Friday, April 25, 2008

நிறைமதி காலம்


ஒரு கொடியில்
இரு மலர்கள்

ஒரு கருவில்
இரு சிசுக்கள்

ஒன்று ஆணாய்
ஒன்று பெண்ணாய்
இருந்தால் என்ன
இரண்டும் ஒன்றல்லவா?

ஒன்றுக்குக் கள்ளிப்பால்
ஒன்றுக்குச் சுண்டக் காய்ச்சிய
கள்ளிச் சொட்டாய்ப் பால்;
ஒன்றுக்கு எருக்கம்பால்
ஒன்றுக்கு எருமைப்பால்.
இருபால் என்பதால்
இரு வேறு பால் விதிகள்?!

சுமந்திடும் மாதக்கணக்கு
சுரந்திடும் பால்க்கணக்கு
படித்திடும் செலவுக் கணக்கு
கேளிக்கையின் கழிவுக் கணக்கு

உணர்வுகளின் உயிர்மை
உணர்ச்சிகளின் புணர்ச்சி
உய்யும் வழிமுறை
எய்தும் வகைதொகை
எட்டும் உயரங்கள்
கொட்டும் எண்ணங்கள்
இருபாலர்க்கும் பொதுமையன்றோ?
இரண்டுக்கும் பேதம் காண்பது
இருமுறை வடிகட்டிய
பேதைமையன்றோ?!

ஆணென்றால் வரவாம்,
பரம்பரை வளர்க்கும் வாரிசாம்;
பெண்ணென்றால் செலவாம்,
அடுத்த வீட்டு வாரிசு
சுமக்கும் சுமைதாங்கியாம்.

இரண்டாம் நூற்றாண்டு வழக்கு
இரு பத்து இரு நூறில்
இன்னும் எதற்கு?

அர்த்தநாரித் தொழுகை
ஆலயங்களில்
இருபால் பேதங்கள்
இல்லங்களில்
இரட்டை வேடம்
பூணும் மனசாட்சி
சற்றே மாறினால்
முற்றும் மாறும்
சமுதாயக் காட்சி.

மாறித்தான் வருகிறது
மனதின் காட்சி
மலர்ந்துதான் வருகிறது
சமதள ஆட்சி.
மாறி வரும் மனங்கள்
ஆறி வரும் ரணங்கள்..

மாற்றுப் பாதையில்
வீறு கொண்டு
நிமிரத் தொடங்கிய
நிகழ்காலம்
எழுந்து நிற்கும்
எதிர்காலம்.

இரண்டு கண்ணில்
இரண்டு காட்சி
இரட்டை நிலை
ஏது இன்றைக்கு?
இரண்டும் சமமாகி
இரண்டறக் கலந்து
இயையும் இயல்பு நிலை
காலக் கண்ணாடி
காட்டிடும் நமக்கு.
(வ.வா சங்கத்தின் போட்டிக்கான இரண்டாவது படைப்பு..)

Friday, April 18, 2008

நதியொன்று விதி தேடி..


ஒரு நதி
இரண்டு பங்கீடு

இரண்டு பக்கமும்
இடிவாங்கும் மிருதங்கமாய்
மத்திய அரசு

இரட்டைத் தலைவலியுடன்
இருமாநில அரசு..
மக்கள் நலம்(?!) ஒரு பக்கம்.
கட்சி நலம் மறு பக்கம்.
நாணயத்தின் இரண்டு பக்கம்.

இரட்டை வேடம்
இரு மொழி நடிகர்க்கு..
வாழ வைக்கும் தமிழர்
சொந்த மண்ணின் சொந்தங்கள்
இரண்டு பேரிடமும் நல்ல பெயர்
இரண்டு பத்து ஆண்டுக்காவது
இன்னும் வேண்டும்.

இரண்டு பக்கமும்
திரைப்படங்கள்
வெற்றிவாகை சூட வேண்டும்.
அதற்காகவாவது
இரட்டை வேடமிட்டு
இரண்டு மனதை ஒன்றாக்கி
இரட்டை நாக்கில்
இரட்டிப்பு இரட்டிப்பாய்
வசனம் பேச வேண்டும்.

இருபக்க விவசாயத் தோழர்தான்
இருதலைக் கொள்ளி எறும்பு..
நம்பி விதைப்பதா
நம்பிக் கெடுவதா..
இரட்டைக் குழப்பம்.

மொத்தத்தில் இவ்வழக்கில்
இரு மாநிலத்தின்
இருவேறு தீர்ப்பும்
இப்படியிருந்தால்
எப்படியிருக்கும்?

மழை பெய்கையில்
அணைக்கு இந்தப்பக்கம்
இரட்டைத் தாழ்..

மழை பொய்க்கையில்
அணைக்கு அந்தப்பக்கம்
இரட்டைத் தாழ்..

இரட்டை நிலை மாற
இன்னும் நூற்றாண்டு
இரண்டாவது கழிய வேண்டும்.
அதுவரை காவிரி
இருபக்கமும் அலைபாய்ந்து
விவசாயம் காக்க வேண்டும்.

உலகப் பொறி

விடம் பூசிய அமுதம்
விரலசைத்து அழைக்கப்
பொறியின் இரை தேடி
இரையாகிற எலி.
மரண பயமற்றுச்
சிறை பயமுற்று
விடமுண்டு மரிக்கும்.
பொறியில் சிக்கியே
சடுதியில் மரணிக்கும்.

முலாம் பூசிய
முகவரி தேடி
முகவரி தொலைத்து
வழி தவறி
வலி பெருக்கிச்
சுயநலத் தேடலில்
சுயம் தொலைத்து
பெற்றது இழந்து
இழந்தது பெற்று..




கண்டு கேட்டு
உண்டு ரசித்து
மயங்கி மயக்கி
உருகி உருக்கி
உய்யும் பொருட்டு
உழன்று சுழன்று

உலகப் பொறியில்
உருளும் மனித மனம்
இரை தேடி இரையாகி
மரண பயமுற்றுச்
சிறை பயமற்று
விடமுண்டும் வாழும்.
பொறியில் சிக்கியே
அனுதினம் மனரணம்
மரணிக்கும் வரை
அகமகிழ்ந்து ஏற்கும்.

Monday, March 31, 2008

யார் பித்தன்?

இன்றைக்குக் கொஞ்சம் லேட்டாகிவிட்டது..அய்யோ பஸ் போயிருக்குமோ என்னவோ..அந்த ஆரப்பாளையம் நேர் பஸ்ஸை விட்டு விட்டால் பெரியார் பெருந்து நிலையம் போய் மறுபடியும் வேறு பஸ் பிடித்துப் போவதற்கு நேரமிருந்தாலும், கனகாவுக்கு என்னவோ அது பிடிப்பதில்லை. இதில் போனால் சீக்கிரமாகவே பள்ளிக்குப் போய்விடலாம். அரக்கப் பரக்க ஓட வேண்டிய அவசியமிருக்காது.

வீட்டில் புறப்படும் போது ஒலிக்க ஆரம்பித்த "காதலின் தீபமொன்று" பாடலை நின்று கேட்டு ரசிக்க நேரமில்லை..பருத்திப் புடவை மடிப்புகளைச் சரிசெய்யவென்று 5 நிமிடம் அதிகம் நேரம் ஒதுக்கிய அவகாசத்தில் ஒலித்திருக்கக்கூடாதா அந்தப் பாடல்..காலில் செருப்பைப் போடும் போது ஒலிக்க ஆரம்பித்தது..முனை டீக்கடையில் "..பொன்னிலே பூவையள்ளும் புன்னகை மின்னுதே.."மனதுக்குள் வரிகளை ரசித்தபடி வேக நடை போட்ட கனகாவின் கால்கள் பேருந்து நிறுத்தத்தை நெருங்கியதும் தன்னிச்சையாகத் தயங்கின.

இன்றும் அவன் வருவானோ? அய்யோ..தூரத்தில் இருந்தபடிப் பார்வையை நாலாபுறமும் சுழலவிட்டாள்..நல்லவேளையாகஅவன் அறிகுறி எதுவும் தென்படவில்லை..இதோ சுந்தரமூர்த்தி மாமாவும் வந்துவிட்டார்..அவருக்கும் அதே பஸ்தான்..

"என்னம்மா இன்னிக்கு லேட் போலருக்கே?"

"ஆமாம் மாமா." கடையில் ஒலித்த.."என்னை நான் தேடித்தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்.."பாடலை ரசித்துக் கொண்டே இருக்கையில் அவன் அதோ வந்து விட்டான்..நாக்கு சட்டென்று மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. பயத்துடன் சுந்தரமூர்த்தி அருகில் நெருங்கி நின்று கொண்டாள் கனகா. "வந்துட்டானா" என்று வரவேற்கத் தயாரான முணுமுணுப்புகள் அங்கங்கே..நின்றிருந்த ஒன்றிரண்டு பள்ளிப் பிள்ளைகளும் கனகா போலவே பயந்தனர்.

அவனுக்கு வயது 15 இருக்கும். சற்று மீறிய வளர்ச்சி..மன நலம் சரியில்லாதவன்..
பூக்காரம்மாவின் பையன். பூ வியாபாரம் முடித்து அந்தம்மா இரண்டு மூன்று வீடுகளில் வேலை செய்து பிழைத்து வந்தார். கணவன் இறந்துவிட, இருக்கும் ஒரே பிள்ளையும் இப்படி.

அந்தம்மா அப்படிப் போனதும் இவன் இப்படி வருவது வாடிக்கையான ஒன்றுதான். சில நேரம் அவன் பாட்டுக்கு அமைதியாய் நிற்பான். அல்லது நடந்து கொண்டேயிருப்பான். சிலநேரம் அங்கே இருக்கின்றவர்களிடம் வம்பு செய்வான். காசு கேட்பான்,கொடுத்ததும் வாங்கிக் கொண்டு போய்விடுவான். ஆனால் சமீப காலமாகப் பெண்களைப் பார்த்தால் அசிங்கமான சைகைகள் புரிவது வழக்கமாகிவிட்டது..தர்மசங்கடத்தில் நெளிய வேண்டிய தருணங்கள்..

என்றைக்குத் தான் மாட்ட போகிறோமோ என்ற பயம் கனகாவுக்கு..

பயத்தைப் புரிந்து கொண்டவராய் சுந்தர மூர்த்தி மாமா, " பயப்படாதேம்மா..ஒன்றும் செய்ய மட்டான் " என்று கூறியும் சமாதானமாகவில்லை..ஏதாவது நடந்து விட்டால் எவ்வளவு அசிங்கம்..என்ன இந்த பஸ் இன்னும் வரவில்லையே என்று பார்க்குப் போது, ஒரு வழியாக அன்று சற்றுத் தாமதமாக வந்து சேர்ந்தது பஸ்.

அப்பாடா தப்பித்தோம் என்று பஸ் ஏறி வழக்கமான இடத்தில் உட்கார்ந்தாள் கனகா. என்ன இருந்தாலும் அந்த அம்மா இவனை இப்படி விட்டு விடுப் போகக் கூடாது. என்றைக்கு என்ன செய்வானோ என்ற பயத்துடன் எத்தனை நாள் இருக்க முடியும்..அந்தப் பையன் மீது கோபம் வந்தது..

அம்மாவிடம் சொன்னபோது அம்மா சிரித்தார்கள்.
"பசங்களுக்குப் பாடம் சொல்லிக் குடுக்குற நீயே பயப்பட்டா எப்படி.."

அதுவும் சரிதான். அதற்காகப் பயம் இல்லாத மாதிரி நடிக்க வேண்டுமானால் முடியும். பயம் இல்லாமல் இருக்க முடியுமா என்ன?

சரியான கிறுக்கன்..கனகாவுக்குக் கோபம் கோபமாய் வந்தது. இப்படிப் பொறுப்பில்லாமல் வெளியே அந்தப் பையனை அனுப்பிய அவன் அம்மா மீது..அவன் நினைவே எரிச்சலை மூட்ட இதே போல் எத்தனை நாள் போகுமோ என்று எண்ணியபடி பள்ளியை அடைந்தாள். வேலைப்பளுவில் சற்றே மறந்தாலும் ஒவ்வொரு காலையிலும் இம்சை தருகின்ற அந்தத் தருணங்கள் மனதின் ஓரம் வந்து வந்து போயின.

அன்று சாயந்திரம் அதே பஸ்ஸில் வீடு திரும்புகையில், அவள் கண்முன் கண்ட காட்சி மனதைப் பற்றியெரிய வைத்தது. அவ்வளவு அதிகமாகக் கூட்டமில்லை. சற்று முன் நின்று கொண்டிருந்த பள்ளிச் சிறுமியின் மீது சாய்வதும், பின் விலகுவதுமாகப் போக்குக் காட்டிக் கொண்டிருந்த நடுத்தர வயது மனிதரைக் கோபத்துடன் வெறித்தாள் கனகா. தற்செயலாக நடப்பது போல் காட்டிக் கொண்டாலும், அந்தப்பாவியின் வக்கிரபுத்தி பார்த்த மாத்திரத்தில் உரைத்தது. அந்தச் சிறுமி பாவம், நகர்ந்து சென்றாலும் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்தது அந்த ஜடம்.

ஏதோ ஒரு படத்தில் யாரோ சொன்ன வசனம் நினைவுக்கு வந்தது. "இப்பல்லாம் வயசுப்
பசங்கள விடப் பெரிசுககிட்டதான் ஜாக்கிரதையா இருக்கணும்."

இருக்கையில் இருந்து எழுந்த கனகா அந்தச் சிறுமியிடம் சென்றாள்.

"இங்கே உட்கார்ந்துக்கோம்மா. நான் இறங்கப் போகிறேன்."

"தேக்ஸ் அக்கா." என்றபடி சிறுமி நகர்ந்தாள். அங்கே நின்ற கனகா பார்வையால் அந்த ஆசாமிக்குச் சவால் விட, நெளிந்து குழைந்தார் ஆசாமி. அடுத்த நிறுத்தம் வர, இறங்க வேண்டுமோ அல்லது பயமோ இறங்கிப் போனது அந்த ஜென்மம்.

ஏனோ கிறுக்கனின் முகம் கண்முன் வந்தது. இந்த வக்கிர நடத்தையை அவன் திடீரென்றுதானே தொடர்கிறான்..யாரோ ஒரு விஷமிதான், வக்கிரபுத்திக்காரன் தான் இதைச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். பஸ்ஸில் பார்த்த ஆசாமிக்கும் சித்தம்
சுவாதீனமாகவே இருக்க, அவன் என்ன பித்தனா? கிறுக்கனுக்குச் சைகை செய்யச் சொல்லிக் கொடுத்த ஆசாமிக்கும் மன நலம் நன்றாகவே இருக்க..அவன் பித்தனா? இல்லை எதுவும் புரியாமல் பித்தன் என்று பெயரைச் சுமக்கும் சிறுவன் பித்தனா? யார் பித்தன்?

நாலாபுறமும் இழுத்துப் பிடித்துக்கொண்டு முறுக்கேறிய தசைநார்கள் நொடியில் இறுக்கம் தளர்ந்து இலகுவாக...சட்டென்று ஒரு நெகிழ்வு பிரவகித்தது மனதில். பெரியப்பா மன நல மருத்துவர்தானே. அந்தப் பையனைக் கூட்டிக் கொண்டு போய் அவரைப் பார்த்தால் என்ன? முதலில் அவன் அம்மாவை பார்த்துப் பேச வேண்டும். சுந்தர மூர்த்தி மாமா இந்நேரம் வந்திருப்பார். அவருக்குதான் அவன் வீடு தெரியும். ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணியவளாய் சுந்தரமூர்த்தி வீடு நோக்கி நடக்கலானாள் கனகா. மனதில் இனம் புரியாத அமைதி நிலவியது.

Monday, March 17, 2008

ரசனை மாற்றம் Vs கருத்து வேறுபாடு Vs பலப்பரிட்சை

இட்லிக்கு எந்தச் சட்னி பிடிக்கிறது என்று சமையலில் தொடங்கி சகலமும் ரசனைகளின் அடிப்படையில்தான்..ஏதோவொன்றின் மீது ஏற்படும் பிடித்தம் அல்லது ஈடுபாடு அளவுக்கதிமாகும் போது ரசனையாதல் இயல்பு. இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை.

பள்ளிப் பருவத்தில் ரஜினி - கமல், ஸ்ரீதேவி - ஸ்ரீப்ரியா/ரத்தி, யேசுதாஸ் - எஸ்.பி.பி , சுஜாதா - பாலகுமாரன், பாலசந்தர் - பாரதிராஜா ... இது போல் பல விஷயங்களுக்காகவும் கட்சி கட்டிக் கொண்டு செய்த வாக்குவாதங்கள், சண்டைகள்..இதெல்லாம் ரசனையா என்ற அற்பத்தனமான விஷயத்துக்கும் அடாவடியாய்ச் சண்டைகள்..ஒரு முறை வாக்குவாதம் தீவிரமாகி ஒரு தோழியுடன் சில நாட்கள் பேசாமல் இருந்ததெல்லம் நினைத்தால் சிரிப்பாக வருகிறது. வேலைகள்/கவலைகள் அதிகமில்லாத காலத்தில் இப்படியிருப்பது இயல்புதான்.

எப்போதும் வேறுவிதக் கவலையில் இருக்கும் உயர்தர வகுப்பினருக்கு இந்தப் பலப்பரிட்சைகள் விவாதங்கள் என்ற பெயரில் அவசியமில்லை. காரியத்தில் மட்டுமே கண். எப்போதும் வயிற்றுப்பாட்டைப் பற்றிய கவலையில் உழலும் அடித்தட்டு மக்களுக்கு இதெல்லாம் பொருட்டே இல்லை. நடுவில் ஊசலாடும் வர்க்கத்திடம்தான் அதிகம் கூச்சலும், குழப்பமும்.

இவையெல்லாம் தனி மனித விருப்பத்தைப் பொறுத்த ரசனை மாற்றங்கள். கொள்கைப் பிடிப்புக்காய் மாறும் ரசனைகளும் பல உண்டு.

திரைப்படம்/தொலைக்காட்சி/பத்திரிகை - இந்தத் துறைகளை எடுத்துக்கொண்டால் மக்கள் ரசனைக்காகத் தருகிறோம் என்ற பெயரில் வகை வகையான ரசனைகள் வரிசைப்படுத்தப் படுகின்றன.ஆனாலும் இங்கேயும் கருத்து வேறுபாடுகள், நீயா நானா போட்டிகள், பலப்பரிட்சை..

மதம் - கேட்கவே வேண்டாம். இதில் ரசனைக்கு இடமில்லைதான். பல சமயம் பிறப்பால், சில சமயம் சுய தேர்வால் ஏற்படுகின்ற ஒரு விஷயம். கொள்கைகளின் அடிப்படையில் ஏற்படும் வேறுபாடுகள் மனிதருக்கு மனிதர் மாறுவதை இங்கும் காணலாம். ஈடுபாடு இல்லாதவர்க்கும் கருத்து வேறுபடு என்ற பெயரில் வாக்குவாதங்களுக்குக் குறைவில்லை. ஆன்மீகத்துக்குப் பல முகமாகிப் போக மதங்கள் மனிதனைக் காப்பாற்றுவதை விட, மனிதன் வரிந்து கட்டிக் கொண்டு மதங்களைக் காப்பாற்ற வேண்டிய பரிதாப நிலை.ஆனாலும் இங்கேயும் கருத்து வேறுபாடுகள், நீயா நானா போட்டிகள், பலப்பரிட்சை..

அரசியல் - இதிலும், பதவிகளில் இருப்பவர்கள், கட்சித் தலைவர்கள் கூட எல்லா விஷயங்களிலும், எல்லா நேரங்களிலும் அதே முக்கியமான கொள்கைப் பிடிப்பிலிருந்து விலகாமல் நிற்கிறார்களா என்பது சந்தேகமே. தலைவர்கள் இப்படியென்றால் தொண்டர்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆனாலும் இங்கேயும் கருத்து வேறுபாடுகள், நீயா நானா போட்டிகள், பலப்பரிட்சை..

இப்படி ஒவ்வொரு துறையிலும் ரசனை மாற்றங்கள்..கொள்கைப் பிடிப்புகள் கருத்து வேறுபாடுகளாக உருவெடுத்து போட்டியிலும், பலப்பரிட்சையிலும் தொடர்ந்து..ஒரு முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.

ஆனால் அடுத்தடுத்து வரும் இளைய தலைமுறைக்கு இதற்கான ஈடுபாடு இவ்வளவு ஆழமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. அன்று தொலைக்காட்சி, கணினி எல்லாம் ஏது? இன்றுள்ள சாதனங்கள் பல வேண்டவே வேண்டாம் என்று துரத்த முடியாத அளவுக்கு நம் வீடுகளில் அழுத்தமாய் வந்து அமர்ந்துள்ளது. இன்றைய வளர்ந்து வரும் குழந்தைகளின் பார்வையில் பலவிதமான செய்திகள், துறைகள்,சவால்கள்....
ஒவ்வொன்றுக்கும் ரசனை வளர்த்துக் கொள்வதற்கே நேரமில்லாத போது,கருத்து வேறுபாடுகளும், பலப்பரிட்சைகளும் சற்று பலவீனப்பட்டுப் போகின்றன.

இவர்களின் விவாதங்கள்..ஈடுபாடு இருந்தாலும் / இல்லாவிட்டாலும் இந்த ரீதியில்தான் இருக்கும்..அடுத்தவர் மீது தன் கருத்தைத் திணிப்பதாக இருக்காது என்றே தோன்றுகிறது.

நபர் 1: எனக்குக் கவிதையே பிடிக்காது. (இருந்துட்டுப் போகட்டும்.)
நபர் 2: எனக்குக் கதையே பிடிக்காது.(இருக்கட்டும்.)

நபர் 1: பின் நவீனத்துவம் எனக்குப் புரிவதில்லை.(புரிய வேண்டாம்.)
நபர் 2: மொக்கை எனக்குப் பிடிப்பதில்லை.(ஏன் பிடிக்கணும்?)

நபர் 1: இந்த மதம்தான் சரியானது.(இருக்கட்டும்.)
நபர் 2: இல்லை. இந்த மதம்தான் சரியானது.(இருந்துட்டுப் போகட்டும்.)
நபர் 3: கடவுளே இல்லை..இருக்கிறார் என்பவன் முட்டாள்.(இருந்துட்டுப் போகட்டும்.)
நபர் 4: கடவுளே இல்லை என்று சொல்லும் நீ தான் முட்டாள்.(அதுனால் என்ன குறைஞ்சு போச்சு?)

நபர் 1: அஜீத் தான் எங்க தல..சூப்பரா கலக்குறாரு..(வச்சுக்கோ)
நபர் 2: இளைய தளபதிதான் என் சூப்பர் ஸ்டாரு..(வச்சுக்கோ)

நபர் 1: எங்க கட்சித் தலைவருக்குதான் நல்ல எதிர்காலம்...வலுவான கொள்கைப்பிடிப்பு..(நல்லா இருக்கட்டும்)
நபர் 2: அதெல்லாம் தலைவர் காலத்துக்கப்புறம் பாப்போம்..என்ன நடக்குதுன்னு..(நல்லாப் பாரு..)
நபர் 3: புதுத் தலைமைதான் தமிழ்நாட்டுக்குத் தேவை..திராவிடம் போதுமப்பா..(புதுசுதான் வந்துட்டுப் போகட்டுமே.என்ன போச்சு?)
நபர் 4: எந்தப் பழைய கட்சியும் வேணாம்ப்பா..ரசிகர் மன்றக் கொடிகள்தான் கட்சிக்கொடியா வரணும்...நாம் நல்லா உருப்படணும்னா..(நல்லா உருப்பட்டுக்கோ..)

நபர் 1: தங்கமனிகளுக்குதான் அதிகம் கஷ்டம்.(அப்படியா?)
நபர் 2: காலத்துக்கும் ரங்கமணிக்குதான் கஷ்டமோ கஷ்டம்.(அய்யோ, அப்படியா)

இப்படி அடைப்புக் குறிக்குள்ள இருக்கிற மனோபாவம் இன்றைய குழந்தைகளிடம் / வளர்ந்து வரும் தலைமுறையிடம் கொஞ்சம் காண முடிகிறது. அஜீத், விஜய்க்காக சண்டை போடுகிற பள்ளிப்பிள்ளைகள் இன்று பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. ஏதோ புதுப்படம் வெளிவரும் சமயம்..சில கூத்துகள் மட்டும் இன்றும் தொடர..நடிகர்கள்தான் ரசிகர்களை விடப் படங்களில் ஒருவரை ஒருவர் அதிகம் தாக்கிப் பேசுகின்றனர்.

பழையது பிடிக்காது..ஆனாலும் தவிர்க்க முடியாது என்று ரீ மிக்ஸ் கலாசாரத்தைத் திரைத்துறையில் புகுத்தியது போல்..வேண்டியவற்றை, வேண்டிய முறையில் தேர்ந்தெடுக்கும் பக்குவம் இவர்களிடம் நிறையவே உள்ளது.

பலப்பரிட்சையென்ற பெயரில் அர்த்தமில்லாத விவாதங்கள் அளவுக்கு இந்த விஷயங்களைக் கொண்டுபோகாத இந்த இளைய தலைமுறையினர் நம்மைக் காட்டிலும் எதார்த்தவாதிகள்தான்.

Friday, March 14, 2008

காவியப்பாவை ஜீவிதம்

இளவேனில் தினத்துக்கு நின்னை
இணைமொழிய இயலாதன்றோ?
நின் எழில்மென்மை நல்நளினம்
வேனிலினும் வனப்பன்றோ!

சித்தம்கவர் சித்திரைப்பூ மொட்டுகளை
மெத்தனமாய் அளைந்து செல்லும்
வேனிற்தென்றல் அழுத்தமானது;
வேனிலின் வாழ்நாளோ
குத்தகையில் கொஞ்சம் குறைந்திட்டது.

கணப்பொழுது வானின் கண்ணது
சுடர்விட்டுப் பொலிந்திடும்.
மறுகணமே தன் தங்க நிறம்
மங்கலுற்று மயங்கிடும்.

எழிலார்ந்த எந்தவொன்றும்
எழிற்கோலம் சற்றே பிறழ்ந்திடும்.
விதிவசத்தால் சில பொழுது,
வழிமாறாது சென்றிடும்
இயற்கையால் சிலபொழுது.

எனினும் நின் எழில்வேனில்
என்றென்றும் மங்கிடாது,
தனியழகின் தன்மையதனை
ஒருபோதும் இழந்திடாது.

காலத்துக்கும் வாழும்
காவியத்தின் வரிகளில்
வளர்ந்து வரும் நின்னழகை
மரணதேவனும் தன் நிழலில்
வசப்படுத்தல் இயலாது.

மனிதனவன் சுவாசிக்கும் காலம்வரை
கண்களது காட்சிகள் காணும்வரை
இந்தக் கவிதையும் வாழ்ந்திருந்து
நின்னையும் வாழவைக்கும்.

ஷேக்ஸ்பியரின் Sonnet - 18ன் மொழிபெயர்ப்பு முயற்சி/பயிற்சி..
ஏற்கனவே செய்த இந்த முதல் முயற்சி திருப்தியில்லாததால் மீண்டும்...

ஆங்கிலத்தில்:

Shall I compare thee to a summer's day?
Thou art more lovely and more temperate:
Rough winds do shake the darling buds of May,
And summer's lease hath all too short a date:
Sometime too hot the eye of heaven shines,
And often is his gold complexion dimmed,
And every fair from fair sometime declines,
By chance, or nature's changing course untrimmed:
But thy eternal summer shall not fade,
Nor lose possession of that fair thou ow'st,
Nor shall death brag thou wander'st in his shade,
When in eternal lines to time thou grow'st,
So long as men can breathe, or eyes can see,
So long lives this, and this gives life to thee.

Thursday, March 13, 2008

நீ மரணித்தும் உயிர்த்திருப்பாய்!




இனியவளே!
உன்னை
இளவேனில் தினத்துக்கு
இணையாக்கிப் பாடவா?


நீ அதனினும்
அழகானவள்,
மென்மையானவள்..
நளினமானவள்..

மனம் கவரும்
மே மாத
மலர் மொட்டுகளைச்
சற்றே வீம்பாக
அளைந்து போகும்
அழுத்தமான தென்றல்..
(உன் மென்மைக்கு இணையாகுமா?)

இம்மண்ணில்
வேனில் பருவத்தின்
குத்தகை தினங்கள்
மிகவும் குறைவுதானே.
(உன் அழகு அப்படியா?)

சில பொழுது சுடுவெயிலால்
தங்கப் பொலிவுடன் தகதகக்கும்
வானத்தின் கண்கள்
பல பொழுது மேகமூட்டத்தால்
மங்கித்தான் போகும்.

விபத்தால் சில பொழுது,
மாற்றம் எழுதிச்செல்லும்
இயற்கையின் விளைவால்
சில பொழுது..
எந்தவொரு அழகுமே தன்
அழகு நிலையிலிருந்து
தாழும்..சரியும்.

அன்பே,
உன் அழகு இளவேனில்தான்.
எனினும் என்றென்றும்
மங்கி மறையாத இளவேனில்.

மரண தேவனும்
தன் நிழற்பரப்பினுள்
உன்னை வலித்திழுக்க முடியாது.
உன்னை வசப்படுத்தியதாக
வனப்புமொழி பேசி
எக்காலமும் எக்காளமிட முடியாது.

ஏனெனில் என்னவளே!
நீ மரணித்தும் உயிர்த்திருப்பாய்..
என்றும் வாழும்
என் கவிதையின் வரிகளில்
என்றென்றும் நீ வாழ்ந்திருப்பாய்..
காலங்கள் கடந்தும் உயிர்த்திருப்பாய்..

இப்பூவுலகில்
மனிதனின் சுவாசம் உள்ளவரை
கண்களில் பார்வைகள் உள்ளவரை
என் கவிதையும் வாழ்ந்திருக்கும்..
உன்னையும் உன் அழகையும்
என்றென்றும் வாழ வைத்து
என் கவிதையும் வாழ்ந்திருக்கும்!

(ஷேக்ஸ்பியரின் Sonnet-18 ன் மொழிபெயர்ப்பு முயற்சி/பயிற்சி)

(இதில் அவ்வளவு திருப்தியில்லாததால்
காவியப்பாவை ஜீவிதம் பதிவில் மீண்டும் ஒரு முயற்சி)

ஆங்கிலத்தில்:

Shall I compare thee to a summer's day?
Thou art more lovely and more temperate:
Rough winds do shake the darling buds of May,
And summer's lease hath all too short a date:
Sometime too hot the eye of heaven shines,
And often is his gold complexion dimmed,
And every fair from fair sometime declines,
By chance, or nature's changing course untrimmed:
But thy eternal summer shall not fade,
Nor lose possession of that fair thou ow'st,
Nor shall death brag thou wander'st in his shade,
When in eternal lines to time thou grow'st,
So long as men can breathe, or eyes can see,
So long lives this, and this gives life to thee.