Saturday, May 1, 2010

குறளின் குரல் - 4

அதிகாரம்: 68. வினை செயல் வகை
குறள் எண்: 672

தூங்குக தூங்கிச் செயற்பால் தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.

விளக்கம்:

காலம் தாழ்த்திச் செய்யக்கூடிய செயல்களை க்காலம் தாழ்த்தியே செய்தல் வேண்டும்; காலம் கடத்தாமல் செய்யக்கூடிய செயல்களை விரைவில் செய்ய வேண்டும்.
---------------

அதிகாரம்: 42. கேள்வி
குறள் எண்: 419நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.


நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது.
விளக்கம்:

நுட்பமான கேள்வியறிவில்லாதவர் பணிவான சொற்களைப் பேசுதல் அரிது; கேள்வியறிவு பெறப்பெற பணிவு பெருகும்; செருக்கழியும்.
--------------

அதிகாரம்: 81. பழைமை (பல காலமாய்ப் பழகி வரும் நட்பு)
குறள் எண்: 806
எல்லைக் கணின்றார் துறவார் தொலைவிடத்துத்
தொல்லைக்க ணின்றார் தொடர்பு.


எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.


விளக்கம்: 1

தொன்றுதொட்டு தொடர்ந்து வரும் நட்புதானது தொல்லைகள் தந்தாலும் தொடர்பது அழிக்காது தெய்வ நட்பின் எல்லைக்குள் தொடர்ந்தே நிலைபெறுமே.

விளக்கம்: 2

தொன்றுதொட்டுத் தொல்லைகளின் போது தோளது கொடுத்துத் தொடர்ந்துதவிய நட்புதானது தொலைவான எல்லைக்குப் போனாலும்
தொடர்ந்திடுமே மாறிடாது.

(இவ்விரு விளக்கங்களும் சற்றே மாறுபடுகின்றன. என்றாலும் இரண்டுமே பொருத்தமாகத்தான் தோன்றுகின்றன.)
----------------------------------

அதிகாரம்: 65. சொல்வன்மை
குறள் எண்: 641

நாநல மென்னு நலனுடைமை யந்நலம்
யாநலத் துள்ளதூஉ மன்று.


நா நலம் என்னும் நலன் உடைமை; அந் நலம்
யா நலத்து உள்ளதூஉம் அன்று.

விளக்கம்:

நாவன்மை என்பது நலங்களில் மிகச் சிறந்த நலமாகும்; நாநலம் பிற நலத்தினுள், சிறப்பினுள் அடங்காத நன்னலமாய் விளங்கும் தனித்தன்மை
நிறைந்ததாகும்.
---------------

அதிகாரம்: 34. நிலையாமை
குறள் எண்: 334

நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.
நாள்என ஒன்றுபோல் காட்டி, உயிர், ஈரும்
வாள்--அது உணர்வார்ப் பெறின்.

விளக்கம்:

நேற்று ஒரு நாள் இன்று ஒரு நாள் என்று நாள்தோறும் நாள் கணக்கு எண்ணி வாழ்கிறோம்;

உண்மையில் அது நாள் அல்ல; நாள் என்ற மாயத் தோற்றத்தை வெளியில் காட்டி உள்ளே உயிரைச்சிறிது சிறிதாகஅறுக்கும் வாள்....

இந்த உண்மை உணர்பவர் பொழுதைப் பயனுள்ளதாகக் கழிப்பர்.

1 comment:

கோபிநாத் said...

\\நுட்பமான கேள்வியறிவில்லாதவர் பணிவான சொற்களைப் பேசுதல் அரிது; கேள்வியறிவு பெறப்பெற பணிவு பெருகும்; செருக்கழியும்\\

சூப்பர்...இந்த விளக்கத்தை படிக்கும் போது பொன்னியின் செல்வனில் வரும் முதல் மந்திரி திரு. அநிருத்தப் பிரமராயர் ஞாபகத்துக்கு வரார் ;)