Sunday, May 24, 2009

சிரித்தோம் சிந்தித்தோம்


ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக கடந்த ஏப்ரல் 30ந் தேதி, ரியாத் இந்திய பெண்கள் பன்னாட்டுப் பள்ளியில் நடந்த 'சிரிப்போம் சிந்திப்போம்' நிகழ்ச்சி மிக அருமையாக நடந்தேறியது. பேராசிரியர் டாக்டர் பெரியார்தாசன் அவர்களின் சொற்பொழிவை அடுத்து, ரோபோ ஷங்கர், ஈரோடு மகேஷ், ஜெகன் ஆகியோரின் பல்சுவை நிகழ்ச்சி சரியான விருந்து....நகைச்சுவை
மருந்தும்தான்...

நிகழ்ச்சி முடிந்ததும் நகைச்சுவைக் கலைஞர்கள் இந்தியா திரும்பினர். திரு. பெரியார்தாசன் அவர்கள் மேலும் இரண்டு வாரம் இங்கே தங்கியிருந்தார். இரண்டு வாரமும் சற்றும் ஓயாமல், சளைக்காமல் அடுத்தடுத்துப் பலவித நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

குறிப்பாக ரியாத், தமாம் மற்றும் ஜெத்தாவில் பள்ளி மாணவர்களின் சுய முன்னேற்றத்துக்காக அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. பாடங்கள் குறித்த திட்டமிடல், மனதை ஒருமுகப்படுத்துதல், படிக்க வேண்டிய சூழல் முதலிய தலைப்புகளில் அவர் கொடுத்த குறிப்புகள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன.

ஒரு பள்ளியில் ஒரு நிகழ்ச்சி என்ற நிலை மாறி அன்றாடம் ஒரு பள்ளி விஜயம் என்றாகிப் போனது. சவுதி அரேபிய மாணவ சமுதாயம் அவரை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.

சாதாரணமாக மனிதர்களைத் தாக்கக்கூடிய மனப்பிறழ்வுகள் பற்றிய அவரின் மனோதத்துவத்துறை சார்ந்த சொற்பொழிவுகளும் சரி, இனிய வாழ்க்கைக்கான வழிமுறைகள் குறித்த சொற்பொழிவுகளும் சரி...மீண்டும் மீண்டும் வியப்பில் ஆழ்த்திக் கொண்டேயிருந்தன.

ரியாத் எழுத்துக்கூடம் சார்பாக நிகழ்ந்த கவியரங்கத்தில் வெளிப்பட்ட அவரின் கவிதை முகம் பலரையும் மகிழ்ச்சிப் பரவசத்தில் ஆழ்த்தியது. புதுக்கவிதை, மரபுக்கவிதை எல்லாவற்றிலும் புலமை வாய்ந்தவர் என்பதைக் கண்கூடாகக் காணமுடிந்தது.

திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கியம் நமக்காக வகுத்திருக்கும் வாழ்க்கை நெறிகளில் இருந்து விலகி வேறுவழி செல்வதன் மூலம் எவ்வளவு சந்தோஷங்களை இழந்திருக்கிறோம் என்று அவர் கோடிட்டுக் காட்டியது...நல்மனம் பெறும் குறிப்புகள் தந்தது...என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

தனிப்பட்ட முறையில் மனவியல் குறித்த ப்ரச்சனைகளுக்காக சிலருக்கும் சிகிச்சை அளித்தார். அதன் பலனாய் அவர்கள் இன்று நலம் கண்டு முன்னேறி வருவதாகவும் தெரிய வந்தது.

தூய தமிழ், சென்னைத் தமிழ், ஆங்கிலம் என்ற அனைத்திலும் சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் அவருடைய பேச்சாற்றல் தனித்தன்மை வாய்ந்தது.

தன்முனைப்புப் பயிற்சியாளர், பச்சையப்பன் கல்லூரி தத்துவத்துறை உளவியல் பேராசிரியர்(ஓய்வு), 25 ஆண்டுகளாக மனவியல் பயிற்சியாளர், 20 ஆண்டுகளாக மனவியல் சிகிச்சையாளர், பல்வேறு துறைகளில் பல புத்தகங்கள் எழுதியவர், இலக்கியவாதி, சர்வதேச கருத்தரங்குகளில் மனவியல் சிகிச்சை பற்றிய கட்டுரைகள் வழங்கியவர், 'கருத்தம்மா' புகழ் திரைப்பட நடிகர் ..இவ்வாறாயப் பல்முகங்கள் கொண்டவரின் அனைத்துத் துறைத் திறமைகளையும் கண்கூடாகக் காணமுடிந்தது.

எப்பேர்ப்பட்ட எளிமையான மாமனிதர் என்ற வியப்பிலிருந்து இங்கே நான் மட்டுமல்ல, இன்னும் பல நண்பர்களும் விடுபடவேயில்லை.

Tuesday, April 28, 2009

மனிதம்

மனிதம்
மனதின் புனிதம்
தேவை இந்த வேதம்.

மனிதநேயம் மட்டுமே
விதியாய்க் கொண்டு
உயிர்கள் பலவும்
உலவிய காலம்
இது மனிதம் அன்று

மனிதம் மருவி
மதம் என்றாகி
இனம் என்றாகி
பணம் என்றாகி
பதவி என்றாகி............
மதம் பிடித்து
ஆ(ட்)டுகின்றது இன்று..

வாழ்க்கை அகராதியில்
மனிதத்தின் அர்த்தங்கள்
திரும்பத் திரும்பத்
திருத்தி எழுதப்பட்டு
திக்குத் தெரியாமல்
திகைக்கின்றது இன்று.

சாலியன்வாலாபாக்கில்
சக உயிர்கள்
சல்லடையாய்த்
துளைபட்ட போது
துடித்தெழுந்தது மனிதம் அன்று.

இலங்கை தொடங்கி
இஸ்ரேல் வரை
இனங்களின் பிணக்குவியல்களில்..
இதயங்கள் தின்னும்
இரத்த தாகத்தில்
இரை தேடுகின்றது மனிதம் இன்று

அரிய சரித்திரங்கள்
அசாதாரணமான செயல்கள்
அனாயாசமான சாதனைகளாய்..
மனிதமாய் அன்று..

உரிய கடமைகள்
சிறிய உதவிகள்
உயர்ந்த மனிதமாய் இன்று

முதுமையில்
முதியோர் இல்லம் செல்லாமல்
வாரிசுகளுடன் வாழ்க்கை
இது இன்று மனிதம்

உடன்பிறப்புகளுள்
உரசல்கள் இல்லாத
உறவுமுறைகள்
இது இன்று மனிதம்

இன்னும் கைப்பைக்குள்
கைத்துப்பாக்கி கத்தி
சுமக்கவில்லையே நாம்
இது இன்று மனிதம்.

பரிணாமத் தளர்ச்சியில்
பன்முகங்கள் கண்டாலும்
பாழ்பட்டு நின்றாலும்
நல்மனங்களில் இன்னும்
நலியாமல்
நாடிதுடித்து நிற்கிறதே
இதுவும் இன்று மனிதம்.

ஏதோவோர் மூலையில்
எரியும் உயிருக்காய்
சுனாமியில் சுருளும்
சகோதரருக்காய்
இனங்கள் அழிகையில்
இறைந்து கிடக்கும்
பிணங்களுக்காய்

இதயங்கள் வடிக்கும்
இரத்தக் கண்ணீரில்....
வலிய வந்து
உதவும் கரங்களில்...
இறக்காமல்இன்னமும் நின்று
இயங்குகின்றது மனிதம்.
இயக்குகின்றது மனிதம்.

Sunday, March 29, 2009

காலத்தின் கட்டாயம்

நித்தமொரு
புத்தம்புது விடியல்

பழகிய நட்புடன்
பகையோ பகை
விலகிய நட்புடன்
இழையோ இழை

நேற்று குலுக்கிய கைகள்
இன்று
நெரிக்கும் கழுத்துகள்

இச்சையாய் அனிச்சையாய்
இதயம் கழற்றி எறிந்து
இங்கிதமின்றி அறிக்கைகள்
இரைப்பை நிறைப்புகள்

பணப்பைக்குப் பண்டமாற்றாய்ப்
பல உயிர்ப்பாதகங்கள்
பலியாடுகள் பொதுமக்கள்

மீண்டும்
தேர்தல் தேர்
உலா வரும் நேரம்..

பழைய பாத்திரங்களுடன்
புதிய சரித்திரம்
புதிய மேடையில்
பழைய நாடகம்
தற்காலிக அரங்கேற்றம்.
தவிர்க்க முடியாத
காலத்தின் கட்டாயம்.

Tuesday, March 10, 2009

ரியாத்தில் மணற்புயல்




இன்று காலை சுமார் 11 மணியளவிலேயே அறிவிப்பு வந்தது..மிக வேகமானதொரு மணற்புயல் ரியாத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக...
ஏதோ ஏப்பை சாப்பைப் புயல் என்று நினைத்திருந்தேன் முதலில்... ஆனால் அடேங்கப்பா...உங்க வீட்டு எங்க வீட்டு மணல் இல்லீங்க...எங்கும் எதிலும் மணல் மூட்டம்....ஊரே அடர்த்தியான கருஞ்சிவப்பு நிறத்தில் இரவு நேரம் மாதிரியாகிவிட்டது நண்பகல் 12 மணி...மாலைவரை தொடர்ந்தது இந்நிலை..இன்னும் கூட காற்றின் வீரியம் குறையவில்லை..
நான் இங்கிருந்த பத்து வருடங்களில் இந்த அளவுக்கு ஒரு மணற்புயலைக் கண்டதில்லை...வித்தியாசமான அனுபவம்தான்..

Thursday, March 5, 2009

வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள்/ வ(ப)ழக்கமாகிப் போன ஆங்கிலச் சொற்கள்

திகழ்மிளிர் இத்தொடரை எழுதச் சொல்லி நாட்கள் பலவாகிவிட்டன. சரி, பொதுவாக வழக்கில் ஒழிந்து நிற்கும் சொற்களைப் பற்றி எழுதலாம் என்று முதலில் நினைத்தேன். என் வழக்கிலேயே ஒழிந்து போய்விட்ட சொற்களைப் பட்டியலிட்டால் என்ன என்று தோன்றியது.

கடந்த வருடம், ஒரு நண்பர் பொதுவாக நாம் உபயோகிக்க மறந்த தமிழ்ச் சொற்களைப் பட்டியலிட்டு, (கிட்டத்தட்ட 100க்கும் மேல்..மேலோட்டமாகப் பட்டியலிட்ட போது)அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கும் ஆங்கிலச் சொற்கள் இவை என்று சுட்டினார்.

  • பழகிப் போய்விட்டது.
  • மாற்றிக் கொள்ள முடியாது,
  • சமமான தமிழ் வார்த்தை இல்லை,
  • சமமான தமிழ் வார்த்தை இருந்தாலும் உபயோகிப்பது எளிதாக இல்லை,
  • இவ்வார்த்தைகளைப் பேசினால் எல்லோரும் கேலியாகப் பார்க்கிறார்கள்
  • வேற்று மொழி வார்த்தைகளை உபயோகிப்பதில் தவறில்லை என்று தொல்காப்பியரே சொல்லிவிட்டார்
  • தற்போது செந்தமிழ், சுத்தத் தமிழ் என்று பேசுவது நாகரிகமாகிவிட்டது

இப்படி பல சாக்குப் போக்குகள் சொல்லிக் கொண்டாலும் நிறைய வார்த்தைகள் காணாமல் போய்விட்டதுதான் உண்மையான உண்மை.

என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன். இந்த முயற்சி செய்யத் தவறவில்லைதான். என்றாலும் முழுமையான முயற்சி செய்யவில்லை. அப்படி ஓர் அலட்சியப் போக்கு இந்த விஷயத்தில். என்ன முயன்றாலும் ஆங்கிலம் கலந்து நிற்கும் வாழ்க்கையாகிப் போய்விட்டது.

ஓர் ஆங்கில ஆசிரியை என்ற முறையில் ஆங்கிலம் பேசும் போது தமிழ் கலக்காமல் இருக்க முடிகிறது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவள் என்ற முறையில் ஆங்கிலம் கலக்காத தமிழ் பேச முடியாமல் போனது வெட்கம், துக்கம்....

அப்படிச் சில வார்த்தைகளை இதோ பட்டியலிடுகிறேன்.

பாத்ரூம், சோப், டவல், மக், பைப், ப்ரஷ், பேஸ்ட், ப்ர்ட், ஆம்லெட், பட்டர், ஜாம், ப்ரெக்ஃபாஸ்ட், ஸ்கூல் பஸ், கேண்டீன், க்ளாஸ், ப்ளேட், டம்ளர், ரோடு, ஸ்டாப், வெய்ட், லஞ்ச் பாக்ஸ், புக், நோட்புக், பென், பென்சில், பேப்பர், க்வஸ்டின், ஆன்ஸர், ப்ளாக், பாஸ்போர்ட், விஸா, குட்மார்னிங், குட் ஈவ்னிங், குட் நைட், இன்டர்வெல், சினிமா, டிவி, ரேடியோ, பெட்ரோல்...........

அம்மாடி..இப்போதைக்கு முடியாது போலிருக்கிறதே..

இதை எழுதும் போது முரண்கள் பலவிதம் ..இதில் எழுதிய என் வரிகள் நினைவுக்கு வருகின்றன..

ஆங்கிலப் பேச்சில்

பிழையென்றால் வெட்கம்.'

டேமில் பேசவே தெரியாது'

சொல்வதற்குப் பெருமிதம்!

தமிழை 'டேமில்' என்று சொல்லுமளவு இன்னும் மோசமாகவில்லைதான்..என்றாலும் இத்தனை சதவிகிதம் தமிழ் பேசுகிறோம் என்ற நிலையில் இருக்கின்றேனே ஒழிய..முழுமையாகப் பேச என்றுதான் முழு முயற்சி செய்யப் போகிறேன்?

Thursday, February 26, 2009

உட்கார்ந்து யோசித்த போது

திடீர்ச்செயல் முனைதல்

ஒரு செயலுக்காக திடீரென்று முனைகையில் சில கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். அந்தச் செயல் தொடர்கையில் சரி, இது நிரந்தரமல்லவே கொஞ்ச காலம்தானே என்ற சமாதானம் தானாகத் தேடி வரும். கஷ்டங்களை அனுசரிக்கப் பழகிப் போகும். முக்கியமான செயல் என்பதால் செம்மையாக வேறு செய்ய வேண்டும்.

தொடரும் அசௌகரியங்கள்

இவ்வாறு தொடரும் போது முக்கியமான செயல் தடைபடாமல் நடைபெறுமே ஒழிய, பல அசௌகரியங்கள் ஏற்படத்தான் செய்யும். என்னதான் மெனக்கெட்டுச் சமாளித்தாலும் இதுதொடர்ச்சியான அல்லலாகத் தோன்ற, செயலைக் கைவிட எண்ணம் தோன்றும்.

செயல் கைமாற்றம்

செயலைக் கைவிடச் சரியான சந்தர்ப்பத்தை மனம் எதிர்பார்க்கும். செயலைக் கைவிடவும் முடிவு ஏற்படும். செயலைக் கைமாற்ற சரியான நபரைத் தேடவேண்டியிருக்கும்.மனம் இச்செயல் புரியத் தேவையில்லாத, அது தரக்கூடிய அல்லல்கள் களையும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கும்.

ஊக்கம்

செயலைச் செவ்வனே செய்தமைக்காகப் பாராட்டுகள் மற்றும் மேலும் சிறப்பாகச் செயலாற்ற ஊக்கமளிப்பும், கைமாற்ற ஆளில்லாத காரணத்தால் செயலை மீண்டும் தொடரவேண்டிய நிலைமையும் ஏற்படும் சிலநேரம். 'நல்லவரே வல்லவரே' ரீதியிலான பாராட்டுகளுக்கு மனம் சற்றே கிறக்கப்படும். கிடைத்த ஊக்கத்தால் அசௌகரியங்கள் சமாளிக்கும் நிலைமை ஏற்படும் என்ற நம்பிக்கையும் தைரியமும் எங்கிருந்தோ வரும்.

செயல் தொடர்ச்சி

மீண்டும் மனம் மாறிச் செயலுடன் ஒன்றிப் போகும். முன்னிருந்த நிலை மாறி மீண்டும் பல புதுத் தீர்மானங்கள் பிறக்கும். வாழ்க்கை மீண்டும் விட்டு விடவேண்டும் என்று நினைத்த இடத்தில் தொடரும்.

இதனால் தெரிவிக்கப்படுவது என்னவென்றால் மேற்கூறிய அனைத்தும் மீண்டும்............... Money கணக்கு Vs மணிக்கணக்கு Vs (இப்போது கூடவே) மனக்கணக்கும் சேர்ந்து கொள்ளமீண்டும் அவள் ஒரு தொடர்கதை ஆகிப் போனாள்.

(புரியவில்லையென்றால் படிக்க: Money கணக்கு Vs மணிக்கணக்கு)

Monday, February 23, 2009

விஸிட் விஸா

ஷ்..ஷ்..ஷ்...குக்கர் விசில் அடிக்க, 'ஏய் மாலூ குக்கரை
நிறுத்துடி..'குளியலறையில் துணிகளை இயந்திரத்துக்குள் திணித்துக்
கொண்டிருந்த சாந்தி கத்தினாள்.

அடுத்த இரண்டு நொடியில் மீண்டும் 'ஷ்..ஷ்..'இவ என்னிக்கிதான் சொன்ன பேச்சக்கேட்டிருக்கா' முணுமுணுத்தவாறே அடுக்களைக்கு விரைந்து அணைத்தாள். மீண்டும் குளியலறைக்கு விரைய,இப்போது போன்...
இன்னிக்கு என்ன நிம்மதியா ஒரு வேலையை முடிக்க முடியாது போலருக்கே...

'ஹலோ..'

'ஹலோ..வணக்கம் அண்ணி....நா முரளி பேசறேன்..அண்ணன் இருக்காரா...'

'இல்லியே முரளி. ஆபீசுக்குப் போயிட்டார்...மொபைல்ல பேசேன்..'

'முதல்ல அதுக்குதான் அடிச்சேன்..ஆனா எடுக்கவேல்ல...'

'ஏதும் சொல்லணுமா..'

'ஆமா..அம்மா விசாவுக்காகப் பாக்கச் சொல்லிருந்தாருல்ல...விசா கிடைச்சுருச்சு...கொஞ்சம் சொல்லிருங்க..நானும் அப்புறம் பேசறேன்..'
தூக்கிவாரிப்போட்டது அவளுக்கு..அய்யோ..இது வேறயா..'ம்.ம். சரிப்பா..நா சொல்லிர்றேன்..நீ நல்லாருக்கியா..என்னா வீட்டுப் பக்கம் வர்றதே இல்ல..'

'வர்றேன் அண்ணி..நேரம் கிடக்கிறப்ப..அவர்கிட்ட சொல்லிருங்க..வச்சுர்றேன்..'
போனை வைத்தவள் அப்படியே உட்கார்ந்துவிட்டாள். என்ன ஒரு தைரியம் இவருக்கு..என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம..

அவர்கள் வசிப்பது ரியாத்தில்.இருவரும் வேலைக்குப் போகிற அவசரம்தான்..இன்று நாலாவது வியாழன் என்பதால் அவளுக்கு விடுமுறை. பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறாள் சாந்தி. கணவன் மனோகர் ஒரு கணினிப் பொறியாளர். எப்போதும் தலையைப் பிய்க்கிற வேலைதான்..என்ன இருந்தாலும் அவங்கம்மா வருவது சின்ன விஷயமா...இத ஏன் எங்கிட்ட சொல்லாம இருக்கணும்...இங்கே இருக்கிற பரபரப்பில்.. இருக்கிற தலைவலில இது வேறயா..எவ்வளவு செலவாச்சோ...

பிள்ளைகள் படுக்கையறையில் ஒரே சத்தம்...மாலுவுக்கும் பூஜாவுக்கும் சண்டையோ சண்டை...பெரியவள் மாலதி 8வது வகுப்பு..சிறியவள் பூஜா 6ம் வகுப்பு..

ஏ...பரிட்சைக்குப் படிங்களேண்டி...மார்க் குறையட்டும்...கொன்னுர்றேன் ..ஆமா..உங்க முத்துலட்சுமிப் பாட்டி வர்றாங்களாமே..அப்பா ஏதும் சொன்னாரா..'

'ஹை...பாட்டி வர்றாங்களா..ஜாலி..' இருவருக்கும் கொண்டாட்டம்...

'ஆமா..வர்றாங்க...எனக்கு ஒரு வார்த்தை சொன்னாரா உங்கப்பா...'

'மறந்துருப்பார்...இல்லேன்னா சொன்னப்போ நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்கம்மா..'இது மாலு.

'சரி..பாட்டி நம்ம ரூம்ல தங்கட்டும்....' இது பூஜா...

இவளின் அவஸ்தை தெரியாமல் அவர்கள் திட்டமிடத் தொடங்கினார்கள் தங்கள் சண்டையையும் மறந்து...

என்ன இருந்தாலும் ஒரே ரத்தம்..கொண்டாட்டம் வேற இந்தப் பொண்களுக்கு..எனக்குதான் அவஸ்தை..அய்யோ என்றிருந்தது அவளுக்கு...ரியாத் வந்து போன வயதானவர்கள் குறித்த அனுபவங்கள், தோழியரின் கலந்துரையாடல்கள் மனதுக்குள் முண்டியடித்துக் கொண்டு வந்தன..

ஒரு அம்மா சொன்னது...'என்ன ஊருடா இது..அமாவாசைக்குச் சோறு வைக்க ஒரு காக்கா குருவி கண்ல பாக்க முடியுதா...' வெளியே போறதுக்கே பையன் வந்தாதான் முடியும்..இதுல காக்காயாவது குருவியாவது..

இன்னுமொருவர்....என்னமோ போ எப்போ காரை எடுத்தாலும் குறுக்கே ஒரு பூனை போகுது தினம்...'இந்த சாஸ்திரமெல்லாம் இங்கே பாக்க முடியுமா?

அடுத்தவர்...'இங்கே தங்கமெல்லாம்தான் மலிவாச்சே..உன் தங்கைக்கு ஒரு பிஸ்கட் வேணுமாம்..வரும்போது வாங்கிட்டு வரச்
சொன்னா...'என்னமோ பிரிட்டானியா பிஸ்கட்னு நெனப்பு..

இந்தக் கதையெல்லாம் சொன்ன தோழிகள் தங்கள் இடர்களையும் சொல்லத் தவறவில்லை..

'காலேல எந்திரிச்சு எல்லாம் ரெடி பண்ணி வச்சுட்டு வரதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுது...நம்ம மட்டும்னா அட்ஜஸ்ட் பண்னிக்கலாம்..வேளாவேளைக்குப் புதுசாச்சமைக்கணுமாம்..யாருக்கு அதுக்கு நேரமிருக்கு..'இது ஒருத்தி.

'ஃப்ரிட்ஜைப் பாத்தாலே எங்க மாமியாருக்கு அலர்ஜியாருக்குது..ஊர் மாதிரி இங்கே சிக்கன், மீன் எல்லாம் புதுசாவா கிடைக்கும்..வாங்கி ஃப்ரிட்ஜ்லதான் வச்சாகணும்..எங்கத்தைஎன்னாடி செத்ததைச் சாகடிச்சுச் சாப்பிடுறீங்கன்னு கேக்கிறாங்க...மாசம் பொறந்தா அனுப்புற காசு மட்டும்தான் தெரியுது..இங்கே வந்தாதானே நம்ம அவஸ்தை புரியும்..'இது ஒருத்தி.

'புரிஞ்சுற கிரிஞ்சுறப் போகுது...உனக்கு நெனப்புதான்..இங்கே கூரையப் பிச்சுகிட்டுத் தெய்வம் கொடுக்குது..நம்ம ஜாலியா இருக்கிறோம்னு அவங்க நினப்பு தான் பெரிசு..நம்ம கஷ்டமெல்லாம்அவங்களுக்கு எங்க தெரியுது..' இது மற்றொருத்தி.

இதுல அனைத்தும் கலந்த கலவையாச்சே நம்ம அத்தை...இந்த மனுஷனுக்கு ஆனாலும் ரொம்ப அழுத்தம்..மூச்சு விட்டிருப்பாரா..மாமாவைத் தனியா விட்டுட்டு எப்படி வருவாங்கன்னு ஒரு நிமிஷமாச்சும் யோசனை வந்ததா அம்மாக்கும் புள்ளைக்கும்...இந்த விஷயம் அத்தை மாமாவுக்குத் தெரியுமா..மாமாவை விட்டுட்டுத் தனியா வருவாங்களா என்ன..ஏன் வராம..அதான் அவரைத்தனியா விட்டுட்டுத்தானே ஊர் சுத்துறாங்க..இதுல வெளிநாடுன்னா கேக்கவா வேணும்..

மவளே உன் பாடு திண்டாட்டம்தான்..இப்பவே படாத பாடு..இந்த ஆம்பளைங்களுக்கெல்லாம் நமக்கு இல்லாத பெத்த பாசம் எப்படித்தான் பொத்துகிட்டு வருதோ..நம்மையுந்தான் ஊட்டி வளத்தாங்க..இவங்களுக்குன்னு விசேஷமா என்னத்தைத்தான் ஊட்டி வளத்தாங்களோ..என்னமோ என் போறாத காலம்..

வீட்டு வேலைகளில் நேரம் போக..இடையிடையே மனோகருக்கு போன் செய்யத் தவறவில்லை அவள்..அவன் எடுத்தால்தானே..சரி சரி வரட்டும் இன்னிக்கு..கச்சேரிதான்..

மாலை 7.30 மனியளவில் வந்தான் மனோகர்...

வாண்டுகள் ரெண்டும் வானொலியாகினர்...'அப்பா பாட்டி வர்றாங்களாம்..'

'ஆமாடா..முரளி உனக்கும் போன் பண்ணானாமே சாந்தி...அத்தைக்குப் போன் பண்ணி இங்க வர்றதுக்கு ரெடியாகச் சொல்லு...குட்டிங்களா..சகுந்தலாப் பாட்டி வந்தா உங்களுக்குதான் ரொம்ப ஜாலி..'

'என்னப்பா சகுந்தலாப் பாட்டியா வராங்க..அம்மா முத்துப் பாட்டின்னுல்ல சொன்னாங்க...நீங்க அம்மாகிட்ட சொல்லலியாமே..'

'.....தாத்தா போனதுக்கப்புறம் பாட்டி தனியா இருக்காங்கள்ல...பாவம் உங்கம்மா சாந்தி...3 மாசம் விஸிட் விசா எடுத்தாச்சு..இப்போதான் எனக்கு நிம்மதியாருக்கு. பாரேன்..பிள்ளைங்களுக்கு என்ன குஷி..ஆமா..நா சொல்லலியா உங்கிட்ட..ஸாரி....மறந்துட்டேன்..விசா அனுப்பிச்சாச்சு..ஸ்டேம்ப்பிங் ஆக 10 நாளாகும்...அத்தைக்குப் போன் பண்ணிடு..லக்கேஜ்லாம் அதிகம் வேணாம்..வர்ற 15ந் தேதி ராம் வர்றான்..அவன் கூட வந்துரலாம்..' மனோகர் சொல்லிக் கொண்டே போக, சாந்திக்குதான் சொல்ல வார்த்தைகளின்றிப் போனது.