Tuesday, February 17, 2009

கூடை நிறையக் கனவுகள்


நறுக்...நஞ்சு பிஞ்ச செருப்பு வழியாக் காலைக் குத்திருச்சு நெருஞ்சி முள். 'அம்மா' என்று வலியோட தலைச்சுமைக் கூடையைக் கீழே போட்டுப்புட்டுக் கீழ உக்காந்தா சீனியம்மா.காயத்தப் பாக்குறதுக்கு முன்னால செருப்பின் கதியப் பாத்தா..'ஆத்தாடி. நல்ல வேள. அந்து போகல..'

ஒரு சொட்டு ரத்தம் வந்துருந்துச்சு. எச்சி தொட்டு அதத் துடைச்சிட்டு செருப்பை மாட்டிக்கிட்டு அண்ணாந்து சூரியனப் பாத்தா..இன்னும் பொழுது சாயக் கொள்ள நேரமிருக்கு..அதுக்குள்ள கொஞ்சமாவது செத்தை பொறக்கிக் கொண்டுபோனாத்தான் நாளைக்கு அடுப்புப் பத்த வக்கலாம்...இன்னும் கொஞ்சம் உள்ளாற போனாச் சின்னச் சின்னச் சுள்ளி கெடைக்கும். ஆனா அதுக்குள்ள இருட்டிருச்சுன்னா..

ஆத்தி..குத்தவச்ச பொட்டப்புள்ள பொழுது சாஞ்சா தனியா இல்ல கெடக்கும்... ஆணி, வெளக்கமாறெல்லாம் கூப்பிடு தூரத்துல வச்சுருக்கோ என்னாவோ..அது ஒரு பொச கெட்ட புள்ள..நெதம் ஞாவகப்படுத்தணும்..
வாக்கப்பட்டுப் போற எடத்துல என்னமாக் குப்ப கொட்டப்போதோ..இன்னும் சின்னப் புள்ளயாட்டம் நொண்டியடிச்சு வெளயாண்டுக்கிட்டு..ஆச்சு 14 கழுத வயசாச்சு..இன்னும் பொறுப்பு வரலியே இந்தப் பொட்டப் புள்ளக்கு..
மாமியாக்காரி ஆத்தாக்காரி வளப்பு சரியில்லன்னு குத்தம் சொல்லப் போறா..ஆமா...அது கூறு இல்லாத புள்ள... விடலப் பயலுக ஊர் சுத்தி வார நேரம் வேற..உள்ளாற போகவேணாம்..இங்கேயே சுள்ளி கெடக்காமயா போகும். தேடிப் பாப்போம்.

'மாயன் வீட்டுத் தோட்டத்துப் பக்கம் கொஞ்சம் காஞ்ச புல்லு வெட்டாமக்கெடக்கு' ன்னு பக்கத்து வீட்டு ராமாயி சொன்னது நெனவு வந்துச்சு அவளுக்கு. வெரசா எட்டி நடையப் போட்டா மாயன் தோட்டத்துக்கு.

'காவக்கார அழகன் மாமா இருப்பாரோ..அந்தாளு வேற கொணம் கெட்ட ஆளு..அவ கை தன்னால மாரப்பச் சரிசெஞ்சுச்சு. ஒவ்வொருத்தியும் சொன்ன கத ஓரொரு ரகமா இருந்துச்சுஅந்தாளப்பத்தி. வேற எங்கிட்டாவது போலாமா..சூரியன் மங்கிருச்சே..சரி என்னா செஞ்சுருவாரு..பாப்போம் ஒரு கை..மாயன் தோட்டத்துக்கே போவோம்.

நெறய்ய புல்லு வளந்து கெடக்க, அய்யோ புல்லறுத்தாக் கட்டக் கயிறு எடுத்தாறலியே..

'அதாரது புள்ள அங்க?'

அய்யோ மனுசன் வந்துட்டாரா..

'நாந்தான் சீனி, மாமா..புல்லு வெட்டிட்டுப் போலாம்னு வந்தேன்..கயிறு எடுத்தாரல...வச்சுருக்கீகளா..'

'ஆமாம்டி..ஓரொருத்தரா வருவீக..நாந்தான் முடிஞ்சு வச்சுருக்கேன் கயிறு..'

பரவால்ல..மனுசன் இன்னும் தண்ணி அடிக்கல போலருக்கு..நல்ல வேளை..
'இந்தா..' கயித்தத் தூக்கிப் போட்டார்.. 'எலே..மேக்குப் பக்கம் தண்ணி இன்னும் சரியாப் பாச்சல..அங்கிட்டுத் திருப்பி விடுடா..''வேலையாளுங்க சத்தமும் தோட்டத்துப் பக்கம் கேக்க...அப்பாடி..தோட்டத்துக்குத் தண்ணி பாச்சுறாக..கொள்ளப்பேரு இருக்காக..இனிப் பயமில்ல...

விரசாப் புல்லை அறுக்க ஆரம்பித்தாள்...

இந்த முத்துப்பய பள்ளிக்கூடத்துலருந்து வந்துருப்பானா..பசி வேற தாங்கமாட்டான்..நீச்சத்தண்ணி ஊத்திக் கொடுப்பாளோ..பராக்குப் பாப்பாளோ இந்தச் சிறுக்கி மவ..கடன ஒடன வாங்கியாவது இந்தப் பயல ஒரு படிப்புப் படிக்க வெச்சுப்புடணும்..டீச்சரம்மாவும் சொல்லிருக்காக ...நல்லாப் படிக்கிறானாம்..ஏதோ அந்தக் காடுவெட்டிக் கருப்புதான் கண்ணத்தொறந்து ஒரு நல்ல வழி காமிக்கணும். .

'நா வர்றதுக்குள்ள வந்துரும்மா வீட்டுக்கு..அப்பா வேற... போட்டு அடிக்கிறாரு...' முத்துப்பய சொல்லிருக்கான்..இந்த நெனப்பு வர அருவா வெரசா புல்லுல எறங்குச்சு.

பாவி மனுசன்..ஒரு நாளயப் போலயே நெதம் குடிச்சுப்புட்டு வந்து போட்டு அடிக்க வேண்டியது..சம்பாரிச்ச காசுல ஒரு காசு குடுக்கத் துப்பில்ல..
பாதகத்தி..என் ஆத்தாக்காரி..தம்பி களுத்துல என்னக் கட்டிவச்சுட்டுப் போய்ச் சேந்துட்டா..பொளப்பு..இதெல்லாம் ஒரு பொளப்பு..சமஞ்ச பொட்டப்புள்ளக்கு ஒரு தோடு வாங்கலாம்னு காசை முடிஞ்சு வச்சா...போன வாரம் பாத்துப்புட்டுக் காலி பண்ணிட்டான் பாவி.

புல்லறுத்துக் கட்டிச் சீலையைச் சும்மாடு கணக்காச் சுருட்டித் தலைல வச்சுக் கூடை மேல புல்லுக் கட்டு வச்சு நடைய எட்டிப் போட்டா சீனி. நாளையப் பொளுதுக்கு அடுப்புப் பத்தவக்க இது போதுமான்கிற நெனப்பும் கூடவே போச்சுது.

கூடை நிறையக் கனவுகள்

மகளுக்குத் தோடு
மகனுக்குக் கல்வி
மதுவை மறந்த கணவன்
சுள்ளி சுமக்கும்
கூடை நிறைய
அள்ளியெடுத்த கனவுகள்.
மங்கிய சூரியன் உரைத்த நிஜம்
எடுத்த சுள்ளி
அடுப்புக்குப் போதுமா?

(இணணயத்தில் ஒரு கிராமத்துப் பெண் தலையில் கூடை வைத்திருந்த புகைப்படம் கொடுத்து அதைப்பற்றி கவிதைப்போட்டி அறிவித்திருந்தார்கள்..
மிகவும் குறைந்த வரிகள் இருக்க் வேண்டும் என்ற நிபந்தனையோடு...
அதற்காகக் கடந்த வருடம் எழுதிய கவிதை இது (சின்ன மாற்றங்களுடன்) அப்போது ஒரு நண்பர் சிறுகதைக்கான நல்ல கரு என்று விமர்சிக்க, அப்போது சிறுகதை எழுதாத காலம்...இப்போது அதையும்
முயற்சி செய்ததன் விளைவு..)

26 comments:

அன்புடன் அருணா said...

ரொம்ப நல்லாருக்குங்க கவிதையும் கதையும்....படமும் போட்டிருக்கலாமே???
அன்புடன் அருணா

பாச மலர் / Paasa Malar said...

அருணா,

படம் வெளியிட முயற்சி செய்தேன்...முடியவில்லை..

சந்தனமுல்லை said...

//கூடை நிறைய
அள்ளியெடுத்த கனவுகள்.
மங்கிய சூரியன் உரைத்த நிஜம்
எடுத்த சுள்ளி
அடுப்புக்குப் போதுமா?//

ம்ம்..மனதை நெருடும் வரிகள், பாசமலர்!

கோவி.கண்ணன் said...

அருமையான வட்டார வழக்கில் சிறப்பாக இருக்கிறது சிறுகதை !

நிஜமா நல்லவன் said...

அக்கா...கவிதையும் கதையும் ரொம்ப நல்லா இருக்கு....நீங்க திரும்பவும் எழுத ஆரம்பித்ததில் மகிழ்ச்சி!

பாச மலர் / Paasa Malar said...

சந்தனமுல்லை,

ஆம்..மனதை நெருடும் உண்மைகள்..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி..கோவி..

பாச மலர் / Paasa Malar said...

இப்போதான் கணினிப்பக்கம் ஒதுங்க நேரம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது..

கோபிநாத் said...

கதையும் கவிதையும் அருமை ;)

\\நா வர்றதுக்குள்ள வந்துரும்மா வீட்டுக்கு..\\

இந்த வரிகளில் நானும் இருக்கேன் ;))

\\படம் வெளியிட முயற்சி செய்தேன்...முடியவில்லை..\\

ஏன் முடியவில்லை?? சொல்லுங்க கலாய்ச்சிடுவோம் ;)

Unknown said...

நல்லா இருக்கு பாச மலர். வட்டார வழக்கு பேச்சினால் உணர்ச்சி நன்றாக வெளிப்படுகிறது.வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கதை அருமை..கவிதை அதைவிட அருமை..;)

கார்த்திகைப் பாண்டியன் said...

வட்டார வழக்குல ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..

அமுதா said...

/*காயத்தப் பாக்குறதுக்கு முன்னால செருப்பின் கதியப் பாத்தா..'ஆத்தாடி. நல்ல வேள. அந்து போகல..'*/
குத்தும் நிஜம்...

அருமையான வட்டார வழக்கு.

/*கூடை நிறைய
அள்ளியெடுத்த கனவுகள்.
மங்கிய சூரியன் உரைத்த நிஜம்
எடுத்த சுள்ளி
அடுப்புக்குப் போதுமா*/
சுடும் நிஜம்....

அமுதா said...

கதையும் அருமை, கவிதையும் அருமை

பாச மலர் / Paasa Malar said...

அருணா,கோபி,

படம் போட்டாச்சு..
இணையத்திலிருந்து எடுக்க
முடியவில்லை..ஏற்கனவே என் தொகுப்பில் அச்செடுத்து ஒட்டி வைத்த படத்தை ஸ்கேன் செய்து இப்போது போட்டிருக்கிறேன்...

பாச மலர் / Paasa Malar said...

ரவிஷங்கர்,முத்துலட்சுமி,கார்த்திகைப் பாண்டியன்,

உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

பாச மலர் / Paasa Malar said...

ஆமாம் அமுதா..உண்மைகள் சுடத்தான் செய்கின்றன..

கிருத்திகா ஸ்ரீதர் said...

ரொம்ப நெருக்கமா கூடவே வருதே கதையும், கதையாடலு, வாழ்த்துக்கள் மலர் தொடர்ந்து கலக்குங்க

தமிழ் said...

/சுள்ளி சுமக்கும்
கூடை நிறைய
அள்ளியெடுத்த கனவுகள்.
மங்கிய சூரியன் உரைத்த நிஜம்
எடுத்த சுள்ளி
அடுப்புக்குப் போதுமா?/

அருமையான வரிகள்

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கிருத்திகா, திகழ்மிளிர்.

குமரன் (Kumaran) said...

கதையும் கவிதையும் நல்லா இருக்குங்க. இந்தக் கதையை இந்தக் கவிதையை மட்டும் படிச்சிருந்தா கண்டுபிடிச்சிருக்க மாட்டேன். கதையைச் சொல்லிட்டு கவிதையைச் சொன்னதால புரியுது.

பாச மலர் / Paasa Malar said...

வாங்க குமரன்..நன்றி..

Divya said...

இது எந்த ஊர் தமிழ் பாசமலர் ??

உணர்ச்சிகரமான கதை, மிகவும் ரசித்தேன், வாழ்த்துக்கள் பாசமலர்:))

Divya said...

நீண்ட நாட்களுக்கு பின் .....இன்றுதான் உங்கள் பதிவுகள் அனைத்தையும் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது, ரொம்ப நல்லா எழுதிரீங்க நீங்க:))

பாச மலர் / Paasa Malar said...

வாங்க திவ்யா..

மதுரை கிராமப்புறத் தமிழ்தான் இது...

lallu said...

Malar, i really enjoyed the story. You have ended with a positive note which really gives some sort of an assurance to the reader.