Saturday, March 20, 2010

குறளின் குரல் - 1

1. அழிவி நவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்

   அல்லல் உழப்பதாம் நட்பு.

(அதிகாரம்: 79. நட்பு; குறள் எண்: 787)

விளக்கம்:


நண்பர்க்கு அழிவு வரும்போது அவர்க்கு உதவி செய்து அவ்வழிவை நீக்கி, அவரை நிலைபெறச் செய்வது நல்ல நட்பு; நீக்க முடியாத, தவிர்க்க முடியாத அழிவாக இருப்பின்,தானும் அவரோடு துன்புற்று வருந்துவது நல்ல நட்பு.

2. படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்

    மாண்பயன் எய்தல் அரிது.

(அதிகாரம்: 61. மடியின்மை; குறள் எண்: 606)

விளக்கம்:

நாட்டையே ஆளுகின்ற சிறந்த தலைவனின் நட்பு இருந்த போதிலும், சோம்பேல் உடையவர்களுக்கு அதனால் யாதொன்றும் பயனில்லை.

சிறந்து உறுதுணையாக எந்த சக்தி அருகில் இருந்தபோதும், சோம்பல் என்ற ஒன்று நம்மை ஆட்படுத்திவிட்டால்,எந்தத் துணையாலும் யாதொரும் பயனுமில்லை. சில நேரங்களில் சோம்பல் வருவது அனைவர் வாழ்விலும் நடப்பதுதான். ஆனாலும் எல்லாப் பொழுதுகளிலும் சோம்பலுடன் இருந்தால், சில சமயம் அந்தத் துணைகளின் வெறுப்பையே கூடச் சம்பாதிக்க நேரும்.

3. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

    இகழ்வாரை நோவது எவன்.

(அதிகாரம்: 24. புகழ்; குறள் எண்: 237)
விளக்கம்:

தமக்குப் புகழ் உண்டாகும்படி வாழாதவர்கள், தம்மை நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்கின்ற உலகத்தாரை நொந்து கொள்வது எதற்காவோ?

ஒரு செயல் கைகூடி வராத சமயத்தில், தன் தவறு அல்லது இயலாமை என்று யாரும் ஒத்துக் கொள்வதில்லை. புகழ் பெற மாற்றுவழியும் யோசிப்பதில்லை. அச்செயலுக்காக இகழப்படும்போது பிறரை நொந்து கொள்வது மிகவும் இயல்பான ஒன்றுதான். ..இன்றளவும் இது தொடர்கிறதுதானே..
 
4.அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
   பேணாது அழுக்கறுப் பான்.

(அதிகாரம்:  17. அழுக்காறாமை; குறள் எண்: 163)

விளக்கம்:

பிறனுடைய ஆக்கத்தைக் கண்டதும், அதனைப் பாராட்டாமல் பொறாமைப்படுகிறவன், தனக்கு அறனும் ஆக்கமும் சேர்வதை விரும்பாதவனே ஆவான்.

பிறரின் உடைமைகளைக் கண்டு பொறாமைப்படுவது தவறு என்ற கருத்துதான் பெரியோரால் எப்போதும் வலியுறுத்தப்படும். ஆனால் வள்ளுவத்தின் சிறப்பு எதையும் சற்றே விரிவாக ஆய்ந்து நோக்குவதுதானே...பிறரின் ஆற்றல், ஆக்கம் கண்டு பொறாமைப்படுவதுடன், பாராட்டாமல் இருப்பதும் தவறே, தனக்கே ஓர் இழப்பே... என்று இன்னுமொரு கோணத்தில் சுட்டிக் காட்டுகிறார்
 
5. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
    புண்ணென்று உணரப் படும்.

(அதிகாரம்: 58. புகழ்; குறள் எண்: 575)

விளக்கம்:

கண்ணிற்கு அழகு தரும் ஆபரணம் கண்ணோட்டமே. அந்தக் கண்ணோட்டமாகிய ஆபரணம் இல்லையானால், அது "புண்" என்றே சான்றோரால் கருதப்படும்.

இரக்க குணம் இல்லாதவர் வாழ்வு அர்த்தமற்ற ஒன்றாகும். இலக்கியம், திரைப்படம், நாடகம்..இவற்றிலுள்ள பாத்திரங்கள் ஏதோவோர் பாதிப்பை நம்முள் ஏற்படுத்துவதற்கு இந்தக் கண்ணோட்டம்தான் காரணம். இயல்பான வாழ்வில் மட்டும், ஏனோ இருக்க வேண்டிய கண்ணோட்டம் பல சமயங்களில் நம்மிடம் இருப்பதில்லை. கண்ணோட்டம் இல்லாத மனிதன் நிலையான வெற்றி பெறுவானா என்பது சந்தேகமே

6 comments:

கோபிநாத் said...

வாரம்..வாரம் குறள் வருமா!!...

அருமையான முயற்சி...தொடருங்கள். விளக்கங்கள் எளிமையாகவும் தேவையாவும் உள்ளது ;)

தொடருங்கள்..;)

பாச மலர் / Paasa Malar said...

நன்றி திகழ். கோபி, ஒரு குழுமத்தில் நான் தினம் எழுதுவதைத் தொகுத்து என் வலைப்பூவில் பதிந்திருக்கிறேன்.

பாச மலர் / Paasa Malar said...

என்னாச்சு திகழ்..உங்கள் வலப்பூவைப் பார்க்க முடியவில்லையே..

மங்கை said...

நல்ல பயனுள்ள தொடக்கம் மலர்.. தேவையானதும்... முதல் குறளே அருமையான கருத்து...

ராமலக்ஷ்மி said...

தொடர்ந்து ஒலிக்கட்டும் குறளின் குரல். மிக நல்ல முயற்சி.

விளக்கங்கள் வெகு அருமை.

வாழ்த்துக்கள் பாசமலர்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நல்ல முயற்சி மலர், இதைப்படிக்கற சாக்கிலயாவது நாளு குறள் வாசிச்சுக்கறோம்...