மனிதம்
மனதின் புனிதம்
தேவை இந்த வேதம்.
மனிதநேயம் மட்டுமே
விதியாய்க் கொண்டு
உயிர்கள் பலவும்
உலவிய காலம்
இது மனிதம் அன்று
மனிதம் மருவி
மதம் என்றாகி
இனம் என்றாகி
பணம் என்றாகி
பதவி என்றாகி............
மதம் பிடித்து
ஆ(ட்)டுகின்றது இன்று..
வாழ்க்கை அகராதியில்
மனிதத்தின் அர்த்தங்கள்
திரும்பத் திரும்பத்
திருத்தி எழுதப்பட்டு
திக்குத் தெரியாமல்
திகைக்கின்றது இன்று.
சாலியன்வாலாபாக்கில்
சக உயிர்கள்
சல்லடையாய்த்
துளைபட்ட போது
துடித்தெழுந்தது மனிதம் அன்று.
இலங்கை தொடங்கி
இஸ்ரேல் வரை
இனங்களின் பிணக்குவியல்களில்..
இதயங்கள் தின்னும்
இரத்த தாகத்தில்
இரை தேடுகின்றது மனிதம் இன்று
அரிய சரித்திரங்கள்
அசாதாரணமான செயல்கள்
அனாயாசமான சாதனைகளாய்..
மனிதமாய் அன்று..
உரிய கடமைகள்
சிறிய உதவிகள்
உயர்ந்த மனிதமாய் இன்று
முதுமையில்
முதியோர் இல்லம் செல்லாமல்
வாரிசுகளுடன் வாழ்க்கை
இது இன்று மனிதம்
உடன்பிறப்புகளுள்
உரசல்கள் இல்லாத
உறவுமுறைகள்
இது இன்று மனிதம்
இன்னும் கைப்பைக்குள்
கைத்துப்பாக்கி கத்தி
சுமக்கவில்லையே நாம்
இது இன்று மனிதம்.
பரிணாமத் தளர்ச்சியில்
பன்முகங்கள் கண்டாலும்
பாழ்பட்டு நின்றாலும்
நல்மனங்களில் இன்னும்
நலியாமல்
நாடிதுடித்து நிற்கிறதே
இதுவும் இன்று மனிதம்.
ஏதோவோர் மூலையில்
எரியும் உயிருக்காய்
சுனாமியில் சுருளும்
சகோதரருக்காய்
இனங்கள் அழிகையில்
இறைந்து கிடக்கும்
பிணங்களுக்காய்
இதயங்கள் வடிக்கும்
இரத்தக் கண்ணீரில்....
வலிய வந்து
உதவும் கரங்களில்...
இறக்காமல்இன்னமும் நின்று
இயங்குகின்றது மனிதம்.
இயக்குகின்றது மனிதம்.
Tuesday, April 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
விளாசி விட்டிருக்கிறீர்கள் பாசமலர். எதுவெல்லாம் மனிதம் “இன்று” எனும் வரிகள் யாவும் சரியான சவுக்கடிகள்.
///ராமலக்ஷ்மி said...
விளாசி விட்டிருக்கிறீர்கள் பாசமலர். எதுவெல்லாம் மனிதம் “இன்று” எனும் வரிகள் யாவும் சரியான சவுக்கடிகள்.///
வழி மொழிகின்றேன்.
நன்றாக சொல்லியிருக்கிங்க..
ரொம்ப ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க:)
சிந்திக்க வைக்கும் ஒவ்வொரு வரியும், நச்சென்றிருக்கிறது!
சிந்திக்க வைக்கும் வரிகள்
வாழ்த்துகள்
நல்லாருக்கு. கொஞ்சம் சுருக்கியிருக்கலாமோ?
விரைவில் கவிதைகளை புத்தகமாய் போடவும்.
மனிதம் - எது என்று கேட்காமல் இன்னும் மண்ணுலகில் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களே -அதுவா ? இல்லை எண்ணத்தை மாற்றி ஏற்றத்தைத் தூற்றி ஏமாற்றத் துடிக்கின்றார்களே - அதுவா ? எது எப்படியோ இன்னும் அன்பு காட்டத் துடிக்கின்ற உள்ளங்கள் அறியாத உயிர்கட்கும் உதவிக்கரம் நீட்டுகின்றனவே ! அங்கே மனிதம் இருந்து கொண்டு தான் இருக்கிறது
நல்ல கருத்து - நல்ல கவிதை - நல்வாழ்த்துகள்
நன்றி ராமலக்ஷ்மி, தமிழ் பிரியன்,கோபி.
காட்டாஆஆஆஆஆஆறு...
வாங்க வாங்க வாங்க.....ரொம்ப நாள் கழிச்சுச் சந்திச்சதுல ரொம்ம்ம்ப சந்தோஷம்..
நன்றி திகழ்மிளிர், திவ்யா..
ரவிஷங்கர்
எனக்கும் அப்படித்தான் தோன்றியது..இது ஒரு மடலாற்குழுமத்தின் கவியரங்கத்துக்காக எழுதப்பட்டது..அந்தக் குழுவில் பதித்த போது கொஞ்சம் சுருக்கிவிட்டேன்..
நன்றி செல்விஷங்கர் மேடம்...
நலமாய் இருக்கிறீர்களா?
ஒரு கவியரங்கத்தின் தலைப்பு மனிதம்..அதற்காக நான் எழுதியதுதான் இது..
Post a Comment