Monday, July 20, 2009

நான் அறிந்த சிலம்பு - பதிகம் (பகுதி 2)

பகுதி - 1

வியப்பிலாழ்ந்த வேந்தனவனும்
விழிகளைச் சுழற்றி
விடை வினவி நிற்க..

ஆங்கேயிருந்த
தமிழ்ப்புலவன் சாத்தனும்,
இவ்வரலாறு
நன்கறிவேன் என்றுரைத்தே
நவிலத் தொடங்கினன்....

ஆத்தி மலர் ஆரம் அணி
சோழன்குடை வரம்பில்
பெரும்புகழ் வாய்ந்த
புகார் நகரில் வாழ்ந்தனன்
பெருவணிகன் கோவலன்.

நாடகக் கணிகை
நாட்டிய மங்கை மாதவியிடம்
நாட்டம் கொண்டு மயங்கியே
கொட்டமடித்துக் களித்து
ஈட்டிய செல்வமனைத்தும்
தோற்றுத் தொலைத்தனன்.

தன் மனைவி கண்ணகி
காலணிச் சிலம்பு கொண்டு
தோற்ற பொருளதனை
வென்றெடுக்கும் முகமாய்...

புலவர் பலரின்
பாடற்சிறப்பில்
ஓங்கி மிளிரும்,
பாண்டிய மன்னனின்
புகழ் பாடி நிற்கும்,
மாடமாளிகைகள்
மலையென உயர்ந்து
மலைக்க வைக்கும்
சீர்பெரும் மாமதுரை
சென்று சேர்ந்தனன்
வணிகனவன்
கண்ணகியவளுடன்.

காற்சிலம்புகளில் ஒன்றைக்
கையில் ஏந்திக்
கடைவீதி சென்றவன்
பொற்கொல்லன் ஒருவனிடம்
விலைபேசி நின்றனன்.

கண்ணகி சிலம்பின்
கண்கவர் செதுக்கல்
முன்னர் தான் களவாடிய
அரசி கோப்பெருந்தேவியின்
சிலம்பதனை ஒத்திருக்கச்
சடுதியில் தீட்டினன்
சதியொன்றை அக்கொல்லன்.

கோப்பெருந்தேவியன்றி
வேறெவர்க்கும் பொருத்தமில்லை
இக்காற்சிலம்பு
பொறுத்திடுக நல்லவிலை கிட்டுமென்று
காத்திருக்கச் சொல்லிவிட்டுப்
பாண்டியன் தம் அரண்மனை ஏகினன்.

முன்செய்த வினைப்பயன்
பின் தொடர்ந்து எதிர்தேடும்
காலமதனுடன்
கள்வன் பொற்கொல்லன் சதியும்
கைகோர்த்துச் சதிராட..

சினமது கண்மறைக்க
ஆராயும் மனமது காணாமல் போக..
கொல்லன் கதைகேட்ட
கொற்றவன் பகர்ந்தனன்
ஓர் அவசரத் தீர்ப்பு.

அம்மாபெரும் கள்வனைக் கொன்று
கோப்பெருந்தேவி சிலம்பு
மீட்டு வருகவென்று.

செங்கோலின் ஆணை
செவ்வனே நிறைவேறக்
கொலைக்களம் கண்டனன்
வீண்பழி சுமந்த கோவலன்.

தன் காதல் கணவனைக்
காலன் கவர்ந்து சென்றது தாளாமல்
அங்கும் இங்கும் அலைந்து
நிலையின்றித் தவித்தனள்
கண்ணகி.

தம்
நீண்ட கண்களில்
நீரை உகுத்தனள்.

முத்தாரம் தவழ்
முலையொன்றைத்
திருகியெறிந்து
கூடல் மதுரை
கூக்குரலிட
தீக்கிரையாக்கினள்.

பத்தினி சாபத்தால்
பாண்டியன் கேடுற..
மாபெரும் பத்தினி தெய்வம்
இவளென்று
பலரும் புகழும்
பெருமை பெற்றனள்.

இங்ஙனம்
கண்ணகி கோவலன்
வரலாறு
ரத்தினச் சுருக்கமாய்ச்
செப்பினர் சாத்தனார்.


சிலம்பின் வரிகள்.. இங்கே..

9 comments:

கோபிநாத் said...

அருமை...

படிக்க மிக எளிமையாகவும்..கற்பனையில் காட்சியை கொண்டு வர மிக இயல்பான இருக்கிறது உங்கள் எழுத்து நடையும், வரிகளும். ;)

தமிழ் said...

அற்புதம்
இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ற
அருமருந்து

ராமலக்ஷ்மி said...

அருமைங்க. கோபிநாத் சொல்லியிருப்பதை வழிமொழிகிறேன்!

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கோபி, திகழ்மிளிர், ராமலக்ஷ்மி..

RATHNESH said...

தாமதத்துக்கு மன்னிக்கவும்.

சிலம்பு சிணுங்க ஆரம்பித்து விட்டது. அர்த்தம் தெரியாத ஒரு வார்த்தை கூட இல்லை. இவ்வளவு எளிமையாகவும் இலக்கியம் சொல்ல முடிகிறது!

//விடை வினவி //

தமிழில் முதன்முறையாகப் படிக்கிறேன். அழகு.

//பெருவரலாறு, பெரும்புகழ், பெருவணிகன், பெருவிலை, பெருங்கள்வன், மாபெரும் // ஒரே பகுதியில் இத்தனை . . .

கொஞ்சம் கவனியுங்கள். அஃப்கோர்ஸ், கோப்'பெரு'ந்தேவியில் தவிர்க்க இயலாதுதான்.

குறை சொல்லும் நோக்கமில்லை. அக்கறை மட்டுமே.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ரத்னேஷ்..இந்தப் 'பெரு' விஷயம் படித்துப் பார்க்கும்போது எனக்குத் தோன்றவேயில்லை..அக்கறைக்கு நன்றி...குறையே சொன்னாலும் வரவேற்கிறேன்..என்னை வளர்த்துக் கொள்ள உதவுமே..

வல்லிசிம்ஹன் said...

அருமையாகத் தொடர்கிறீர்கள் மலர்.

நல்ல தமிழ் நடை.கண்ணகியின் கதையைச் சாத்தனார் விளக்கும் விதம் பாங்காக இருக்கிறது.
இரு வரிகளில் கண்ணகியின் கோபம்,சினம் தெறிக்கிறது.

ஊருக்கு வரும்போது (ஃபோனில்) அழைக்க மறக்கவேண்டாம்.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி வல்லிமா..அவசியம் தொலைபேசுகிறேன்..

குமரன் (Kumaran) said...

இன்றைக்கு நாம் மதுரையில் ஏதேனும் நகையை விலை பேச வேண்டுமென்றால் பொற்கொல்லர்களிடம் செல்வதில்லை; தன வணிகர்களிடம் தான் செல்கிறோம். ஒருவேளை கோவலன் கதி நமக்கும் கிடைத்துவிடும் என்ற பயமோ என்னவோ? :-)

பெரும்காவியத்தைப் பற்றி பேசும் போது எத்தனை பெரும் வந்தால் தான் என்ன? அதுவும் அழகு தான். :-)

இரத்னேஷ் சொன்ன பின்னர் தான் விடை வினவியதைப் பார்த்தேன்