Thursday, February 7, 2013

நான் அறிந்த சிலம்பு - 34

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
 
சிலம்பின் வரிகள் இங்கே: 106 -117
 
மண்டபத்தில் பலி இடம் - பகுதி 2

பொன்மணி வேலைகளில் சிறந்திருந்தாலும்
பொதுவாகப் பொன்வேலை நுண்ணியமாகச் செய்திடும்
சிறப்புமிக்க கம்மியரால் செய்யப்பட்டன அல்ல
அவ்வழகுப் பரிசில்கள்.

வச்சிரம், மகதம், அவந்தி
இந்நாட்டு அரசர்கள்
முன்னொரு காலத்தில் செய்திட்ட
உதவியதன் கைம்மாற்றாய்
'மயன்' எனும் தெய்வதச்சன்
தாம் செய்து அவ்வரசர்க்கு வழங்கியவை.

இங்ஙனம்
வெவ்வேறு நாடுகளில் வென்ற
திறைப்பொருட்களை ஒன்றாய்ச் சேர்த்து
உயர்ந்தோர் போற்றும் வண்ணம்
புகார்நகர் தன்னில் அமைக்கப்பட்ட
அழகிய மணடபம் தானது
'சித்திர மண்டபம்' எனும் பெயர் பெற்றது.
 
ஐவகை மன்றங்களில் அரும்பலி இடுதல் - பகுதி 1

பிற பகுதிகளிலிருந்து
புகார் நகருக்கு வந்த புதிய மனிதர்கள்
தம் பொருட்கள் பொதிந்த மூட்டைகளில்
பெயர், அளவு, எடை இவற்றைக் குறித்த
குறியீட்டு எழுத்தினை இலச்சினையிட்டு
ஏற்றுமதி இறக்குமதிப் பண்டங்களைக்
குவியலாய்க் குவித்து வைத்திருந்தனர்
பண்டகசாலைகள் தம்மில்.
காவல் புரியவென்று எவருமில்லை
அப்பண்டகசாலைகளின் வாசல்களில்.
வலுவான தாழ்ப்பாள்களும்
நீக்கப்பெற்றிருந்தன கதவுகளில்.
பொருளுக்கு உரிமையானவரும் கூட
உடனில்லை காவலில்.

 
இருப்பினும் அவற்றைக் களவாட
எவரேனும் வரின் அவர்தம் தண்டனை என்ன?
களவாட நினைப்பவர் கழுத்து முறியுமளவு
கனமான பொதிகளை அவர் தலையில் ஏற்றி
ஊர் வலம் வரச் செய்து,
அப்பண்டத்தை அவரிடம் தராமல்
திரும்பப் பெற்றுக் கொள்வர்.

மனதாலே களவை நினைத்தாலே போதும்
நினைப்போரை தண்டனை
நடுநடுங்கச் செய்யும் அப்பண்டகசாலை
வெள்ளிமன்றம் என்றேதான் அழைக்கப்பட்டது.
 
வல்லமை 20.08.12 இதழில் வெளிவந்தது.

Monday, January 28, 2013

நான் அறிந்த சிலம்பு - 33

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
 
சிலம்பின் வரிகள் இங்கே:  89 - 90
 


சிலம்பின் வரிகள் இங்கே:  91 - 105

 
மண்டபத்தில் பலி இடம் - பகுதி 1

தமிழகத்து மருங்கில்
சேரரும் பாண்டியரும்
தம் ஆணைக்கு அடங்கிய நிலையில்,
மேற்கும் தெற்குமாகிய இருதிசைகளிலும்
தம்மை எதிர்த்தே போர்புரியும் மன்னர்
எவருமில்லாத காரணத்தால்
போர்த்தினவும் செருக்கும் நிறைந்தவன்
கரிகால் சோழன்.

அவன் தானும்
புண்ணிய திசையெனப் பெரியவர் போற்றிடும்
வடக்கு திசையது சென்று
அங்கேயாவது பகை பெற வேண்டி
போர்புரிய ஆசைகொண்டே
வாளுடன் குடையும் முரசும்
முன்னே சென்றிட
'எம் வலிமிக்க தோள்கள்
வடதிசையிலாவது பகைவரைப் பெறுக"
என்று தெய்வத்திடம் வழிபட்டேதான்
ஒரு நன்னாள் அதனில் புறப்பட்டனன்.


அங்கே நின்றிட்ட இமயமலை
அவனைத் தடுத்தேதான் நின்றிட்டது.
"குறைந்திடாத என் ஊக்கமதனுக்குத்
தடை விதித்திட்டதே இம்மலை"
எனச் சினந்தனன் கரிகாலன்.


இமையாத கண்கொண்ட தேவர் வாழும்
அவ்விமயமதன் உச்சி தன்னில்
பொறித்து வைத்தனன்
தம் புலிச்சின்னம் அதை.


இமயத்துக்கு அப்பாலும் சென்றிட எண்ணியவன்
எண்ணமதைக் கைவிட்டே
சோழநாடு திரும்பினன்.

(கரிகாலன் சாத்தன் எனும் தெய்வம் தனக்குத் தந்த செண்டு என்னும் படைக்கலத்தால் இமயத்தை அடித்துத் திரித்து அதனையே புலி போலப் பொருத்தினான் என்றொரு வழக்குண்டு.)

திரும்பிய வழியில் திறைகள் பலதந்து
அயல்மன்னர் பகைமன்னர் நட்புமன்னர்
பலரும் மகிழ்ந்தனர்.

கடலை அரணாக உடைய
பகையும் நட்பும் இல்லா அயல்மன்னன்
வச்சிரநாட்டு வேந்தன் தந்தது
முத்துப்பந்தல்;
வாட்போர் வல்லவன்
மகதநாட்டு மன்னன்
போர் புரிந்து தோற்றுத் தந்தது
பட்டி மண்டபம்.
மனம் உவந்த நல் நண்பனாகிய
அவந்தி நாட்டு வேந்தன் தந்தது
அழகிய மிகவும் உயர்ந்த
வேலைப்பாடுகளுடனான
தோரண வாயில்.

பொன்னாலும் மணியாலும்
புனையப்பட்டுப் பொலிந்தன
இப்பரிசில்கள் மூன்றும்.
 
 
வல்லமை 13.08.12 இதழில் வெளிவந்தது.

Wednesday, January 2, 2013

நான் அறிந்த சிலம்பு - 32

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
 
சிலம்பின் வரிகள் இங்கே: 76 - 88
 
பூதத்திற்கு வீரர்கள் உயிர்ப்பலி கொடுத்தல்

மருவூர்ப்பாக்கத்தின் வீரமிகு மறவரும்
பட்டினப்பாக்கத்தின் படைக்கல வீரரும்
பெரிய பலிபீடமதன் முன்சென்று
"வீரமிக்க எம் மன்னர் தமக்கு
உற்ற துன்பம் ஒழித்திடுக"
என் வேண்டியே நின்றனர்.

"பூதத்துக்குத் தம்மைப்
பலிதானம் புரிந்தவர்
வலிமையின் எல்லையாக விளங்குவர்"
எனச் சூளுரைத்தனர்.

கல்வீசும் கவண்வீரர் சிலரும்
கருந்தோல் கவசம் அணிந்து
வேல்தாங்கிய வீரர் பலரும்
குழுமி நின்றனர் ஆங்கே.
ஆரவாரத்துடன் போர்க்களமதில்
வெற்றிகள் பல கண்ட அவர்
தத்தம் தோள்களைத் தட்டியே
ஆர்ப்பரித்து நின்றனர்.

கண்டவர் அஞ்சும் வண்ணம்
நுனி சிவந்த
சுடுகொள்ளி நிகர்த்த பார்வையுடன்,
"வெற்றி வேந்தன்
வெற்றியென்றும் கொள்க"
என்றே முழங்கித்
தமது கருந்தலையைத்
தம் கைகளாலேயே
நன்மை பொருந்த
வெட்டித்தான் வைத்தனர்
பலிபீடம்தன்னில்.

உயிர்ப்பலி கொண்ட அவ்வேளை
இடிமுழக்கமென ஒலித்தது
நாளங்காடிப் பூதத்தின் குரலது
நாற்றிசை மருங்கிலும்.

பலிபீடத்தில் வெட்டி வைக்கப்பட்ட
தலையற்ற உடல்கள்
வாயினால் உரைக்க இயலாமையால்
தம் தோளில் பூண்டிருந்த
மயிர்கள் நீக்கப்படாத முரசதை அறைந்து
"பலி தந்திட்டோம்; ஏற்றிடுக"
என்றே முழங்கிய ஆரவார ஒலிகளுடன்
முரசின் ஒலியும் சேர்ந்தே ஒலித்தது.
 

வல்லமை 06.08.12 இதழில் வெளிவந்தது.

Sunday, December 16, 2012

பாடப்படாத பாடல்

 
மூலம்: Song Unsung, Gitanjali, Selected Poems, Tagore

நான் பாடவந்த ஒரு பாடல்
பாடப்படாமலேயே இருக்கிறது
இன்று வரையில்....

என்னுடையை
இசைக்கருவியின் தந்திகளை
முடுக்கவுமாய் தளர்த்தவுமாய்
என் நாட்களைக் கழிக்கின்றேன்.

இன்னும் மெய்மையான அந்த நேரம்
வந்து வாய்த்தபாடில்லை;
வார்த்தைகளும் சரிவர
அமைக்கப்படவில்லை.

காற்று மட்டும் பெருமூச்சுடன்
கடந்து போகின்றது;
இன்னும் மொட்டுகள் அவிழ்ந்து திறக்கவில்லை.

நான் அவனுடைய முகத்தைப் பார்க்கவில்லை
இன்னும்..
அவன் குரலையும் கூடக் கேட்கவில்லை.

என் வீட்டின் முன் செல்லும் சாலையில்
மென்மையான அவன் காலடி அசைவுகளின்
ஒலி மட்டுமே கேட்டிருக்கிறேன்.

இந்த நீண்ட நாள் முழுவதும்
அவனுக்கான இருக்கையைத்
தரையில் விரிப்பதிலேயே கழிந்துபோய்விட்டது.

ஆனால் ஒளிவிளக்கு இன்னமும் ஏற்றப்படவில்லை;
என்னால் வீட்டுக்குள் வரும்படி
அவனை வரவேற்கவும் இயலவில்லை.

அவனைச் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்
நான் வாழ்கின்றேன்;
ஆனால் அந்தச் சந்திப்பு இதுவரையில்
நிகழவே இல்லை.
 

அதீதம் 14 செப்டம்பர் 2012 இதழில் வெளிவந்தது.

Monday, December 10, 2012

நான் அறிந்த சிலம்பு - 31

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

நாள் அங்காடி பூதத்தை மறக்குல மகளிர் வழிபடுதல்

சிலம்பின் வரிகள் இங்கே: 60-75

இருபெரு வேந்தர்
போர் செய்யும் முனைப்பில்
வந்து தங்கும் பாசறைகளுக்கு
இடைப்பட்ட நிலத்தில் இருக்கும்
இருவர்க்கும் பொதுவாக அமைந்த
போர்க்களம் அது போல
மருவூர்ப்பாக்கம் பட்டினப்பாக்கம்
இடையேயுள்ள நிலப்பரப்பில்தான் இருந்ததுவே
நாள் அங்காடி எனும் கடைத்தெரு.

நெருக்கமாய் நெருங்கி வளர்ந்திருந்த
சோலையதன் மரங்களின் அடிகளைத்
தூணாகக் கொண்டேதான்
அமைக்கப்பட்டிருந்தன கடைகள்.


அக்கடைகளில்தாம் பொருட்களை
விலை பேசி விற்போர் குரலும்
விலை கொடுத்து வாங்குவோர் குரலும்
ஒலித்துக்கொண்டேயிருந்தது
தொய்வின்றித் தொடர்ச்சியாக.
 
முன்னொரு முறை
முசுகுந்தன் என்ற சோழவேந்தன் தானும்
அசுரவதம் செய்ய உதவினன் இந்திரனுக்கு.
அச்செயல்தனைப் பாராட்டும் முகமாய்
புகார் நகரையும் அரசனையும்
காப்பதற்கென்றே வலிமைமிக்க
பூதமொன்றைப் பரிசளித்தனன்
இந்திரன் முசுகுந்த மன்னனுக்கு.

அப்பூதம் தானும்
காவிரிப்பூம்பட்டினத்தின்
நாளங்காடி மருங்கில்
தங்கியே நின்று தக்க காவல் புரிந்தது.

இந்திர விழாவின் தொடக்கத்தில்
அப்பூததுக்குப் பலிகள் இட்டு
வணங்கி வருவது மரபு.
அம்மரபின் அடியொற்றியே
நிகழ்ந்தன பூசைகள் நாளங்காடிதன்னில்.

சித்திரை மாதத்தில்
சித்திரை நட்சத்திரத்தில்
நிறைந்த முழுமதி நாளன்று
நாளங்காடி மருங்கே
திரண்டு வந்தனர் மறக்குல மகளிர்.

"வெற்றிவேல் ஏந்திய முசுகுந்த மன்னனுக்கு
உற்ற துயர் ஒழித்திடுவாயாக"
என்றேதான் வேண்டி இந்திரன் ஆணைப்படி
புகார் நகரக் காவல்பூதத்தின்
கோயில் வாசல் பலிபீடத்தில்
அவரை துவரை புழுங்கிய பண்டங்கள்
எள்ளுருண்டைய் கறிச்சோறு
இவற்றுடன்
பூக்கள் நறும்புகை பொங்கல்
படைத்தேதான் வழிபட்டனர்.

பின் தெய்வம் ஏறி
துணங்கைக்கூத்தராகி, குரவைக்கூத்தராகி
ஆடி மகிழ்ந்து
"எம்பெருநில மன்னவன் அவன்
காத்தருளும் இருநிலமும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
மழையும் வளமும் சுரந்திடுக"
என வாழ்த்துப் பாடியே
அழகிய கோலம்பூண்ட மறக்குல மகளிர்
வல்லமையுடன் ஆரவார ஓசையுடன்
முழங்கியே விழாவது கொண்டாடினர்.
 

வல்லமை 30.07.12 இதழில் வெளிவந்தது.

Tuesday, November 27, 2012

நான் அறிந்த சிலம்பு - 30

புகார்க்காண்டம் - 05. இந்திர விழவு ஊர் எடுத்த காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 40 - 58
 

பட்டினப்பாக்கம்

பட்டினப்பாக்கத்தின்
காட்சிகள் இவை.
மிகவும் பெரிய இராஜ வீதிகள்
கொடிகளையுடைய தேர் ஓடும் வீதிகள்
கடைத்தெரு
பெருங்குடிப் பிறந்த
வாணிகர் வாழ் மாடமாளிகைகள் இருந்தன.

மறை ஓதும் அந்தணர்
அனைவராலும் விரும்பப்படும் உழவர்
ஆயுள் காக்கும் வேத மருத்துவர்
காலம் கணிக்கும் சோதிடர்

இங்ஙனம் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த
பல்வகைப்பட்டவரும்
தனித்தனியே வாழ் இடங்கள் இருந்தன.

முத்துக் கோர்ப்போர்
சங்கை அறுத்து வளையல்கள் செய்வோர்
இவர்கள் வாழ்கின்ற அகன்ற பெருவீதி

அரசனை வணங்கும் சூதர்
புகழ்ந்து பேசும் மாகதர்
வைதாளி ஆட்டமாடும் வேதிகர்
காலம் கணிக்கும் நாழிகைக் கணக்கர்
அழகாய்ப் புனைந்து ஆடி
அனைவரையும் மகிழ்விக்கும் சாந்திக் கூத்தர்


காமக் கிழத்தியராம் பரத்தையர்
கோலத்தார் கூத்தார்
அன்று அன்றே தம் பரிசுகள் பெறும் விலைமகளிர்
ஏவல் தொழில் செய்து வாழ்பவர்
ஆகியோர் வாழும் இடங்கள் இருந்தன.

தொழிற்பயிற்சி சிறப்புறப்பெற்ற
குயிலுவக் கருவியாளர்
படைக்கும் விழவுக்கும்
பல்வகை நிகழ்ச்சிக்கும் வாசிக்கும்
வாத்தியக் கலைஞர்
நகைச்சுவையுடன் பேசும் விதூடகர்
ஆகியோர் வாழும் இடங்கள் இருந்தன.

விரைந்து செல்லும்படி
குதிரைகளைச் செலுத்தும்
குதிரைவீரர்கள்
யானைப்பாகர்
நெடிய தேரைச் செலுத்தும்
தேர்ப்பாகர்
அஞ்சுதல் என்பதறியாத
வீரத்தில் சிறந்த
காலாட்படைத் தலைவர்

இவர்கள் அனைவரும்
அரசனவன் கோட்டையைச்
சூழ்ந்து இருக்கும்படி அமைந்த
வாழ் இடங்கள் இருந்தன.

இன்னும் இன்னும்
பலப்பல பெருமைகள் கொண்டு
சிறப்பு வாய்ந்த சான்றோரால்
புலவர் பெருமக்களால்
வாழ்த்திப் பாடற்குரிய
சிற்ப்புகளும் பெருமைகளும்
பெற்று விளங்கியது பட்டினப்பாக்கம்.
 

வல்லமை 23.07.12 இதழில் வெளிவந்தது.

Saturday, October 13, 2012

நான் அறிந்த சிலம்பு - 29

புகார்க்காண்டம் – 05 இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 21- 30
சிலம்பின் வரிகள் இங்கே: 31 - 39

மருவூர்ப்பாக்கம் – பகுதி – 2

இது இது இன்ன இன்னது
என்று பிரித்தறியச் சுலபமாக,
குவித்து வைக்கப்பட்ட பொருட்களுடன்
கூலவீதிகளில்
எண்வகைத் தானியங்கள்
குவிந்தேதான் இருந்தன.

பிட்டு வணிகர்
அப்ப வணிகர்
கள் வணிகராம் வலைச்சியர்
மீன் வணிகராம் பரதவர்
வெள்ளை உப்பு வணிகராம்
உமணர் உமட்டியர்

கயிறு திரித்து விற்கும் பாசவர்
வெற்றிலை வணிகர்
வாசனைப் பொருள் வணிகர்
பல வகை மாமிச வணிகர்
எண்ணெய் வணிகர்
நிறைந்து காணப்படும்
ஊன்மிக்க வாழிடங்கள் இருந்தன.

வெண்கலத்தில் பாத்திரம் செய்யும் கன்னார்
செப்பு வேலை செய்யும் கொட்டிகள்
மரவேலை செய்யும் தச்சர்
வலிமை மிக்க கைகளுடைய கொல்லர்
ஓவிய வினைஞர்
மண்பாண்டம் செய்யும் குயவர்
பொன் வேலை செய்யும் கொல்லர்
இரத்தின வேலை செய்பவர்

துணிவேலை செய்யும் தையற்காரர்
தோல்பொருள் செய்யும் செம்மார்
துணிகள் கொண்டு
படம் முதலியன செய்வோர்
நெட்டிக் கோரைகள் கொண்டு
விலங்கு பறவை பூங்கொத்து முதலிய
கலைப்பொருள் செய்வோர்
என்று பலவாகக்
குற்றமற்ற கைத்தொழில்
செய்திடுவோர் பலரும்
வாழும் இடங்கள் இருந்தன.

குழல் கொண்டு யாழ் கொண்டு
குரல் முதலான ஏழிசைகளைக்
குற்றமற இசைத்து
அவ்விசைவழி தோன்றும்
திறங்களையும்
திறமையுடன் பாடவல்ல
பெரும்பாணர் வாழிடங்கள் இருந்தன.

சிறு சிறு கைத்தொழில் செய்வார்
பிறர் கட்டளைக்குப் பணிந்து
குற்றேவல் புரிந்து நிற்பவர்
வாழும் இடங்களும் இருந்தன.

கடலதன் பரப்பில்
யவனர் இருக்கை தொடங்கி
நகரதன் வீதிகளில்
பல்பொருள் அங்காடிகள் கொண்டு
பலதரப்பட்ட குடிமக்கள்
வாழும் இடங்களைக் கொண்டு
குற்றமறச் செழித்து நின்றது
மருவூர்ப்பாக்கம்.

வல்லமை 16.07.12 இதழில் வெளிவந்தது.