Tuesday, January 27, 2009

தாய்மை விதி


என்ன இவளை இன்னும் காணவில்லை..கடிகாரத்தைப் பார்த்தாள் சுவாதி..மணி காலை 7.15..7.16..அதோ அரக்கப் பரக்க ஓடி வருகிறாளே..


பாவம்.. வாடகை குறைவென்பதால் மூன்றாவது மாடியில் மொட்டைமாடி வீட்டில் இருந்து 40 நாள் குழந்தையையும் அதற்கான மூட்டைகள்,

இவளுக்கான மூட்டைகள் சுமந்து இறங்கி வந்து குழந்தையை நாலு தெரு தள்ளி இருக்கும் ஒரு பெண்ணிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு ரியாத்

காலை நேரப் போக்குவரத்து நெரிசலில் நீந்தி வருவதென்றால் சும்மாவா..


வழியில் இருந்த மேற்பார்வையாளரைப் பார்த்துச் சமாளித்து வகுப்பிற்குள் வந்தாள் வந்தனா.


'வந்து ரொம்ப நேரமாச்சா சுவாதி?'


'ம்ம்..6.50க்கு வந்தேன்..என்ன இன்னிக்கும் சிவப்புப் புள்ளிதானா ரிஜிஸ்தர்ல?'


'ஆமா..5 சிவப்புப் புள்ளி வந்தாச்சு 15 தேதிக்குள்ள..இப்பவே ஒரு நாள் சம்பளம் அம்பேல்..கொஞ்சம் இரு வந்திர்றேன்' ..வகுப்பறையில் நுழைந்த வந்தனா குழந்தைகளுக்குக் காலை வணக்கம் சொல்லிப் பணியைத் துவங்கினாள்.


நர்சரி வகுப்பின் இரண்டாவது வாரம்..ஒரே கூச்சலும் குழப்பமும் குவிந்த அறை..மலர்ந்தும் மலராத கண்களுடன் தூக்கத்தில் மலங்க மலங்க விழித்தபடி சில, புரியாத மழலை அரபியில் முனகிக் கொண்டு சில, அழுது தேம்பியபடி சில..இருந்தாலும் ஆசிரியையைக் கண்டதும் ஒரு மலர்ச்சி..ஒரு குழந்தையின் மூக்கைத் துடைத்து, பழச்சாறு குடிக்க முறபட்ட குழந்தையைச் சமாதானப்படுத்தி அதை உள்ளே வைத்து..ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாய்ச் சமாளித்து அவர்களுக்கான படிப்பு மற்றும் விளையாட்டுக் கருவிகளை ஒவ்வொரு குழந்தையின் முன் எடுத்து வைத்தபடியே பேசினாள் வந்தனா..


'இன்னிக்கே தமாம் போகணுமா என்ன..ஒரு நாள் இருந்துட்டுப் போயேன்..'


'இல்ல. ராகுல் தனியா இருப்பானே.'


'கூட்டிட்டு வந்திருக்கலாம்ல அவனையும்..'


'உடனே திரும்பணுமே. அதான் கூட்டிட்டு வரலை. அவனும் பள்ளிக்கு லீவே

போடமாட்டான். பக்கத்து வீட்ல இருப்பான். உன்னைப் பாக்கலாமேன்னு

நான் வந்தேன். ராத்திரிக்குள்ளதான் போய்ருவோமே...'


இருவரும் பள்ளிப்பிராயத்துத் தோழிகள். கல்யாணமாகி வெளிநாடு வந்தும் நட்பு தொடரும் கொடுப்பினை வாய்த்தவர்கள். ரியாத்திலேயே இருந்தவர்கள்தான். ஆனால் இப்போது சுவாதியின் கணவனுக்கு தமாம் மாற்றலாகிவிட்டது.


முதலில் இந்தப் பள்ளியில்தான் சுவாதியும் வேலை செய்தாள். ஆனால் இந்தியப் பிரிவில். வந்தனா வேலையில் இருப்பது அரேபியப் பிரிவில்.


அலுவலகப் பணிநிமித்தம் ரியாத் வரவேண்டியதால் இன்று இங்கே..


'இன்னும் இந்தியப் பிரிவிக்கு மாறலியா வந்தனா?'


'எங்கே..இதுல பழகியாச்சு..கொஞ்சம் அரபியும் பேச ஆரம்பிச்சுட்டேன்.. வேற யாரும் கிடைக்கல..அதான்..எங்கே மாத்தப் போறாங்க..'


'என்னக் கேட்டா இந்த நர்சரி, மர்றும் கே.ஜி. வகுப்பாசிரியர்களுக்குத்தான் சம்பளம் அதிகம் இருக்கணும். அதிகாரம் என் கையில் இருந்தா நான் அதான் பண்ணுவேன்..'


பேச்சும் வேலையுமாய்ப் போய்க் கொண்டிருக்கையில்..


சட்டென்று முகம் மாறினாள் வந்தனா. வலி பொறுக்க முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டாள்.


'இரு வர்றேன்..' போய்விட்டு அவள் திரும்பியபோது முகத்தில் வேதனை கொஞ்சம் குறைந்திருந்தது.


'இன்னும் பள்ளியில் குழந்தைகள் காப்பகம் வக்கலியா வந்தனா..'


'இடம் பத்தலன்னுதான் சொல்றாங்க இன்னும்..'


வேலையை விடவும் முடியாது. அவள் கணவனுக்குக் குறைவான சம்பளம், வீட்டு வாடகை, சாப்பாடு இத்தனை செலவையும் சமாளிக்க வேண்டுமே. குழந்தைக்குப் பாலூட்ட முடியாத கொடுமைதான்..


'என்னமோ போடி..கஷ்டமாருக்கு..உன் வீட்டுக்காரருக்கு நல்ல வேலை இன்னும் கிடைச்ச பாடில்லயா..'


'எங்கே..அங்கங்கே சொல்லி வச்சுருக்கு..கிடைக்கும்னு நினைக்கிறேன்..'


ஒரு குழந்தை ஓடி வந்து இன்னொரு குழந்தையைக் காட்டி அரபியில்

ஏதோ சொல்ல இவள் சென்று சமாதானப்படுத்தி வந்தாள்.


'அடுத்த மாசம் ஊருக்குப் போறேன், வந்தனா. அம்மாவைப் பாத்துட்டு வர்றேன்..ஏதும் கொடுக்கணுமா அவங்களுக்கு..'


'இல்ல..நா நல்லாருக்கேன்னு சொல்லு..வேற எதுவும் சொல்ல வேணாம். வீணாக் கஷ்டப்படுவாங்க..வெளிநாட்டுல மக நல்ல வாழ்க்கை ஏகபோகமா வாழ்றான்னு நெனச்சுக்கட்டும்..'


'ஊருக்காவது ஒரு நடை போயிட்டு வாயேன்..குழந்தையைப் பாக்க அங்க எல்லாருக்கும் ஆசையா இருக்குமில்ல..'


'போகணும்..'என்று வாய் சொல்ல இயலாமையில் மனம் தளும்பியது. 'நீயும் தமாம்ல வேற வேலை இவருக்கு முயற்சி பண்ணு..ரிலீஸ் கொடுப்பாங்க கம்பெனில..விசா மாத்தறது ப்ரச்னை இருக்காதாம். இவர் சொன்னார்..'


'கண்டிப்பா..ஏற்கனவே நல்ல வேலையாத்தான் உன் கணவருக்காகப் பாத்திட்டிருக்கார் இவர்..'


சுவாதியின் கைபேசி அவள் கணவர் வரவை அறிவிக்க விடைபெற்றுச் சென்றாள் அவள்.


குழந்தைகளுடன் பணியில் மூழ்கிப் போனாள் வந்தனா.


மீண்டும் வலி ....மீண்டும் ஓய்வறைக்குச் செல்லுதல்..என்று இது தொடர்ந்தது 3 முறை...


பள்ளி முடிந்து தனியார் வாகனத்தில்தான் செல்ல வேண்டும். அவள் கணவனால் மதியம் வர முடியாது..அந்தப்பெண்ணின் வீட்டுக்குப் போனாள்..


'இன்று என்னமோ கரைத்த பாலை இவ குடிக்கவே இல்ல..'என்றாள் அந்தப் பெண்.


சட்டென்று ரவிக்கை நனைந்ததைக் கருப்பு பர்தாவுக்குள் உணர முடிந்தது அவளால்.


'குட்டிம்மா..கொஞ்சம் இருங்க..இதோ வீட்டுக்குப் போய்ரலாம்...அப்புறம் வயிறு முட்டக் குடிக்கலாம்..'


மீண்டும் போக்குவரத்து நெரிசல்..இன்னும் அரை மணி தாமதம்..வழியில் அத்தனை குழந்தைகளையும் இறக்கி விட்டு வீடு வருவதற்குள் குழந்தை தூங்கிப் போய்விட்டது பசி மயக்கத்தில்..


படியேறிக் கதவைத் திறக்கையில் நெஞ்சு வலித்தது.


மீண்டும் அழ ஆரம்பித்தது குழந்தை.


....பைகளை விசிறிவிட்டுக் கருப்பு பர்தவைக் கழற்றிவிட்டுக் குழந்தையை வாரியணைத்துப் பாலூட்ட முற்பட்டாள்....பால் கட்டிக் கொண்டுவிட என்ன முயன்றும் முடியாமல் போக...


அதுவரை தொண்டை வரையில் அடைபட்டிருந்த தாழ்கள் திறந்து துக்கம் பீரிட மடிந்து சரிந்து அழ ஆரம்பித்தாள் வந்தனா.
பத்து மாதம் சுமக்க வேண்டும்
தாய்மை விதி..
பாலூட்டி வளர்க்க வேண்டும்
தாய்மை விதி..
இது என்ன விதி?

14 comments:

அன்புடன் அருணா said...

இதுதான் இப்போதைய பெண்களின் நிலை.
அன்புடன் அருணா

Divya said...

ஒரு பெண்ணின் நிலையை, அவளது வேதனையை இதை விட தெளிவாக விளக்க முடியாது.

சொல்ல நினைத்த கருத்தினை, மிக நேர்த்தியாக வெளிக்கொண்டு வந்திருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்:))

கோபிநாத் said...

\\பத்து மாதம் சுமக்க வேண்டும்தாய்மை விதி..பாலூட்டி வளர்க்க வேண்டும்தாய்மை விதி..இது?\\

இந்த வரிகள் சரியானதாக இல்லைனு என் மனசுக்கு படுக்கிறது.

இந்த வரிகளை தவிர கதையில் ஒரு பெண்ணின் தாய்மையின் வலியை, இயலாமையை மிக நன்றாக சொல்லியிருக்கிங்க. ;)

ராமலக்ஷ்மி said...

அருமை பாசமலர்.
தாய்மையின் வலியே வாழ்வை எதிர்நோக்கும் வலிமையையும் தந்து விடுகிறதோ..? தாய்மை வரம் என்றால் அந்த வலிமை சமூகம் பயன்படுத்திக் கொள்ளும் சாபமாகி விடுவதை உணர்த்துகிறது கதை.

அமுதா said...

//பத்து மாதம் சுமக்க வேண்டும்தாய்மை விதி..பாலூட்டி வளர்க்க வேண்டும்தாய்மை விதி..இது

:-((

நாகை சிவா said...

நல்லா இருங்குங்க நீங்க கதை சொன்ன விதம்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

"என்னக் கேட்டா இந்த நர்சரி, மர்றும் கே.ஜி. வகுப்பாசிரியர்களுக்குத்தான் சம்பளம் அதிகம் இருக்கணும். அதிகாரம் என் கையில் இருந்தா நான் அதான் பண்ணுவேன்." நான் எப்போதும் நினைத்துக்கொள்ளும் எண்ணம் இது. தாய்மையின் வலி தாளமுடியாதுதான்.. நேர்த்தியான படைப்பு.. வாழ்த்துக்கள்.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி அருணா, திவ்யா, ராமலக்ஷ்மி, அமுதா, சிவா.

பாச மலர் / Paasa Malar said...

கிருத்திகா,

சின்ன வகுப்பாசிரியர்கள்தான் அதிகம் சமபளம் பெற வேண்டியவர்கள் என்ற எண்ணம் எப்போதுமே எனக்கு உண்டு. பெரிய வகுப்பு ஆசிரியை என்ற முறையில் இன்னும் அதிகமாக இதை உணர்வதுண்டு..

பாச மலர் / Paasa Malar said...

கோபி,

இப்போது..'இது என்ன விதி?' என்று மாற்றியிருக்கிறேன்..

முதல் இரண்டு 'விதி' - நியதி(condition or rule)

கடைசி 'விதி' - தலைவிதி (fate)

butterfly Surya said...

எழுத்தும் கருத்தும் நல்லாயிருக்கு...

வாழ்த்துக்கள்..

நன்றி.

Unknown said...

பாசமலர்,

நல்ல கரு.நல்லா இருக்கு. சில யோசனைகள் பாச மலர்.

1.”பத்து மாத” இந்த வரிகள்தேவையில்லை.பழங்கால டெக்னிக்.அனாவசியமாகசோகத்தை
injectசெய்யாதீர்கள்.


2.கதையில் கதா பாத்திரங்களின் உறவுகளை சிக்கலில்லாமல் சொல்லாம்.

3.கதையின் ஊடே சோகத்தை பின்னிக் கொண்டுவந்துருக்கிறீகள்.வார்த்தைகளை விட காட்சிப் படுத்துவது நல்லது.
சோகம் படிப்பவர் முகத்தில்அறையும்.

எப்படி?

”ஒரு கையில் தன்னுடைய 40 நாள் குழந்தையையும் அதற்கான பெரிய பேக்கையும்,வைத்துக் கொண்டு ஒவ்வொருப் படியாக இறங்கினாள். இடுப்பு வலி தாங்க முடியாமல் 10வது படியில் உட்கார்ந்தாள்.இன்னும் 20 படி.குழந்தை முணக ஆரம்பித்தது..அவசரமாக பாத்ரூம் வேறு வந்தது......”

தயவு செய்து எல்லா உணர்ச்சிகளையும் கதையுனூடே பின்னுங்கள்.கோனார் நோட்ஸ் போட்டு முதல்/இடை/கடைசி வரியில் காட்டாதீர்கள்.

இது என் வேண்டுகோள்.

அசோகமித்திரனின் “பாலாமணி குழந்தை மண்ணைத் தின்கிறது” கதைப் படியுங்கள்.

வாழத்துக்கள்.

பாச மலர் / Paasa Malar said...

வண்ணத்துப்பூச்சியாரே,

நன்றி

பாச மலர் / Paasa Malar said...

ரவிஷங்கர்,

உங்கள் கருத்தும் ஆலோசனைகளும் என்னை வளர்த்துக் கொள்ள உதவும்.
நன்றி.