Wednesday, January 14, 2009

பூவின் சிதறல்

மரணம் என்பது வாழ்க்கையின் முடிவுதான்..ஒவ்வொருவரும் அதை நோக்கி அடுத்த அடி எடுத்து வைத்தபடி இருக்க எங்கோ யாருக்கோ அது நேர்கின்ற போது பத்தோடு பதினொன்று ஆகி நிற்க, நம்முடன் வாழ்ந்த நம்மில் ஒருவராய் வாழ்ந்த நண்பருக்குத் திடீரென்று நேர்கையில் அந்த இழப்பு, அதன் பாதிப்பு இவ்வளவுதான் என்று அளவுகோலிட முடியாத அளவுக்கு அமைந்து விடுகிறது.

அப்படிப்பட்ட ஒரு துயரத்தில்தான் ரியாத்வாழ் தமிழ் நெஞ்சங்கள் அநேகர் இருக்கிறோம். ஜனவரி 6 அன்று பொழுது விடிகையில் யாருமே நினைத்துப் பார்க்கவில்லை திரு. திருமாவளவனின் (35 வயது) முடிவைக் கூவி இப்படி விடியுமென்று. அவரின் மரணச் செய்தி எழுதிப் புலர்ந்த பொழுது அவரது மனைவி, ஒன்பது மற்றும் நான்கு வயது மகள்களுடன் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் என்று அனைவரையும் ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது.

நிமிடத்தில் புரட்டிப் போடப்பட்டது அவர் குடும்பத்தினர் வாழ்க்கை. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். அவரது மனைவி, மக்கள் மற்றும் சுற்றம் அனைத்து பலங்களும் சீக்கிரம் பெறட்டும்.

விதியின் வலிய கைகள்
எழுதிச் செல்லும் மரணக்கதை..
மீண்டும் ஒரு முறை
தன் சரிதம் எழுதி நிற்க

ஊழிக்காற்றின் உல்லாசத்தில்
உருக்குலைந்த பூவொன்று
வெடித்துச் சிதற

அசையாத வேரும்
ஆட்டம் கண்டிட
கிளையும் இலையும்
தளர்ந்து சோர்ந்திட

பூவது உதிர்ந்தாலும்
காற்றில் கலந்துவிட்ட
அதன் வாசமது
வேருக்குச்
சுவாசமாய் அமைந்திட
வேரின் அடித்தளம்
பற்றியே காத்திட

கிளையும் இலையும்
துளிர்த்துத் தழைத்திட
நம்பிக்கைப் பூவாய்
மீண்டும் பூத்திட
வாழ்த்துகளுடன்
என் அஞ்சலிகள்
சமர்ப்பணம்.

5 comments:

Divya said...

அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

ராமலக்ஷ்மி said...

காலத்தாலும் ஆற்ற முடியாத துயர். அவரது குடும்பத்தினருக்கு என் அனுதாபங்கள்.

//பூவது உதிர்ந்தாலும்
காற்றில் கலந்துவிட்ட
அதன் வாசமது
வேருக்குச்
சுவாசமாய் அமைந்திட
வேரின் அடித்தளம்
பற்றியே காத்திட

கிளையும் இலையும்
துளிர்த்துத் தழைத்திட
நம்பிக்கைப் பூவாய்
மீண்டும் பூத்திட//...

நானும் இணைந்து பிரார்த்திக்கிறேன்.

தமிழ் said...

என்னுடைய அனுதாபங்கள

கிருத்திகா ஸ்ரீதர் said...

முகமறியா அக்குடும்பத்தாரின் முழு சோகமும் எங்களுள் வந்து தங்குகிறது தோழி. காலம் அவர்களை அவர்களின் இழப்புகளிலிருந்து மீளும் திறனை அளிக்கட்டும் அதற்காகப்பிரார்த்திக்கிறது எங்கள் மனம்.

Unknown said...

பாசமலர்,

அஞ்சலிக் கவிதை சோகமா இருக்கு.