிடைச்சால்தானே..ச்சே!
மணி 8.30. வாசலில் ஆட்டோச் சத்தம் கேட்க, காஞ்சனா வந்துவிட்டாள்.

'அத்தைக்கு இப்போ எப்டிருக்கு?'

'இப்ப நல்லாருக்காங்க. வழக்கமா வர்ற மூச்சு இரைப்புதான். உங்க போன் கிடைக்கல. நேரா ஆஸ்பத்திரிக்குப் போனேன். ஆக்ஸிஜன் கொடுத்திருக்காங்க. சாப்பிட்டீங்களா? சாயந்திரம் டிஸ்சார்ஜ் பண்ணிருப்பாங்க. நாந்தான் போட்டது போட்டபடி கிடக்குன்னுட்டு ஓடிவந்துட்டேன்..' பட படவென்று அவள் தொடர,

'கிளம்பியாச்சா' என்ற அவள் கேள்விக்கு முன்...



'கதவச் சாத்திக்கோ. சீக்கிரம் வந்துர்றேன்' மாதவனின் வழக்கமான புறப்பாடு..
*அப்பாடா..ரொம்ப நாளா நம்ம திவ்யா மாதிரிப் படத்தோட கதை போடணும்கிற ஆசை அரைகுறையாவாவது நிறைவேத்தியாச்சு...
* இது ஓ ஹென்றியின் 'The Pendulum' என்கிற ஆங்கிலச் சிறுகதையின் தழுவல்..

23 comments:

ராமலக்ஷ்மி said...

சம்சாரம் அது.. எதார்த்தமோ எதார்த்தம். ஓ ஹென்றியின் பெண்டுலமும் ரொம்பம் பொருத்தம்.

Unknown said...

பாச மலர்,

//ஒவ்வொரு இடத்திலும் காஞ்சனாவின்//
கதை நன்றாக இருந்தது..தழுவல் கதைதான். அதை எழுதுவதற்கும் ஒரு திறமை வேண்டும்.அது இருக்கிறது.

நான் ஒரு சிறுகதை விரும்பி. மற்ற சிறுகதைகளையும் படித்தேன்.

ஒரு சின்ன வேண்டுகோள்:

படங்கள் போட்டால் கவனம் சிதறி கதையின் போக்கு நீர்த்துவிடும். மாதவனும் ஸ்னேகாவும் படிப்பவரின் மனதில் டூயட் பாடி உங்கள் எழுத்து வீணாகிவிடும். கஷ்டப்பட்டு எழுதி இருக்கிறீர்கள் .

/அப்பாடா..ரொம்ப நாளா //

இந்த விளையாட்டுத்தனம் இல்லாமல் எழுதுங்களேன் .


என் வலைக்கு வந்து கதை/கவிதை/கட்டுரை படித்து சாத்தலாம் /வாழத்தலாம்

நாகை சிவா said...

:))

மனித மனம் ஒரு குரங்கு....

படங்கள் போட்டது எல்லாம் சரி தான், ஆனால் தெளிவாக இல்லை. அதை சரி செய்யுங்கள். நன்றாக வரும்.

அன்புடன் அருணா said...

அட நல்லாருக்கே..
அன்புடன் அருணா

Anonymous said...

தழுவல் கதைன்னாலும் நம்ம ருசிக்குத்தகுந்தால் போல மாத்திருக்கீங்க, சூப்பரா இருக்கு

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராமலக்ஷ்மி..

நன்றி ரவிசங்கர்..ஆலோசனைக்கு நன்றி..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி சிவா..அருணா, சின்ன அம்மிணி..

வல்லிசிம்ஹன் said...

படு யதார்த்தம். பாசமலர்
மனம் ஒரு குரங்குன்னு சும்மாவா சொன்னாங்க. வாழ்க்கையில்
தவறுகள் மீண்டும் செய்வது பழக்கங்களில்னால் தான். அதை படு காஷுவலாகச் சொல்லிவிட்டீர்கள்.
நன்றாக இருந்தது.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

இந்த வகை செக்குமாட்டுத்தனம் ஆண்களிடம் உண்டு என்பது நிஜம்.

நமக்காக ஒரு பெண் வீட்டில் காத்துக் கொண்டிருக்கிறாள் என்பது கொஞ்சமும் உறைக்காத ஆண்கள்தான் அதிகம்.
(மிகச் சில அரிதான சமயங்களில் நான் உள்பட!)

அத்திரி said...

//ஒவ்வொரு இடத்திலும் காஞ்சனாவின் வாசம், சுவாசம் மனதை நெருட ட்ரஸ்ஸைக் கூடக் கழற்றாமல் நாற்காலியில் சரிந்தான் மாதவன்..
செய்தித்தாளில், காபியில், டிவியில் மனம் லயிக்கவில்லை. அவள் மெல்லிய கொலுசுச் சத்தம், பூவாசம் எல்லாம் கலந்து நினைவைப் புரட்ட துக்கம் தொண்டையை அடைத்தது அவனுக்கு.//

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...............

கோபிநாத் said...

நல்ல முயற்சி...நல்லாயிருக்கு..;;)


நிறைய திரைப்படங்கள் ஞாபகத்துக்கு வருது ;))

கிருத்திகா ஸ்ரீதர் said...

படிச்சோன்ன பளீர்னு ஒரு அறை விடனும்போல தோன்றியது(இருவரையும் தான் இது வரை ஒன்றும் கேட்காமல் விட்ட தவறுக்காக அவளையும், இப்படி பொறுப்பற்ற தன்மைக்காக அவனையும்). அதுதானே ஒரு நல்ல கதைக்கான அடையாளம். வாழ்த்துக்கள் மலர்.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி வல்லி மேடம்..
பழக்கங்களில் சிலவற்றை சற்றே மாற்றி அமைத்துக் கொண்டால் பலவிதங்களில் பயன்பெற முடியும்..

பாச மலர் / Paasa Malar said...

வாங்க அறிவன்..

செக்குமாட்டுத்தனம் என்பது பெண்களிடமும்தான் உள்ளது...இந்த நாயகியும் கூட அப்படித்தான்..

இருவரிடம் உள்ள இந்த செக்குமாட்டுத்தனம் வரையறுக்கப்பட்ட formula வாழ்க்கை சற்றே மாறினால் என்னவொரு சந்தோஷம்..

பாச மலர் / Paasa Malar said...

வாங்க அத்திரி..

ஏதோ நினைத்து பெருமூச்சு..புரிகிறது..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கோபி..இது போல முயற்சிகள் நான் செய்வதை உங்களைப் போன்ற பலர் ஊக்கப்படுத்துவதே சிறந்த பலத்தைத் தருகிறது.

பாச மலர் / Paasa Malar said...

//படிச்சோன்ன பளீர்னு ஒரு அறை விடனும்போல தோன்றியது(இருவரையும் தான் இது வரை ஒன்றும் கேட்காமல் விட்ட தவறுக்காக அவளையும், இப்படி பொறுப்பற்ற தன்மைக்காக அவனையும்).//

அட..இதுதான் நம்ம கிருத்திகா..நாணயத்தின் மறுபக்கமும் ஆராயப்பட வேண்டிய ஒன்றுதானே..தப்பு இருவர் பக்கமும்தான்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்பவே யதார்த்தம்ங்க :)

இப்படியே யதார்த்தமா எத்தனை பேரு வாழ்ந்துட்டு போயிடறாங்க..

பாச மலர் / Paasa Malar said...

உண்மைதான் முத்துலெட்சுமி..இப்படி வாழ்பவர்கள் நிறைய பேர்..

Divya said...

அன்பின் பாசமலர்,

உங்கள் கதை படிக்க ஆரம்பித்ததும்.....மாதவன் படத்தை பார்த்ததுமே நினைச்சேன்,
ஆஹா....நம்ம கட்சிக்கு வந்துட்டாங்க பாசமலர் னு:)))

Divya said...

\\*அப்பாடா..ரொம்ப நாளா நம்ம திவ்யா மாதிரிப் படத்தோட கதை போடணும்கிற ஆசை அரைகுறையாவாவது நிறைவேத்தியாச்சு...\\


ஹா ஹா!!

இப்படியும் ஒரு ஆசை ஏற்படுத்துச்சா....என் கதை பதிவுக:))

ஆசை 'முழுமையா' நிறைவேற....என் வாழ்த்துக்கள்!!

Divya said...

\\' மனைவி மேல் காதல் பொங்கி பொங்கி வழிந்தது அவனுக்கு. கண்ணீருந்தான். ஆனா அதற்காக அவன் வெட்கப்படவில்லை. துடைத்துக்கொள்ளவுமில்லை.\\

மனசு மாறிட்டார் மாதவன்னு நினைச்சா......

கதை முடிவுல....

\கதவச் சாத்திக்கோ. சீக்கிரம் வந்துர்றேன்' மாதவனின் வழக்கமான புறப்பாடு..\

இப்படி போட்டுட்டீங்களே....:((


கதை நடை ரொம்ப ரொம்ப ரியலிஸ்டிக்கா இருந்தது.

காட்சிகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது உங்கள் எழுத்து நடை.

வாழ்த்துக்கள்!!

பாச மலர் / Paasa Malar said...

நன்றி திவ்யா