Tuesday, January 31, 2012

உயிரின் ஏழாவது சுவை


உயிரின் எந்த உணர்வும்
உணர்வின் எந்தக் கோணமும்
கோணத்தின் எந்தக் கூர்ப்பும்
கூர்ப்பின் எந்தக் கீறலும்
கீறலின் எந்த வலியும்
வலியின் எந்தத் துளியும்
துளியின்   எந்தச் சுகந்தமும்
சுகந்தத்தின் எந்த நுகர்வும்
நுகர்வின் எந்தப் பகிர்வும்
பகிர்வின்  எந்தச் சுவையும்.....

அந்தாதியாய்
என்றென்றும் தொடரும்
உயிரின் ஏழாவது சுவை
காதல்...

குறளின் குரல் - 41


பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 64. அமைச்சு
குறள் எண்: 632

வன்கண் குடிகாத்தல் கற்றறி யாள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு.

வன்கண் குடிகாத்தல் கற்று அறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.

விளக்கம்:

அஞ்சாமல் துணிவுடன் செயல்படுதல், குடிமக்களைப் பேணிக்காத்தல், பலவகை அறநூல்களையும் கற்று அறிந்த அறிவு, செய்ய வேண்டிய செயல்கள் எவை என்ற தெளிவு, அச்செயலாற்றத்துக்கான முயற்சி - இவை ஐந்தும் மிகச் சிறப்புடனும் மாட்சிமையுடனும் பெற்று விளங்குவதே அமைச்சு.
 
வன்கண் - வீரத்தன்மை, துணிவு, பகைமை, பொறாமை
---------------------
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 09. விருந்தோம்பல்
குறள் எண்: 82


விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

விருந்து புறத்ததாத் தான் உண்டல், சாவா
மருந்து எனினும் வேண்டற்பாற்று அன்று.


விளக்கம்:


வீட்டுக்கு விருந்தினராக வந்தவர் வெளியே இருக்க, சாவைத் தடுக்கும் மருந்தாகிய அமிழ்தமே என்றாலும், அவ்விருந்தினரை விட்டுவிட்டுத் தாம் மட்டும் தனித்து உண்பது விரும்பத்தக்கது அன்று.
-----------------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 40. கல்வி
குறள் எண்: 399



தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந்க் தார்.



தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு
காமுறுவர் கற்று அறிந்தார்.



விளக்கம்:


தாம் கற்ற கல்வியால் இன்பம் காணப்பெற்றவர், தம்மைப் போலவே கல்வியால் இவ்வுலகமும் இன்புறுவது கண்டு, மகிழ்வுற்று, ஊக்கமடைந்து, மேலும் மேலும் கல்வி மீது காதல் கொண்டு இன்னும் அதிகமாய்க் கற்றிட விரும்புவார்கள்.

--------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 17. அழுக்காறாமை
குறள் எண்: 167



அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவ
டவ்வையைக் காட்டி விடும்.



அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.



விளக்கம்:

செல்வத்தைத் திருமகள் இலக்குமி என்றும், வறுமையை அவள் அக்காள் மூதேவி என்றும் அடையாளம் காட்டி வருவது வழக்கமாகும். மனம் அறவழியில் நில்லாது கோணிப் போய்ப் பொறாமைப்படும் குணம் உள்ளவனிடம், தன் தமக்கையான மூதேவியைக் காட்டிவிட்டுத் தான் தங்காமல் திருமகள் இலக்குமி நீங்கி விடுவாள்.


அவ்வியம் - மனக்கோணல், அழுக்காறு, பொறாமை, வஞ்சகம்
தவ்வை - தமக்கை, மூதேவி, தாய்

-----------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 123. பொழுதுகண்டிரங்கல்
குறள் எண்: 1224



காதல ரில்வழி மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும்.



காதலர் இல் வழி மாலை, கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.



விளக்கம்:


காதல் துணைவர் அருகில் இல்லாத போது வருகின்ற இம்மாலைப்பொழுது, கொலைக்களத்தில் உயிர் மாய்க்க வரும் பகைவர் போல எனைக் கொல்ல வருகின்றது.
ஏதிலார் - பகைவர், அயலார், பரத்தையர்



-------------------
பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 85. புல்லறிவாண்மை
குறள் எண்: 844



வெண்மை யெனப்படுவ தியாதெனி நொண்மை
யுடையம்யா மென்னுஞ் செருக்கு.



வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை
உடையம் யாம் எனும் செருக்கு.



விளக்கம்:


அறிவற்ற தன்மை என்பது எது என்றால், தம்மைத்தாமே சிறந்த அறிவுடையவர் என்று எண்ணி மதித்துக் கொண்டு மனச்செருக்கு அடைவதாகும்.


வெண்மை - அறிவின்மை, ஒளி, வெண்ணிறம், சூதுவாது இல்லாமை, தூய்மை, இளமை
ஒண்மை - நல்லறிவு, ஒழுங்கு, விளக்கம், இயற்கையழகு, நன்மை, மிகுதி




குறளின் குரல் - 40


பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 11. செய்ந்நன்றியறிதல்
குறள் எண்: 107

எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.

எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம் கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.

விளக்கம்:

தம் கடுந்துன்பத்தைப் போக்கியவரின் நட்பை, ஏழு பிறப்பிற்கும் மறவாது நல்லோர் நினைத்துக் கொள்வர். துயர் துடைத்தவரின் நட்பினை நன்றியுடன் நினைத்து மகிழ்வதற்குக் கால எல்லையே கிடையாது.

எழுமை -  ஏழு வகைப் பிறப்பு, ஏழு முறை கொள்ளும் பிறப்பு, ஏழ் வகை, உயர்ச்சி
விழுமம் - துன்பம், தூய்மை, சிறப்பு
-- --------------------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 96. குடிமை
குறள் எண்: 951



இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச்
செப்பமு நாணு மொருங்கு.



இற் பிறந்தார்கண் அல்லது இல்லை-இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.



விளக்கம்:


நற்குடியில் பிறந்தவர்களுக்கு மட்டுமே எண்ணம், சொல், செயல் - இவற்றில் நடுநிலைமையும், நாணமும் ஒருங்கே இயல்பாக நிறைந்து விளங்கும். மற்றவர்களிடம் இக்குணநலன்கள் ஒன்றுசேர அமைவதில்லை. 


செப்பம் - நடுநிலை, சீர்திருத்தம், பாதுகாப்பு, செவ்விய வழி, தெரு, நெஞ்சு, மனநிறைவு, ஆயத்தம்
நாணம் - மானம், அறிவு, வெட்கம், கூச்சம்

----------------------------




பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 112. நலம்புனைந்துரைத்தல்
குறள் எண்: 1113



முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.


முறி மேனி, முத்தம் முறுவல், வெறி நாற்றம்,
வேல் உண்கண்; வேய்த்தோளவட்கு.
விளக்கம்:

மூங்கில் போன்ற தோள்கள் உடைய என் காதலி, தளிர் மேனி, முத்துச் சிரிப்பு, மயக்கமூட்டும் நறுமணம், மைதீட்டிய வேல் விழிகள்,  - இவை அனைத்தும் அமையப்பெற்றவள்.

முறி - தளிர், பாதி, பத்திரம், துண்டு, துணி, இலை, சேர், அறை, மூலையிடம், சூலைநோய் வகை, வெங்கலம்
முத்தம் - முத்து, உதடு, உதடுகளால் தொடுதல், பிள்ளைத்தமிழ்ப்பருவங்களுள் ஒன்று, மருத நிலம், செடிவகை, முற்றம், கோரைக்கிழங்கு
வெறி - மயக்கம், குடி மயக்கம், மதம், சினம், கலக்கம், வெறியாட்டு, கள், வட்டம், மணம், பேய், மூர்க்கத்தனம், நோய், ஆடு, பேதைமை,     அச்சம், தெய்வம்
உண்கண் - மைதீட்டிய கண்
நாற்றம் - மணம், கள், தோற்றம், தொடர்பு
வேய் - மூங்கில், புனர்பூச நாள், மூடுதல் செயல், ஒற்றன்
---------------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 34. நிலையாமை
குறள் எண்: 332



கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கு மதுவிளிந் தற்று.



கூத்தாட்டு அவைக்குழாத்தற்றே, பெருஞ்செல்வம்;
போக்கும், அது விளிந்தற்று.



விளக்கம்:


ஒருவரிடத்துப் பெரிய அளவில் செல்வம் வந்து சேர்வது என்பது, கூத்து அரங்கேறுகின்ற அவையில் கூட்டம் சிறிது சிறிதாக வந்து ஒன்று கூடுவது போன்றதாகும்.


அச்செல்வம் ஒருவரைவிட்டு நீங்குதலும், கூத்து முடிந்ததும் கூட்டம் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.


நம்மிடம் இருக்கும் செல்வம், எப்போதும் நம்மிடத்தே இருக்கும் என்று எண்ணிக்கொள்வது தவறு; செல்வம் நிலைக்கும் தன்மை உடையதன்று; எந்த நேரத்திலும் நம்மைவிட்டுப் போய்விடக்கூடிய ஒன்றாகும்.


குழாம் - கூட்டம், சபை
விளிந்து - அழிந்து, குறைந்து, இறந்து, கழிந்து, ஓய்ந்து, சினந்து, நாணமடைந்து, அவமானமடைந்து, வருத்தமடைந்து

-----------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 19. புறங்கூறாமை
குறள் எண்: 184



கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்.



கண் நின்று கண் அறச் சொல்லினும் சொல்லற்க
முன் நின்று பின் நோக்காச் சொல்.



விளக்கம்:


ஒருவர் கண் முன்னால் உள்ள போது, கண்ணோட்டம் இல்லாமல், அவரைப் பற்றிய குற்றம் குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; அவர் நேரில் இல்லாத போது பின்விளைவுகள் கருதாது, பின் அவர் முகத்தை எதிர்கொள்ள இயலாது போகும் அளவுக்கு அவரைப் பற்றிக் குறைகள் குற்றங்கள் கூறும் சொற்களைப் பேசுதல் கூடாது.

------------------------------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 52. தெரிந்து வினையாடல்
குறள் எண்: 512



வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
யாராய்வான் செய்க வினை.



வாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.



விளக்கம்:

பொருள் தேடித்தரும் வழிகளை முன்னிலும் அதிகமாகப் பெருக்கி, அதன் முலம் செயலாற்றுவதற்கான அதிக வளத்தை ஏற்படுத்தி, செயலாற்றும் வேளையில் வரக்கூடிய தடைகளைச் சரிவர ஆராய்ந்து, அவற்றை நீக்க வல்லவனே நன்கு செயலாற்றும் திறமையுடையவன்.

அரசன் இத்தகையவர்களைப் பணிக்கு நியமிக்க வேண்டும் என்று கூறும் முகமாக இத்திருக்குறள் அமைந்துள்ளது. பணியில் நாம் அமர்த்தும் ஒருவர்க்கு எத்தகைய தகுதிகள் இருக்க வேண்டும் என்று விளக்கப்படுகிறது.
படுத்து - பெருகச்செய்து, மேன்மையடைந்து, உண்டாகி, தோன்றி, பூத்து, மொய்த்து, அகப்பட்டு, பெய்து, அழித்து, மறைந்து, உடன்பட்டு, ஒத்து



Wednesday, December 14, 2011

தாம்பத்யம் தகிடுதத்தம்

பல சமுதாயப் ப்ரச்னைகள் நமக்குச் சவாலாக இருப்பது கால காலமாகத் தொடர்ந்து வருவதுதான். அரசியல், ஊழல், மதம், இனம், பற்றாக்குறை, கல்வி, வேலைவாய்ப்பின்மை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

தனி ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை முறைகள் அங்கே ஒன்று இங்கே ஒன்று என்று பிறழ்ந்து காணப்படும் நிலையும் நாம் நன்கறிவோம். ஆனால், சமீப காலமாக இது போன்ற பிறழ்வுகள்  பல தம்பதிகள் வாழ்வில் கண்கூடாகப் பார்த்து வருகிறேம்.

நம் சொந்தம், நட்பு வட்டம், தெரிந்தவர்கள் வாயிலாகக் கேட்பது என்பது சமீப காலமாக தம்பதியருக்குள் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கிறார்கள் என்பதாகும்.
 
  • பிள்ளை பெத்துக்க வீட்டுக்கு வந்தா...அப்புறம் புருஷன் வீட்டுக்குப் போகவே மாட்டேங்கிறா..
  • என்னை என் புருசன் கூட அனுப்பிச்ச உயிரோடவே பாக்க முடியாது.உங்களுக்கு நான் உயிரோட இருக்கணும்னா என்னை அங்கே போகச் சொல்லாதீங்க..
  • என் காலில் நிக்க என்னால் முடியும்...எனக்கு அந்த ஆள் தயவு தேவையில்லை.
  • என்னை அடிக்கக் கை ஓங்கிட்டு வர்ற அந்த ஆளுகூட நா குப்பை கொட்ட மாட்டேன்..உங்களுக்கு நான் இங்க இருப்பது கஷ்டமா இருந்தாச் சொல்லுங்க..நான் ஹாஸ்டலுக்குப் போறேன்..
  • அவளுக்கு என்ன அவ்ள திமிரு..புள்ளய வேணா வச்சுக்கட்டும்...வேணுங்கிறப்போ போய் நா பாத்துக்கிறேன்...
  • என்னை விட அதிகம சம்பாதிக்கிற திமிரு அவளுக்கு...அவள இங்க கூட்டிட்டு வந்தீங்கன்னா நா என் பிரண்ட் ரூமுக்கு போய்ருவேன்..

ப்ரச்னைகள் யாருக்குத்தான் இல்லை? அதை எதிர்கொள்கிற மனப்பான்மைதான் இன்றைய இளைய தலைமுறையினரிடம் குறைந்து கொண்டே வருவது போல் தோன்றுகிறது.


உண்மையான, தீவிரமான காரணங்களால் சகிப்புத்தன்மை இல்லாமல் பாதுகாப்பு கருதிப் பிரிதல் என்பது அவசியமான ஒன்றுதான்.

ஆனால் இன்று அன்றாட நிகழ்வுகளைக் கூடப் ப்ரச்னை என்று சொல்லி, என் பொம்மையை நீ உடைச்சிட்ட....உன் பொம்மையை நான் உடைக்காம விடமாட்டேன்..என்று குழந்தைத்தனமாக மனமுதிர்ச்சியில்லாமல் பிரிந்து வாழும் இவர்கள்....செய்வதறியாது திகைத்து நிற்கும் பெற்றோர் மற்றும் உறவினர்கள்....

எல்லா வகையிலும் எதார்த்தவாதிகள், So what? என்று பேசும் தன்மை, பெற்றோரின் அளவுக்கதிகமான செல்லம் அல்லது கண்டிப்பு, நீயா நானா என்கிற அகங்காரம், தனியாக வாழும் பலரை முன்மாதிரியாகக் கொள்ளுதல் என்று பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதில் காதல் திருமணம் புரிந்தவர்கள்..பல நாள் பேசிப் புரிந்து கொண்டு பின் திருமணம் செய்து கொண்டவர்கள் என்ற பெயர் வேறு...மாமியார் மாமனார் இல்லாத் தனிக்குடித்தனம் செய்பவர்களுக்கும் ப்ரச்னைதான்...வரதட்சணைத் தொல்லை போன்ற காரணங்கள் கூட இல்லை..


திருமண வாழ்வுக்கு ஆதாரமான, அடித்தளமான சகிப்புத்தன்மை, புரிந்து கொள்ளுதல், நட்பு உணர்வு எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான காதல் உணர்வு இல்லாமல் போனது....இப்படிக் காரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்...


சமீபத்துத் தமிழகப் பயணத்தின் போது திருமணமான தம்பதிகளை வாழ்த்தலாம் என்று அவர்களைப் பற்றி விசாரித்த போது,  விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்,  தனியாகப் பிரிந்து வாழ்கிறார்கள் என்று கேள்விப்பட அதிர்ச்சியாக இருந்தது...நண்பர்கள், தெரிந்தவர்கள் யார் வழியில் பார்த்தாலும் இந்த ரீதியில் ஏதாவது ஒரு கதை...

பயமாய் இருக்கிறது!!

குறளின் குரல்- 39

பால்: பொருட்பால்

இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 72. அவையறிதல்

குறள் எண்: 720

அங்கணத்து ளுக்க வமிழ்தற்றாற் றங்கணத்த
ரலார்முற் கோட்டி கொளல்.


அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர்
அல்லார் முன் கோட்டி கொளல்.


விளக்கம்:

நல்ல சான்றோர்கள், அறிவுத்திறனில் தம் இனத்தவர் அல்லாத பிறர் கூடிய அவையின் முன், ஏதாவது ஒன்றைப் பற்றிப் பேசுதல் எத்தகையது என்றால், கழிவுநீர் தேங்கியுள்ள தூய்மையற்ற முற்றத்தில் அமிழ்தினைக் கொண்டு வந்து கொட்டியதற்குச் சமமாகும்.

அவையில் உள்ளவர்களின் அறிவுத்திறனை அறிந்துகொண்டு, அவர்க்கு ஏற்பல்லாதவற்றைப் பேசாதிருத்தல் நலம்.

அங்கணம் - முற்றம், சேறு, சாக்கடை, இரு தூண் நடுவிடம், மதகு

உக்க - உகுத்த, சிந்திய, சிதறிய

கணத்தார் - கூட்டத்தார், ஊர்க்காரிய நிர்வாகிகள்

கோட்டி - பேச்சு, குழு, கூட்டம், சபை, துன்பம், பகடி, பைத்தியம், நிந்தை, அழகு, கோபுர வாயில், மனை வாயில், விகடக் கூத்து, ஒருவரோடு கூடியிருத்தல்
-------------------------
 
பால்: அறத்துப்பால்

இயல்: துறவறவியல்
அதிகாரம்: 27. தவம்
குறள் எண்: 261

உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை
யற்றே தவத்திற் குரு.


உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு.

விளக்கம்:

பொதுவாக, உடலுக்கு ஏற்படக்கூடிய இடர்களைத் தாங்கும் சக்தி, உண்ணா நோன்பு, காலநிலையின் மாறுபாட்டைத் தாங்கும் சக்தி, செயற்கரிய வித்தைகள் செய்யும், செய்விக்கும் சக்தி..முதலானவற்றைத் தவம் என்று போற்றுவது வழக்கம்.

ஆனால், திருவள்ளுவரின் தவம் குறித்த விளக்கம் முற்றிலும் மாறுபடுகிறது.

ஒருவன் தனக்கு வரக்கூடிய துன்பங்களை, தன் முயற்சியின் திறத்தால் தாங்கி எதிர்நோக்கக்கூடிய வல்லமை, பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாத தன்மை, தனக்குத் துன்பம் செய்த உயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல் - இவைதான் தவத்திற்கு உரு / வடிவம் / இலக்கணம் ஆகும் என்று விளக்குகிறார்.

நோய் - துன்பம், வருத்தம், பிணி, குற்றம், அச்சம், நோவு

நோன்றல் - பொறுத்தல், தள்ளல், நிலை நிறுத்தல், துரத்தல், தவம் செய்தல்

உறுகண்- துன்பம், வறுமை, நோய்

உரு - வடிவம், உருவம், உடல், தெய்வத்திருமேனி, நிரம், அச்சம், பலமுறை சொல்லுகை, தோணி, எலுமிச்சை, இசைப்பாடல், உருவம் உள்ளது.
 
-----------------
 
பால்: பொருட்பால்

இயல்: படையியல்
அதிகாரம்: 78. படைச்செருக்கு
குறள் எண்: 774

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.


கை வேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய் வேல் பறியா நகும்.


விளக்கம்:

போர்க்களத்தில், தன் கையில் இருந்த வேலைத் தன்னைத் தாக்க வந்த யானையின் மீது எறிந்து தாக்கிய வீரன், மேலும் அடுத்த தாக்குதல் பொருட்டு எறிவதற்காய் வேல் ஒன்றைத் தேடி நிற்க, தன் மேல் வீசப்பட்டுத் தன் மார்பில் பதிந்து கிடக்கும் வேலைக் கண்டு, தக்க சமயத்தில் தக்க கருவி கிடைத்துவிட்டதென்று எண்ணி, அதைப் பறித்துக் கையில் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியடைவான். மாபெரும் வீரனின் சிறப்பு இத்தகையது.

----------------
பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்
அதிகாரம்: 81. பழைமை
குறள் எண்: 801

பழைமை யெனப்படுவ தியாதெனின் யாதுங்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.


'பழைமை எனப்படுவது யாது?' எனின், யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

விளக்கம்:

'பழைமை' என்று சொல்லப்படுவது எது என்று கேட்டால், நீண்ட காலமாகப் பழகி வரும் நண்பர், நட்பின் உரிமை காரணமாக, ஏதாவது பிழையாகச் செய்து விட்டாலும் கூட, அதனைப் புரிந்து பொறுத்துக்கொண்டு, அந்த நட்பைக் கீழ்ப்படுத்தாமல் கைவிடாமல், சிதைக்காமல் தக்கவைத்துக்கொள்வதாகும்.

கிழமை - உரிமை, உறவு, நட்பு, ஆறாம் வேற்றுமைப்பொருல், குணம், முதுமை, வார நாள்

-------------------

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 62. ஆள்வினையுடைமை
குறள் எண்: 611

அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.


அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

விளக்கம்:

எந்த ஒரு காரியத்தையும் 'இது செய்யக்கூடியதன்று; செய்ய இயலாது' என்று தம்மைத் தாமே தாழ்த்திக் கொண்டு மனம் தளராமல், சோர்ந்து விடாமல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். ஏன் என்றால் முயற்சியுடைமை அதற்கேற்ற பெருமையை தப்பாமல் தரும். எப்படிப்பட்ட செயலையும் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி உண்டாக்கும்.

அருமை - கடினம், இன்மை, எளிதில் கிடைக்காதது, பெருமை

அசாவாமை - தளராமை
------------------
 
பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 60. ஊக்கமுடைமை
குறள் எண்: 597


சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.


சிதைவிடத்து ஒல்கார், உரவோர்; புதை அம்பின்
பட்டுப் பாடு ஊன்றும் களிறு.


விளக்கம்:

தன் உடல் முழுவதும் துளைத்துப் புதையுண்ட அம்புகளால் தைக்கப்பட்டு வலியால் துன்பப்படும்போதும், யானை தன் மன உறுதியில் தளராது எதிர்த்து நின்று தன் பெருமையை நிலைநிறுத்தும். அது போல் தாம் எடுத்துக்கொண்ட முயற்சிக்குக் கேடு வந்த போதும் ஊக்கமுடையவர் தளராது நின்று, தமது பெருமையை நிலைநாட்டி நிற்பர்.

ஒல்கார் - தளராதவர்

உரவோர் - ஊக்கமுடையவர், வலிமையுடையவர், மூத்தோர்

களிறு - யானை

குறளின் குரல்- 38

பால்: அறத்துப்பால்

இயல்: ஊழ் இயல்
அதிகாரம்: 36. ஊழ்
குரள் எண்: 376

பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
சொரியினும் போகா, தம.


பரியினும் ஆகாவாம், பால் அல்ல; உய்த்துச்
சொரியினும் போகா தம.

விளக்கம்:

ஒருவன் தனக்கு உரிமையில்லாதவற்றை எவ்வளவுதான் போற்றிப் பாதுகாத்தாலும், ஊழ் / விதி என்பதன் காரணமாக, அப்பொருள் அவனிடம் தங்காமல் போய்விடும். தனக்கு உரிமையானவற்றை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளினாலும், ஊழ் / விதி காரணமாய் அவை உரியவரை நீங்கிப் போகாது.
---------------------

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 46. சிற்றினம் சேராமை
குறள் எண்: 454

மனத்து ளதுபோலக் காட்டி யொருவற்
கினத்துள தாகு மறிவு.


மனத்து உளது போலக் காட்டி ஒருவற்கு
இனத்து உளதாகும் அறிவு.

விளக்கம்:

ஒருவருடைய அறிவு, வெளிப்படையாகப் பார்க்கும் போது, அவரது மனதில் உள்ளது போலத் தோன்றும். ஆனால், உண்மையில் அவர் சேர்ந்த இனத்தைப் பொறுத்தே அவரது அறிவாற்றல் அமையும்.

அறிவாற்றல் அவரவர் மனதில் இருந்துதான் வெளிப்படுகிறது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைதான். என்றாலும், அவர் சென்று சேரும் இனத்தின் குணநலத்தால், அவர் அறிவாற்றல் கூடவோ குறையவோ செய்கிறது என்பது எதார்த்தம். அவர் இனத்தைப் பொறுத்தே அவர் அறிவு அவர்க்கு நன்மையும், தீமையும் தரும்.

மனதில் உள்ள அறிவு, இப்படித்தான் இனம் சார்ந்த அறிவாகிறது.

இப்படித்தான், இயல்பாக நல்லறிவு இல்லாதவராய் இருந்தாலும், அவர் சேர்ந்த இனத்தின் நற்குணங்களால் அறிவாற்றல் பெற்று நன்மையடைவர்.

இன்னும் பலர் இயல்பாக நல்லறிவு பெற்றிருந்தாலும், அவர் சேர்ந்த இனத்தின் தீய தன்மையால் அறிவிழந்து மதிமயங்கி அவதிப்படுவர்.

நன்மைகள் அடைய நல்லவருடன் சேருங்கள்.

தீமைகள் அடையத் தீயவருடன் சேருங்கள்.

உங்கள் அறிவாற்றல் குறைந்திருந்தாலும், நல்லவர்களின் சேர்க்கையால் அது மிகுதியாகப் பெருகும்.

உங்கள் அறிவின் சிறப்புக்கூட, தீயவரின் சேர்க்கையால் ஒளி குன்றிப்போகும்.
---------------------------

பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்
அதிகாரம்: 94. சூது
குறள் எண்: 931

வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉந்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.


வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டில் பொன் மீன் விழுங்கியற்று.

விளக்கம்:

மீன் பிடிப்பதற்காகத் தூண்டிலில் வைக்கப்பட்ட இரை அளவில் மிகச் சிறியது, என்றாலும், அதனால் கவரப்பட்ட மீன்கள் தாமாகவே சென்று அந்த இரையை உண்ண எண்ண, தூண்டிலில் மாட்டிக்கொண்டு, தாமாகவே தம் முடிவைத் தேடிக் கொள்ளும்.

சூதாட்டத்தின் மூலம் சிறிய அளவில் பொருள் வந்தவுடனேயே, மேன்மேலும் அதைப் பெருக்க எண்ணி, அச்சூதாட்டத்திலேயே மீண்டும் மீண்டும் தன் உடைமைகளைப் பணயம் வைத்து ஆடுவார்கள். முடிவில் முற்றும் இழந்து அவதிப்படுவார்கள்.

சூதாட்ட வெற்றி, மீனுக்காகத் தூண்டிலின் இரும்பு முள்ளில் வைக்கப்பட்ட இரை போன்றது. ஆபத்து அறியாமல் இரைக்காகச் சென்று மாட்டிக்கொள்ளும் மீனைப் போல, பொருட்கள் அனைத்தையும் இழக்கப்போகும் ஆபத்து அறியாமல், மீண்டும் மீண்டும் வெற்றி பெறுவோம் என்று தவறாக எண்ணி உள்ள பொருள் அனைத்தையும் இழந்து நிற்பர்.

அதனால் வெற்றியே பெற்றாலும் கூடச் சூதாட்டத்தை விரும்பாமல் தவிர்க்க வேண்டும்.

பொன் - இரும்பு, தங்கம், மேருமலை, செல்வம், பொலிவு, பசலை, ஒளி, அழகு, ஏற்றம், திருமகள், வியாழன், சூரியன்
------------------------
 
பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்
அதிகாரம்: 79. நட்பு
குறள் எண்: 781

செயற்கரிய யாவுள நட்பி னதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.


செயற்கு அரிய யா உள, நட்பின்? அது போல்
வினைக்கு அரிய யா உள, காப்பு?

விளக்கம்:

நல்லதொரு நட்பினை உருவாக்கிக் கொள்தல் போன்ற செயற்கரிய சிறந்த செயல் உலகில் யாது உள்ளது? எந்த ஒரு செயலுமில்லை.

எந்த ஒரு காரியத்துக்கும் பாதுகாப்பாகவும், துணையாகவும் நிற்கக்கூடிய அத்தகைய நட்பைப் போன்ற சிறந்ததொரு, கிடைத்தற்கு அரியதொரு பாதுகாப்பு இவ்வுலகில் யாது உள்ளது? ஏதுமில்லை.

நல்லதொரு நட்பு வாய்ப்பதென்பது எளிதன்று. எல்லோர்க்கும் வாய்க்கக்கூடியதும் அன்று. அப்படி ஒரு நட்பு வாய்க்கையில், அது போல நம் காரியங்களுக்குப் பாதுகாப்பாக, துணையாக வரக்கூடியது, கைகொடுத்து உதவக்கூடியது வேறு ஏதுமில்லை.
-------------------------
 
பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்
அதிகாரம்: 93. கள்ளுண்ணாமை
குறள் எண்: 929

களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று.


களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ் நீர்க்
குளித்தானைத் தீத் துரீஇயற்று.


விளக்கம்:

மது அருந்திக் களித்து மகிழ்ந்து பழகிப்போய்விட்ட ஒருவனை, 'அது தீயது' என்று பல்வேறு காரணங்களை எடுத்துக்காட்டித் தெளிவித்தல், குளத்தின் நீருக்கு உள்ளே போய் மூழ்கிக் குளிக்கின்றவனைத் தீப்பந்தம் ஏந்தித் தேடுவதற்கு ஒப்பானது.

குளத்தின் நீர்ப்பரப்பில் நின்று குளிப்பவனைத் தீப்பந்தம் பிடித்துத் தேடுதல் எளிது. ஆனால், குளத்திற்குள் மூழ்கிக் குளிப்பவனைத் தேடுகிறவனும் மூழ்கித் தேட வேண்டும். மூழ்கியவுடனேயே ஒளியிழந்து பயனற்றுப்போகும் தீப்பந்தம்.

நீருக்கு அடியில் தீப்பந்தத்தின் ஒளிமிகு சுடரும் செயலிழந்து போகும்;

போதைக்கு அடிமையானவன் முன் எடுத்துவைக்கப்படும் நியாயமான காரணங்களும் வலுவிழந்து போகும்.

மதுவின் பழக்கம் அளவுடன் இருக்கும் போது உரிய காரணங்கள் எடுத்துக்கூறித் திருத்துவது சற்றே எளிதான செயலாக இருக்கக் கூடும். ஆனால், அப்பழக்கத்தில் அளவுக்கு அதிகமாய் மூழ்கி, அந்த மகிழ்ச்சியில் / போதையில் திளைத்தவனுக்குக் கூறப்படும் அறிவுரையும், எடுத்துக்காட்டும் காரணங்களும் பயனற்றவை. மதுப்பழக்கம் அளவுக்கு அதிகமாகப் பழகிவிட்டால் திருத்துதல் மிகவும் கடினமாகும்.
---------------------

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 63. இடுக்கண் அழியாமை
குறள் எண்: 622

வெள்ளத் தனைய யிடும்பை யறிவுடையா
னுள்ளத்தி னுள்ளக் கெடும்.


வெள்ளத்து அனைய இடும்பை, அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.

விளக்கம்:

வெள்ளம் போல் பெருகி வரும் துன்பம் அனைத்தும், அறிவுடைய ஒருவன் அத்துன்பங்களைக் கடத்தல் எளிது என்று மனதில் உறுதியுடன் நினைத்த உடனேயே அழிந்து போகும்.

அறிவுடையவன் மனதில் உறுதி உடையவன் ஆகிறான்; உறுதி கொண்டவுடன் நன்கு செயலாற்றும் தன்மை பெற்றுவிடுகிறான்; அத்தகையவனுக்குத் துன்பங்கள் ஒரு பொருட்டல்ல.

Sunday, December 11, 2011

சொல் மயக்கம்

வான வில்லின்
வண்ணங்கள் 
வகைபிரியும்
ஏதோவோர் இழை

நீலக்கடலும்
நீலவானும்
நீளச் சந்திக்கும் கோட்டின்
ஏதோவொரு புள்ளி

முதல் அலையை
முன்னேறும் அலை
முத்தமிட்டுச் செல்லும்
ஏதோவொரு துளி

உனக்குள்ளும்
எனக்குள்ளும்
வெடித்துச் சிதறும்
காதல் பூகம்பத்தின்
ஏதோவொரு துகள்

அனுபவங்களால் மட்டுமே
நுகரப்படுவதாய்...
புலன்களுகெல்லாம்
புலப்படாத புதிராய்..

சொல்லத் தெரியவில்லை;
சொல்லித் தெரிவதில்லை.

முயன்று தோற்று
முடங்கி மடங்கி
மயங்கிப் போகின்றன
சொற்கள்.